23. மணிமேகலை

ஊரெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வணிகர்கள் முதல் வறியவர்கள் வரை அனைவரும் கோவலன் மாதவியின் இல்லத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்
23. மணிமேகலை

ஊரெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வணிகர்கள் முதல் வறியவர்கள் வரை அனைவரும் கோவலன் மாதவியின் இல்லத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அங்கு நடைபெறும் விருந்தினில் பங்கெடுத்துக் கொள்ளவும், நடைபெறவிருக்கின்ற ஆடல் பாடல்களைக் கண்டுகளிக்கவும், கோவலன் தன் துணை மாதவியோடு செய்து கொண்டிருக்கும் தான தர்மங்களை பெறுவதற்கும் என கூட்டம் அலைமோதி அவர்கள் இருந்த மாளிகையை முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது. அட! எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம். அப்படி என்ன நடந்துவிட்டது கணிகையான மாதவியின் வீட்டில்!!

கோவலன் தன் தர்மபத்தினி கண்ணகியை துறந்து மாதவியிடம் வந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. கணிகையானாலும் மாதவியும் கற்பில் சிறந்தவள். கோவலனைத் தவிர வேறு எந்த ஆடவரையும் நாடாதவள். அவர்களின் இல்லறத்தின் பயனாக உருவான குழந்தைக்குத்தான் வெகு விமரிசையாக அன்று பெயர் சூட்டுவிழா நடந்து கொண்டிருந்தது. விருந்துகளும் கேளிக்கைகளும் உற்சாகமாக நடந்து கொண்டிருந்தன. தன் காதலியாக ஒரு கணிகையை வரித்துக் கொண்ட போதும் கோவலன் அவளை தன் பத்தினியாகவே பார்த்தான். அதன் காரணமாகவெ தர்மங்களை தான் மட்டும் தனித்து வழங்காமல் அவளுடன் சேர்ந்தே கொடுக்கிறான்.

சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன் கோவலனின் மனைவி கண்ணகி. கோவலனின் காதலி கணிகையர் குலத்தைச் சார்ந்த மாதவி. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த குழந்தையே மணிமேகலை. மணி மேகலை- மரக்கலம் உடைந்து, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தன் முன்னோர்களில் ஒருவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது ‘மணி மேகலா தெய்வம்’, அந்த தெய்வத்தின் மீதுள்ள பக்தியின் காரணமாகத் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ‘மணிமேகலை’ எனப் பெயர் சூட்டினான் கோவலன்.

குழந்தை மணிமேகலை சீரும் சிறப்புமாக வளர்ந்து கொண்டிருக்கிறாள். அழகுப் பதுமை மாதவியின் மகள் அல்லவா! மகள் தாயையே விஞ்சும் அளவிற்குப் பேரழகுடன் திகழ்கிறாள். பொருள் ஈட்ட வேண்டி மதுரை சென்ற கோவலன் அங்கு சிலம்பு களவாடிய பொய் குற்றத்திற்காக தண்டனை பெற்று உயிர் துறக்கிறான். கோவலனின் மறைவுக்குப் பின் மாதவி மிகவும் துயருருகிறாள்.  கோவலனுக்காக மட்டுமே ஆடிய பாதங்களும் பாடிய பாடல்களும் மற்றவர் முன் அரங்கேற்ற மாதவிக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பகாலத்திலிருந்தே கோவலனும் மாதவியும் தங்கள் மகள் மணிமேகலையை கணிகைப் பெண்ணாக வளர்க்க விரும்பவில்லை. அவளை கோவலனின் குலவாரிசாகவே கருதினார்கள்.

அதனாலேயே கோவலன் மற்றும் கண்ணகியின் துயர மறைவிற்கு பிறகு, மாதவி பொதுவாழ்விலிருந்தும் கலைப்பணியிலிருந்தும் தன்னை மொத்தமாக விடுவித்துக் கொண்டாள். தன்னுடைய பழைய வாழ்வை எக்காரணம் கொண்டும் தானும் தொடரா வண்ணம் தன் மகள் மணிமேகலை மீதும் அதன் சாயை சிறிதும் படராத வண்ணம் வளர்க்க சித்தமாகிறாள். தன் செல்வங்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தையும் போதி மரத்தின் கீழ் அறவண அடிகள் முன்னர் தானம் செய்து துறவறம் ஏற்கிறாள். புத்த மடம் ஒன்றில் தன் மகளைச் சேர்த்து வளர்த்து அவளையும் துறவறத்தில் ஈடுபடுத்துகிறாள்.

பூம்புகாரில் இந்திரா விழா நடைபெறுகிறது. இந்திர விழாவில் நாடக மடந்தையரின் ஆடலும் பாடலும் சிறப்பு வாய்ந்தவை. மிக முக்கியத்துவம் பெற்றவையும் கூட. இந்த ஆண்டு மாதவியின் மகள் அழகுப் பதுமை  மணிமேகலையின் நடனத்தையும் பார்க்க நகர மக்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் குலத்தொழிலை விட்டுவிட்டு துறவரம் பூண்டு இருவரும் பௌத்த விஹாரத்தில் இருப்பதை குறித்து ஊர் மக்கள் பழி பேசுகின்றனர். 

ஊர் பழிக்கவே, மாதவியின் தாயான சித்ராபதி, மாதவியின் தோழி வசந்தமாலையை அழைத்து ஊர்ப் பழியைக் கூறி மாதவியை அழைத்து வருமாறு கூறுகிறாள். ஊர்பழியைத் தீர்க்க வசந்தமாலை மாதவி மணிமேகலை இருவரையும் இந்திர விழாவிற்கு வருமாறு பலவிதமாக வேண்டுகிறாள். ஆனால் மாதவி தான் கொண்ட ஒழுக்கத்தையும் மணிமேகலையின் உறுதியையும் விளக்கிக் கூறுகிறாள். இனிமேற் கொண்டு எந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும், இனி தங்களது வாழ்வு புதிய பாதையில் செல்லப் போவதையும் மாதவி உறுதிபடக் கூறுகிறாள். தான் ஒருவேளை பத்தினி என்கிற பிறப்பிற்குரியவளாக இல்லாதிருக்கலாம்; ஆனால் தந்தையின் பத்தினி என்கிற வகையில் கண்ணகி மணிமேகலையின் தாயாகிறாள். எனில் அவளும் எப்படி இத்தீத்தொழிற்குரியவள் ஆவாள் என்றொரு நியாயத்தையும் மாதவி முன்வைக்கிறாள்.

காவலன் பேரூர் கனையெரி ஊட்டிய

மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை …

(மணிமேகலை காப்பியம்-ஊர் அலர் உரைத்த காதை, 54-57)

என்று உரைப்பதன் மூலம் மணிமேகலை தன் மகள் மட்டுமல்ல அவள் பெரும் பத்தினியான கண்ணகியின் மகளும் என்கிறாள்.  மணிமேகலையை ‘மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள்’ என்று சொல்வதன் மூலம் மணிமேகலையின் வாழ்வுப் போக்கின் திசையைத் தெளிவாக உணர்த்தி வசந்தமாலையை திருப்பி அனுப்புகிறாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மணிமேகலையின் கண்கள் ஆறாகப் பெருக்கெடுக்கிறது. தன் தாய்க்குத் தான் எத்தனை இன்னல்கள், பெரிய தாய் கண்ணகிக்கும் தந்தைக்கும் நேர்ந்த கொடுமையான முடிவை எண்ணி மாய்ந்து போகிறாள் மணிமேகலை. அவளை திசை திருப்பும் பொருட்டு, உவவனம் என்ற சோலைக்குச் சென்று பூக்கள் சேகரித்து வரச் சொல்லி அனுப்புகிறாள் மாதவி.

சோலையில் அவள் எப்போது வருவாள் என்று காத்துக் கிடக்கிறான் அந்நாட்டு இளவரசன் உதயகுமாரன். மணிமேகலையின் மீது தீராக் காதல் கொண்டவன் அவன். மணிமேகலையின் நெஞ்சமும் அவன் பால் செல்கிறது. ஆனால் தானும் தன் தாயும் எடுத்துக் கொண்டுள்ள துறவு வாழ்க்கையில் காதலை நுழைக்க அவளால் முடியவில்லை. ஏன் தன்னுள்ளம் அவனிடம் செல்கிறது என்ற கேள்விக்கும் அவளிடம் விடையில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவனை கடந்து அலட்சியப்படுத்தி சென்று விடுகிறாள் மணிமேகலை. அப்போது இந்திர விழாவினைக் காண வந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் நிலையை அறிந்து கொள்கிறது. மணிமேகலையை உதயகுமாரனிடம் இருந்து காப்பாற்ற, மணிமேகலா தெய்வம் உவவனத்திலிருந்து முப்பது யோசனைத் தூரம் வான் வழியாக எடுத்துச் சென்று மணிபல்லவம் என்னும் தீவில் சேர்ப்பித்து விட்டுச் செல்கிறது. அங்கே அவள் முற்பிறப்பு உணர்த்தப்படுகிறாள். புத்த பீடிகையை வணங்கும் பேறு பெறுகிறாள்.

முற்பிறப்பில் அசோதர நாட்டு மன்னன் ரவிவன்மனுக்கும் அவன் மனைவி அமுதபதி என்பவளுக்கும் லஷ்மி என்னும் மகளாகப் பிறந்திருந்தாள் மணிமேகலை. செல்வச் செழிப்புடனும் வனப்புடனும் வளர்ந்த லஷ்மி தனது மனதுக்குப் பிடித்த ராகுலனை திருமணம் செய்து கொள்கிறாள். இனிமையான இல்லறம் தொடர்கிறது. ஆனால் காலன் பாம்புருவில் வந்து ராகுலனை தீண்டி அவன் இறந்து விடுகிறான். கணவனது சிதையில் தானும் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள் லஷ்மி. இளவரசன் உதயகுமாரனே முற்பிறவியில் அவள் கணவன் ராகுலனாக இருந்திருக்கிறான். அதனாலேயே தன் மனம் அவன் பால் சென்றது என்பதை உணர்கிறாள்.

மேலும் மணிமேகலா தெய்வம் அவளுக்கு, அவள் விரும்பும் வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும்,  வான்வழி பயணிக்கும் மந்திரத்தையும் அருளியது. மணிமேகலை அங்குள்ள கோமுகிப் பொய்கையை வலம் வந்து வணங்குகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில் வந்து சேர்கிறது. அமுதசுரபியுடன் அவள் பூம்புகார் நகரை அடைகிறாள்.

அமுதசுரபியில் முதல் பிட்சையாக கற்பில் சிறந்த பெண்ணிடமே பிட்சை பெற வேண்டும். அப்பெண்ணிடம் பிட்சை பெற்ற பிறகே அமுதசுரபி வற்றாது உணவளிக்கும் செயல் திறத்தை வெளிப்படுத்தும். புத்த பிக்குணி வேடம் அணிந்து நகரத் தெருக்களில் பிட்சை பெறச் செல்கிறாள் மணிமேகலை. ஆதிரை என்ற கற்பில் சிறந்த பெண் முதல் பிட்சையிட்டதும் அந்த ஓடு வறியோருக்கு ஈயும் தன்மையுடைய அமுதசுரபியாகச் செயல்படத் தொடங்கியது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் கணவனுடன் இந்திர விழாவைக் காண காடு வழியே வந்து கொண்டிருந்த போது முனிவர் ஒருவர் பறித்து வைத்திருந்த நாவற்கனியை மிதித்து விட்டாள் காயசண்டிகை என்பவள். அக்கனி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கனியைத் தரும் நாவல் மரத்தில் உண்டானது. அம்முனிவர் அக்கனியை பன்னிரண்டு ஆண்டுகள் விரதமிருந்து உண்பவர். அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் அம்மரத்தின் கனியை உண்ணும் வழக்கமுடையவர். அக்கனியை காலால் மிதித்துவிட்டதால் அவரால் அதை உண்ண முடியவில்லை. அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அவர் பசியுடன் இருக்குமாறு காயசண்டிகை செய்துவிட்ட குற்றத்திற்காக, அவளுக்கு யானைத்தீ எனும் தீராப்பசி தோன்றுமாறு சாபம் அளித்துவிட்டார்.

காயசண்டிகையின் தீராப் பசியை தன் அமுதசுரபியின் ஒரு பிடி உணவு கொடுத்து தீர்த்து வைத்தாள் மணிமேகலை. புத்த பிக்குணி வேடத்தில் மணிமேகலை மறுபடியும் நகரம் வந்திருப்பதை அறிந்த இளவரசன் உதய குமாரன் அவள் பின்னே மீண்டும் சுற்றத் தொடங்கினான். தன்னால் அவன் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றுணர்ந்த மணிமேகலை, மணிமேகலா தெய்வம் தனக்கு அருளிய மந்திரத்தை பயன்படுத்தி காயசண்டிகையின் உருவம் எடுத்தாள்.

அதையும் கண்டு கொண்டுவிட்ட உதயகுமாரன் அவள் பின்னால் காதல் பித்து பிடித்து அலைய, காயசண்டிகையின் கணவன் உண்மை அறியாமல் தன் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற உதயகுமாரனை வாளால் வீழ்த்திவிடுகிறான். தன் மகன் இறப்புக்கு மணிமேகலையே காரணம் என்று அவளை அந்நாட்டு அரசன் சிறையில் அடைத்து துன்புறுத்துகிறான்.

அரசியோ புத்திர சோகத்தால் புத்தி இழந்து மணிமேகலையை எவ்வகையில் எல்லாம் துன்புறுத்த முடியுமோ அத்தனை வகையிலும் துன்புறுத்துகிறாள். கணிகை குலமகள் தானே அவள் என அவள் கற்பை சிதைக்கும் விதத்தில் ஆண்களை அவள் சிறைக்கு அனுப்பி வைக்கும் அளவு அவளது மனம் பேதலித்து விட்டிருந்தது. அத்தனையும் பொறுத்துக் கொண்டு தன் நிலை மாறாமல் நிற்கிறாள் மணிமேகலை.

தன்னுடைய கொடுஞ் செயல்களால் மணிமேகலை எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள் அரசி.  மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள்.  காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள்.

பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள். 

‘ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை

மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே’

பொருள்: பசியைப் பொறுக்க முடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி. அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம்  உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம்.

இதையே தன் அறமாக வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கிறாள் மணிமேகலை.

அங்கிருந்து காஞ்சி நகரம் சென்றதும் தன்னுடைய பொய்யான வேடத்தைக் களைந்து அப்போது காஞ்சிநகரில் இருந்த அறவண அடிகளைக்  கண்டு வணங்குகிறாள். அங்கு அறவண அடிகள் அவளுக்கு அறநெறிகளைப் போதித்து முழுமையான புத்த பிக்குணியாக மாற்றுகிறார். காஞ்சி நகரில் இருந்தபடி மணிமேகலை ஒரு முழுமையான புத்த பிக்குணியாக மாறி மக்களுக்கு அறநெறிகளைப் போதிக்கிறாள்.

முடிவில் ‘என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள். மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

பல ஆச்சரியங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் மணிமேகலை, கணிகையர் குலத்தில் பிறந்த பெண்ணாயினும், பிறவியால் தொழிலும், வாழ்வும் நிர்ணயிக்கப்படும் ஒரு சமூக அமைப்பில் அந்தச் சமூக நியதியை வெல்வதோடு, எதிர்கொள்ளும் எல்லாத் தடைகளையும் கடந்து இறுதி உய்வின் ஒரு முக்கிய படியாகிய துறவு நிலையைச் சென்றடைகிறாள்.

இசைக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com