அழகிய முதல் முன்மாதிரி

அவர் ரொம்ப சாதாரணமான மனிதர். அவர் ரொம்ப அசாதாரணமான மனிதர். என்ன முரணாகத் தெரிகிறதா?

வர் ரொம்ப சாதாரணமான மனிதர். அவர் ரொம்ப அசாதாரணமான மனிதர். என்ன முரணாகத் தெரிகிறதா? ஆமாம். முரண்தான். ஆனால், இது வரலாற்றின் முரணழகு.  அவர் அப்படித்தான். அவரைப் பற்றி என்னால் வேறு எப்படியும் விவரிக்க முடியவில்லை. அவரைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டீர்களென்றால் நான் சொன்னது சரிதான் என்பதை ஒப்புக்கொள்வீர்கள்.

உண்ணுவது, உடுப்பது, நடப்பது, பேசுவது என அன்றாட அலுவல்களைப் பொருத்தமட்டில் அவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்தான். நம்மைப்போலவே தலை வாரிக்கொள்வார், தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொள்வார். நடுத்தர உயரம். பார்க்க மிகவும் அழகானவர். நடையில் சுறுசுறுப்பு இருக்கும். பரபரப்பு இருக்காது. பிடித்த உணவை உண்பார். பிடிக்காததை வைத்துவிடுவார். ஆனால், எந்த உணவையும் அவர் குறை சொன்னதில்லை. இன்னும் சொல்லப்போனால், தன் வாழ்நாளில் ஒருமுறைகூட மூன்றுவேளையும் அவர் வயிராற உண்டதில்லை. அவர் உணவும் நம்முடையதைப்போல ‘வெரைட்டி’யானதல்ல. காய்ந்த ரொட்டி, பேரீச்சம் பழங்கள், ஆட்டுப்பால் – இவைதான் அவரது வழக்கமான உணவு. அவரது போர்வையில்கூட பல இடங்களில் கிழிந்து, ஒட்டுகள் போடப்பட்டிருக்கும்.

ஆனால், நம்மைப் போன்றவர்களால் செய்யமுடியாத பல அரிய சாதனைகளை அவர் செய்து காட்டினார். ரோமாபுரிச் சக்கரவர்த்திகளுக்கும் பாரசீகப் பேரரசர்களுக்கும்கூட கிடைக்காத மரியாதையும் கண்ணியமும் அவருக்குக் கிடைத்தது. இரண்டு உதாரணங்கள் மூலம் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அவர் தலையில் பதினான்கு வெள்ளை முடிகளுக்கு மேல் இல்லை என்று அவருடைய தோழர்கள் கூறினர்! அவருடைய வாழ்க்கையை அப்படியே ‘வீடியோ’ எடுத்த மாதிரி தோழர்கள் உன்னிப்பாகக் கவனித்து எழுதியும் சொல்லியும் வைத்தனர்.

ஒருமுறை அவருடைய மனைவிகளில் ஒருவரான உம்மு ஹபீபாவைப் பார்க்க அவருடைய தகப்பனார் அபூ சுஃப்யான் என்பவர் வந்தார். அவர் அரேபிய நாட்டுக் குறைஷிக்கோத்திரத் தலைவர்களில் ஒருவர். குறைஷிக்கோத்திரமோ, நம் கட்டுரை நாயகரின் பரம எதிரியாக இருந்தது. ஆனால் வேடிக்கை என்னவெனில், அப்பாவும் மகளும் எதிரெதிர் அணியில்! மகளைப் பார்க்க வந்தவர், அங்கு இருந்த ஒரு இருக்கையில் அமரப்போனார். அவ்வளவுதான். உடனே அந்த இருக்கையை உருவிய உம்மு ஹபீபா, “என் கணவர் அமரும் இருக்கையில் அமரும் தகுதி உங்களுக்கு இல்லை” என்று கோபமாகக் கூறினார்!

அவ்வளவு மரியாதை கொடுக்கப்பட்ட அவர் யார்? அவர் பெயரென்ன? இருக்கட்டும், சொல்கிறேன். இப்போதைக்கு ‘புகழப்பட்டவர்’ என்று வைத்துக்கொள்வோம். ஏனெனில், அரபி மொழியில் அவரது பெயரின் அர்த்தம் அதுதான்!

போர்க் கைதிகளின் நிலை

போர் என்று வந்தால் அதில் தோற்றவர்களும், அவர்களின் பொருள்களும் வெற்றிபெற்றவர்களின் உடமையாகிவிடும். போர்க்கைதிகள் பொதுவாக கொல்லப்படுவார்கள். அல்லது அடிமைகளாக வைத்துக்கொள்ளப்படுவார்கள். அல்லது சித்திரவதை செய்யப்படுவார்கள். தலையை வெட்டுதல், உள்ளுறுப்புகளை வெளியில் எடுத்தல், சில கருவிகளின் மூலம் உடலுறுப்புகளின் அளவைக் குறைத்தல், விரல்களை வெட்டுதல், நகங்களைப் பிடுங்குதல், கண்களைக் குருடாக்குதல், மர்ம உறுப்புகளைச் சிதைத்தல் – இப்படிச் சித்திரவதைகளின் பட்டியல் தொடர்கிறது, வரலாற்றின் பக்கங்களில்.

முஸ்லிம்களுக்கும் குறைஷிகளுக்கும் பத்ர் என்ற இடத்தில் ஒரு போர் நடந்தது. இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் யுத்தம் அது. அது ஒரு தற்காப்பு யுத்தம். தங்களைத் தாக்க வந்த குறைஷிகளோடு முஸ்லிகள் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எதிரிகள் ஆயிரம் பேருக்கு மேல் இருந்தனர். ஆனால், முஸ்லிம்களோ வெறும் 313 பேர்தான் இருந்தனர். ஆனால், இறுதியில் முஸ்லிம்கள் வென்றனர். அன்று மட்டும் அவர்கள் வென்றிராவிட்டால், அந்த அதிசயம் நடந்திராவிட்டால், இன்று உலகில் முஸ்லிம்கள் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இறைவன், முஸ்லிம்களுக்கு அன்று வெற்றியைக் கொடுத்தான். முஸ்லிம்களின் பக்கம் பதினான்கு பேர் உயிரிழந்தனர். எதிரிகள் எழுபது பேருக்கு உயிரிழப்பு. போர்க் கைதிகளாகவும் எழுபது பேர் இருந்தனர். அவர்கள் எல்லோருமே முஸ்லிம்களை ஜென்ம விரோதிகளாக எண்ணி வெறுத்தவர்கள்.

அவர்களை என்ன செய்யலாம் என்று புகழப்பட்டவர் தன் ஆத்ம நண்பர்களான உமரிடமும், அபூபக்கரிடம் கேட்டார். அவர்களைக் கொன்றுவிடலாம் என்று கூறினார் உமர். அவர் எப்போதுமே அப்படித்தான். அதற்கு அவர் சொன்ன காரணம் ரொம்ப தர்க்கரீதியானது. நாம் தோற்றிருந்தால் நம்மை அவர்கள் நிச்சயம் கொன்றிருப்பார்கள் என்றார். அது சரிதான். என்றாலும் கொல்லவேண்டாம், பிணயத்தொகை பெற்றுக்கொண்டு விடுதலை செய்யலாம் என்று அபூபக்கர் கூறினார். அவர் ‘கேரக்டர்’ அப்படி. புகழப்பட்டவர் எப்போதுமே மன்னிப்பையே தேர்ந்தெடுத்தார். தொகையைப் பெற்றுக்கொண்டு போர்க் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பிணயத்தொகை சுமார் 1000 திர்ஹம் (வெள்ளிக்காசு) முதல் 4000 திர்ஹம் வரை இருந்தது. பெரும் வசதி படைத்தவர்கள் தங்கள் உறவினர்களை மீட்க அதிகமாகவும் கொடுத்தனர்.

இதுவே உலக வரலாற்றில் ஒரு புதுமைதான். ஏனெனில் உலகெங்கிலும் மதங்களின் பெயரால் நடத்தப்பட்ட யுத்தங்களிலும் போராட்டங்களிலும் அநியாயமாக மக்கள் கொல்லப்பட்டனர். கும்பல் கும்பலாக, கூட்டம் கூட்டமாக. உதாரணமாக ஃப்ரான்ஸ் நாட்டில் கத்தோலிக்கர்களுக்கும் ப்ராடஸ்டன்ட்டுகளுக்கும் இடையே இருந்த வெறுப்பின் காரணமாக, அரசு உதவியுடன், அரசு உத்தரவுடன் ப்ராடஸ்டன்டுகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என்று எதையும் பாராமல். அதுவும், இரவோடு இரவாக! அவர்களின் எண்ணிக்கை 5000 முதல் 70,000 வரை இருந்ததாகக் கூறப்படுகிறது! இது நடந்தது ஆகஸ்ட் 23 - 24 இரவு, 1572-ம் ஆண்டு! ‘புனித பார்தலோமியா நாள் படுகொலை’ என்று வரலாற்றில் இது அறியப்படுகிறது!

ஆனால், பத்ரில் நடந்தது என்ன? மன்னிப்பு. கருணை. கைதிகளில், புகழப்பட்டவரின் சிற்றப்பா அப்பாஸ், மருமகன் அபுல் ஆஸ் போன்றோரும் இருந்தனர். ஆனால், சொந்தக்காரர்கள் என்பதற்காக அவர்களுக்கு எந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. மற்ற போர்க் கைதிகளைப் போலவே அவர்களும் நடத்தப்பட்டார்கள். கைதிகளை அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும் என்று புகழப்பட்டவர் உத்தரவு கொடுத்திருந்தார். அதன்படியே போர்க் கைதிகள் நடத்தப்பட்டார்கள். கைதியாக இருந்த அபூ அஸீஸ் என்பவர் கூறுகிறார்: “மதினாவில் இருப்பவர்களுக்கு இறைவனின் ஆசி உண்டாகட்டும். எங்களை (ஒட்டகம் போன்ற) வாகனங்களின் மீது ஏற்றிவிட்டு அவர்கள் நடந்து வந்தார்கள். கோதுமை ரொட்டியை எங்களுக்குக் கொடுத்துவிட்டு அவர்கள் வெறும் பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டார்கள்”.

சுஹைல் இப்னு அம்ர் என்ற கைதியைப் பணம் கொடுத்து விடுதலை செய்ய அவரது உறவினர் வந்தார். ஆனால், சுஹைலை அப்படியே அனுப்ப உமருக்கு இஷ்டமில்லை. “தலைவரே, எனக்கு உத்தரவிடுங்கள், நான் சுஹைலின் பற்களையாவது பிடுங்க வேண்டும். அப்போதுதான் அவன் உங்களைப் பற்றி தவறாகப் பேசாமல் இருப்பான்” என்று கூறினார். அதற்கு, புகழப்பட்டவர் என்ன கூறினார் தெரியுமா?

“எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாருடைய உறுப்பையும் சிதைக்கமாட்டேன். அதற்கு அனுமதியும் கொடுக்கமாட்டேன். அப்படிச் செய்தால் அதையே இறைவனும் எனக்குச் செய்வான்” என்று கூறினார்!

இந்த விஷயத்தை ஆரம்பகால வரலாற்றாசிரியரான இப்னு ஹிஷாமிலிருந்து ஜார்ஜ் சேல், வில்லியம் முய்ர் போன்ற மேற்கின் வரலாற்றாசிரியர்கள் அனைவருமே குறிப்பிடத் தவறுவதில்லை. காரணம், உலக வரலாற்றில் இது போன்றதோர் அதிசயம் வேறெங்கும் நடந்ததில்லை!

ஆனால், விசேஷம் இங்கே முடிந்துவிடவில்லை. வரலாறு படைத்த வரலாறு இங்கேதான் தொடங்குகிறது பணம் தரமுடியாத ஏழைகள், ஒன்றுமே வாங்கிக்கொள்ளப்படாமலே விடுதலை செய்யப்பட்டனர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தால், ஒரு கைதி பத்து முஸ்லிம் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து தங்கள் விடுதலையைப் பெறலாம் என்றும் புகழப்பட்டவர் சொன்னார்! அதன்படியே செய்து விடுதலை பெற்றனர் சிலர்! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒருவர் யான் பெறாத இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஒரு அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். ஆம். புகழப்பட்டவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது!

வரலாற்றில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் புதிய பக்கம் இது. அதுவரை, ஏன் இதுவரையிலும்கூட, யாரும் செய்யாத புதுமை இது. எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தால், ஒரு போர்க் கைதி விடுதலை பெறலாம் என்று உத்தரவு போடப்பட்டு நிறைவேற்றப்பட்ட வரலாறு வேறு எந்த நாட்டிலாவது, எந்தக் காலத்திலாவது, எந்தக் கலாசாரத்திலாவது உண்டா? இது நடந்தது கிபி ஏழாம் நூற்றாண்டில்!

மக்கா வெற்றியின்போது நடந்தது என்ன?


இதுமட்டுமா? யுத்தக்களத்தில், வெற்றியின் உச்சத்தில், தன்னை வருத்திய எதிரிகள் மீது யாருக்காவது கருணை பிறக்குமா? பிறந்திருக்கிறது! புகழப்பட்டவர், மக்காவில் வாழ்ந்தது ஐம்பது ஆண்டுகள்.  மதினாவில் வாழ்ந்தது பதிமூன்று ஆண்டுகள். அவர் மக்காவில் இஸ்லாம் என்ற மார்க்கத்தை எடுத்துரைத்ததற்காக கொடுக்கப்பட்ட இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

ஓட ஓட அவரை விரட்டியிருக்கிறார்கள். ரத்தம் பீறிடும் அளவுக்கு கல்லால் அடித்திருக்கிறார்கள். அவர் தொழுதுகொண்டிருந்தபோது, அவர் முதுகில் செத்த ஒட்டகத்தின் அழுகிய குடலைப் போட்டிருக்கிறார்கள். அவரது கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். அவர் மீது பாறாங்கல்லைப் போட முயன்றார்கள். அவரது உணவில் விஷம் வைத்தார்கள். சாப்பாடு, தண்ணீர் கிடைக்காதவாறு மூன்று ஆண்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள். கருக்கலில், கோத்திரத்துக்கு ஒருவராக வாளை எடுத்துக்கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியில் வரும்போது கொல்ல முயன்றார்கள். விரட்டிக்கொண்டுபோய் கதையை முடிக்க முயன்றார்கள். அவரைப் பின்பற்றியவர்கள் ஏழைகள் என்பதாலேயே சித்திரவதை செய்தார்கள். பெண் என்றும் பாராமல், ஒரு அடிமைத்தாயின் குறியில் ஈட்டியைச் செலுத்திக் கொன்றார்கள். இப்படியாக, புகழப்பட்டவரை ஒழிக்க, அவருக்கு எதிராக மக்காவில் இருந்த குறைஷிகள் செய்த அட்டூழியத்தைப் பற்றி ஒரு நூலே எழுதலாம்.

எல்லாவற்றுக்கும் பழிதீர்க்கும் நேரம் ஒன்று வந்தது, புகழப்பட்டவருக்கு. அது உலக வரலாற்றிலேயே ஈடு இணையற்ற நிகழ்ச்சியாகும். இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. மக்கா வெற்றியின்போது, புகழப்பட்டவர் மக்கள் தலைவராக ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் இருந்தார். மதினாவிலிருந்து 10,000 பேருடன், குறைஷிகள் யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் மக்காவுக்குள் நுழைந்தார்.

எந்த நகரம் அவருடைய இறைச்செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்ததோ, எந்த நகரம் அவரையும் அவரது தோழர்களையும் சித்ரவதை செய்ததோ, அந்த நகரம் அன்று அவர் காலடியில் கிடந்தது. குறைஷிகள் போர் செய்வதற்குத் தயாராவதற்குக்கூட எந்த வாய்ப்பும் தராத வகையில், மக்காவினுள் நுழைந்தது புகழப்பட்டவரின் உண்மையான அமைதிப்படை.

யுத்த நியதிகளின்படி, அவருக்கும் அவரைப் பின்பற்றிய சமுதாயத்தினருக்கும் இழைக்கப்பட கொடுமைகளுக்கெல்லாம் நியாயமாக பழிக்குப் பழி வாங்க வேண்டிய நேரம் அதுவே. ஆனால், அவர் என்ன செய்தார்? க'அபாவினுள் ஒளிந்துகொண்டிருந்த குறைஷிகள், நிச்சயமாக கொல்லப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் உறைந்துபோயிருந்தனர். அப்போதுகூட அவருடைய இதயத்தில் அன்பும் பரிவும் நிறைந்து வழிந்து ஓடியது. வெற்றியின் அந்தத் தருணத்தில், இழைக்கப்பட்ட கொடுமைகளெல்லாம் மறக்கவும் மன்னிக்கவும் பட்டன.

“இன்று உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுதலையாகிவிட்டீர்கள். மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் வெறுப்பையும் நான் என் காலுக்குக் கீழே போட்டு நசுக்கிவிட்டேன். மனிதர்கள் அனைவரும் ஆதமின் பிள்ளைகள். ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்” என்று கூறினார். பொதுமன்னிப்பு வழங்குதல் என்பதே அவர் தொடங்கி வைத்ததுதான் என்றுகூடச் சொல்லலாம்.

‘ஆதம், மண்ணால் படைக்கப்பட்டவர்’ என்று சொன்னதன் மூலம் நீயும் மண், நானும் மண். மண்ணில் என்னடா உயர்வு தாழ்வு என்ற உண்மையைச் சொல்லாமல் சொல்லிவிட்டார் அவர்! ஜாதி, குலம், கோத்திரம் வழியாக வரும் உயர்வு, தாழ்வு எண்ணங்களுக்குக் கொடுக்கப்பட்ட செருப்படி அது.

ஒரு துளி ரத்தம்கூட சிந்தாமல், மக்கா வெற்றிகொள்ளப்பட்டது. அவர் விரும்பியிருந்தால், ஒருவரைக்கூட விடாமல், கொன்று குவிக்கப்பட்ட தலைகளால் மலைகளை ஏற்படுத்தியிருக்க முடியும். ஜனங்களை வெற்றிகொள்வதைவிட மனங்களை வெற்றிகொள்வதே இஸ்லாத்தின் முறையாக இருந்தது. இருக்கிறது. அப்படியானால், முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற கேள்வி எழலாம். ஒருவர் சரியான முஸ்லிமாக இருக்கும் பட்சம், அவரால் தீவிரவாதியாக இருக்கவே முடியாது. ஏனெனில், இஸ்லாம் அமைதியையும் சாமாதானத்தையும் மட்டுமே எடுத்துரைக்கிறது.

தீவிரவாதம் செய்பவர் தீவிரவாதி. அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்த மதத்துக்கும் அவரது செயலுக்கும் தொடர்பில்லை. எந்த மதமும் தீவிரவாதத்தையோ வன்முறையையோ செய்யுங்கள் என்று சொல்லவே இல்லை. மாறாக எல்லா மார்க்கங்களும் அன்பையே போதிக்கின்றன. ஆழ்ந்து கவனித்தால் இந்த உண்மை புரியும்.

இக்கட்டுரை நாயகர், புகழப்பட்டவர் யார் என்று இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆமாம். இஸ்லாம் என்ற மார்க்கத்தை பரிபூரணப்படுத்திய வரலாற்றின் அழகிய முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்) தான் அவர். முஹம்மது என்றால் ‘புகழப்பட்டவர்’ என்று பொருள். புகழப்பட்டவர் மட்டுமல்ல, என்றும் புகழப்பட வேண்டியவரும்கூட, அல்லவா?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com