இறப்போர் இல்லமும் இறவாப் புகழும்

அவள் ஒரு தொண்டுக்கிழவி. சாலையோரத்தில் கிடந்து செத்துக்கொண்டிருந்தாள். அவள் உடலை எறும்புகளும் எலிகளும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தன!

 

வள் ஒரு தொண்டுக்கிழவி. சாலையோரத்தில் கிடந்து செத்துக்கொண்டிருந்தாள். அவள் உடலை எறும்புகளும் எலிகளும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தன! ஆமாம். அவற்றை விரட்டவோ, தன் உடலை அசைக்கவோகூட முடியாமல் அவள் கிடந்தாள். அவள் உடலைப் பல்வேறு இடங்களில் அவை அரித்திருந்தன.

சாலையில் போவோரும் வருவோரும் அவளை, அவள் செத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டேதான் போனார்கள்.  ஆனாலும் அவளைக் கவனிக்க யாரும் முன்வரவில்லை. ஏன்? அவள் ஒரு அனாதை. அதுமட்டும்தான் காரணமா? இல்லை. இரக்கம், அன்பு, மனிதாபிமானம் --  இவற்றுக்கெல்லாம் மனிதர்களுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. அதுதான் முக்கியமான காரணம். இருக்கட்டும், அந்தக் கிழவி பிழைத்தாளா?

இல்லை. அவள் பிழைக்கவில்லை. ஆனால் நிம்மதியாகவும் அமைதியாகவும், கண்ணியத்தோடும் அவள் இறந்தாள்! எப்படி? அதுதான் அங்கே நடந்த அதிசயம். அது ஒரு புதிய வரலாற்றின் துவக்கம். இதற்குமுன் வரலாற்றில் அப்படி நடந்ததே இல்லை. ஏழைகள், அனாதைகள், தொழு நோயாளிகள், என்புருக்கி நோயாளிகள், பெற்ற தாய்மார்களால் குப்பைத்தொட்டியிலும், சாக்கடையிலும் போடப்பட்ட கைவிடப்பட்ட குழந்தைகள் – இப்படி பாவப்பட்ட ஜீவன்களுக்கெல்லாம் ஒரு விடிவுகாலம் பிறந்தது. அதற்குக் காரணம் ஒரு தேவதை. அந்த தேவதைதான் எறும்புகளும், எலிகளும் உண்டுகொண்டிருந்த அந்த கிழவிக்கு இரக்கம் காட்டியது.

யாரந்த தேவதை? மனித உருவில், நீலக்கரை போட்ட வெள்ளைப் பருத்திச் சேலை அணிந்திருந்த தேவதை அவர். ஆனால் பார்ப்பதற்கு அந்தச் சேலை நீளமான அங்கிமாதிரி இருக்கும். அதுதான் அந்த தேவதைப்பெண் அணிந்திருந்த எளிமையான உடை. அவர் எப்போதுமே அதைத்தான் அணிந்தார். கிழவியைப் பார்த்ததும் அவருள் கருணை பீறிட்டது. முடிந்தவரை எறும்புகளையும் எலிகளையும் துரத்திவிட்டு அந்தக் கிழவியை அப்படியே தூக்கிகொண்டார். நேராக அரசு மருத்துவமனைக்குச் சென்றார். கிழவிக்கு வைத்தியம் செய்யவேண்டும் என்று கூறினார். ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

’நீங்கள் வைத்தியம் செய்யும்வரை நான் இங்கிருந்து நகரப்போவதில்லை’ என்று மருத்துவமனை வாசலிலேயே கிழவியை மடியில் கிடத்திக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். ’என்னடா இது வம்பாப் போச்சே’ என்று மருத்துவமனையில் அக்கிழவிக்கு வைத்தியம் செய்தார்கள். அப்போது அக்கிழவி வைத்தியங்கள் செய்து காப்பாற்றப்படும் நிலையைக் கடந்திருந்தாள். இறந்துபோனாள். ஆனால் தன்மீதும் அன்பு காட்ட ஒரு ஜீவன் இருக்கிறது என்ற உண்மையை இறப்பதற்குமுன் உணர்ந்துகொண்டவளாக அவள் இறந்தாள்.

அக்கிழவியைத் தன் கைகளால் தூக்கிவந்த அந்த தேவதையின் பெயர் ஆக்னஸ். அவர் ஒரு கிறிஸ்தவக் கன்னிகாஸ்திரி. இப்படி நடுத்தெருவில் மனிதர்கள் செத்து மடிவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இறந்துகொண்டிருக்கின்ற நிலையில் உள்ள  மனிதர்கள் கண்ணியமான முறையில் இறக்கவேண்டும் என்று ஆக்னஸ் விரும்பினார். அதற்காக ஒரு இடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தார். நேராக அந்த மாநகரின் நகரமன்றத்துக்குச் சென்று நாள்தோறும் இப்படி செத்துக் கொண்டிருப்பவர்களைக் கொண்டுவந்துசேர்ப்பதற்கு ஒரு இடம் தேவை என்று கேட்டார். 

அப்போது நகரமன்றச் சுகாதார அதிகாரியாக டாக்டர் அகமது என்பவர் இருந்தார். நகரின் தென்புறத்திலிருந்த காளிகோயிலுக்கு அருகில் மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட ஒரு கட்டடம் இருந்தது. அதனை எடுத்துக்கொள்ள முடியுமா என்று அகமது கேட்டார். காளி கோயிலுக்கு வருபவர்கள் இளைப்பாறிச் செல்ல அந்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நோக்கத்துக்காக அது பயன்படவில்லை. குடிகாரர்களும், வீணர்களும் அரட்டை அடிக்கவும், சீட்டாடவும் இன்னபிற காரியங்களுக்கும் அதைப்பயன்படுத்தி வந்தனர்.

சகோதரி ஆக்னஸ் அந்தக் கட்டடத்தை ஏற்றுக்கொண்டார். தூய்மையான இதயம் என்ற பொருள்படும்படி ‘நிர்மல் ஹிருதய்’ என்று அந்த இல்லத்துக்குப் பெயரிட்டார். 1954ம் ஆண்டு ஆகஸ்டு 22ம்தேதி உருவானது ’தூய இதயம்’. அங்கே அன்றாடம் என்ன நடந்தது?

நகரில் கவனிப்பாரற்று செத்துக்கொண்டிருந்த ஏழைகள், தொழுநோயாளிகள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், ஆண்கள் என்று யாராக இருந்தாலும் அவர்கள் அந்த இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவம் செய்யப்பட்டது. பிழைத்தவர்கள் குணமடைந்த பின் திரும்பிச் சென்றனர். அல்லது அந்த தொண்டு நிலையத்திலேயே தன்னையொத்த மற்றவர்களுக்கும் தொண்டு செய்யத் தங்கிவிட்டனர்.

இறந்தவர்களுக்கு உரியமுறையில் இறுதி மரியாதை செய்யப்பட்டது. இறக்கும் வரை அன்றாடம் அன்புடனும் அக்கறையுடனும் அவர்கள் கவனிக்கப்பட்டார்கள். அவர்களது புண்களுக்கு மருந்து போடப்பட்டது. இதமான சொற்கள் பேசப்பட்டன. அவர்கள் குளிப்பாட்டப்பட்டார்கள். அவர்களது மல, ஜலம் உரிய முறையில் அள்ளப்பட்டது. முகம் தெரியாத யாரோ காட்டிய அன்பிலும் அக்கறையிலும் அவர்கள் மனம் சாந்தமடைந்தது. செத்துத்தான் போகவேண்டுமெனில் அவர்கள் சந்தோஷமாகச் சாவார்கள். இதுதான் அங்கே நடந்தது.

இதைச் சாதித்த அந்த கருணைமிகுந்த சகோதரி ஆக்னஸ் இந்தியரா? ஆம், ஆனால் இல்லை!  பிறந்தது யுகோஸ்லாவியாவில் இருந்த ஸ்காப்ஸி என்ற சிறிய கிராமம். ஆனால் இந்தியக் குடியுரிமை வாங்கிக்கொண்டு அவர் வாழ்ந்தது இந்தியாவில்தான். மேலே சொன்ன நிகழ்ச்சி நடந்தது கொல்கத்தாவில். இப்போது தெளிவாகத் தெரிந்திருக்கும் அவர் யாரென்று. ஆமாம், அவர்தான்  இந்தியாவின் பெருமைக்குரிய அன்னை தெரஸா.

அயர்லாந்தில் இருந்த லாரொட்டோ கன்னிகாமடத்தில் கன்னிகாஸ்திரியாக பயிற்சி பெற்று 1931ம் ஆண்டு கிறிஸ்தவ மரபுப்படி பெண் துறவியாக பிரமாணம் எடுத்துக்கொண்டார். அன்றிலிருந்து சகோதரி ஆக்னஸ் சகோதரி தெரசாவானார். ஆனால் அவரது அயராத கருணைமிகு மானிடச்சேவைகள் அன்னை தெரசாவாக அவரை உலகத்தினர் மனத்தில் உயர்த்தின.

டார்ஜிலிங்கில் ஆசிரியையாக பல ஆண்டுகள் பணியாற்றினார். ஆனால் கல்வித்தொண்டு மட்டும் போதாது என்று அவருக்குத் தோன்றியது. ஜன்னலைத் திறந்து பார்த்தபோதெல்லாம் தூசியும், சேரியும்தான் அவர் கண்ணில் பட்டன. அங்கு கஷ்டப்படும் மக்களுக்குச் சேவைசெய்ய முடியாதா என்று ஏங்கினார். ஒருநாள் டார்ஜிலிங்கை நோக்கி அவர் ரயிலில் வந்துகொண்டிருந்தபோது அந்த ஏக்கம் ஒரு முடிவாக  உருவெடுத்தது. இறைவனின் செய்தியாக அதை அவர் எடுத்துக்கொண்டார். அந்த நாள்கூட (செப்டம்பர் 10) ‘இறையுணர்வு நாள்’ (Inspiration Day) என்றே அறியப்படுகிறது.

கான்வென்ட்டை விட்டுவிலகி தனியாக சேவைசெய்ய விண்ணப்பம் செய்தார். சிலகாலம் சென்றபிறகு ரோமிலிருந்து புனிதபோப் பன்னிரண்டாம் பயஸிடமிருந்து அனுமதி கிடைத்தது. பாட்னா சென்று முதலுதவி செய்தல், புண்களைக் கழுவுதல், மருந்திடுதல் என மருத்துவ உதவிகள் புரிவதிலும், செவிலியாக இருப்பதிலும் பயிற்சி பெற்றார். சேவை மனம்கொண்ட பன்னிரண்டு பேர் அவருக்கு உதவிசெய்ய வந்தனர். இப்படித்தான் துவங்கியது அன்னையின் சேவை. அனாதைக் குழந்தைகள் காப்பகம், தொழுநோயாளிகளுக்கான அன்பு நிலையம், முதியோர் இல்லம் என அவருடைய சேவை விரிந்துகொண்டே சென்றது.

எளிமையான வாழ்வு அவரது. இரண்டு சேலைகள்தான். ஒன்று அழுக்கானால் இன்னொன்றை அணிந்துகொள்வார். தன் துணிகளை தானே துவைத்துக்கொள்வார். அவரது அமைப்பில் இருந்தவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே இரண்டு வேளைதான் உணவு உண்டார்கள். இன்றியமையாத தேவைகள் வந்தாலொழிய வாழ்க்கையின் எந்த வசதிகளையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் அறைகளில் மின்விசிறிகள்கூடக் கிடையாது. அன்னை தெரசாவின் அறை உட்பட!

தொடக்ககாலத்தில் அன்னையும் அவருடனிருந்த சகோதரிகளும் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பல சந்தர்ப்பங்களில் உணவுகூட இல்லாத நிலை. தங்களுக்கு உணவில்லாவிட்டால் பரவாயில்லை, ஆனால் தங்களை நம்பிவந்திருக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உணவளிக்கவேண்டுமே என்ற கவலையில் அவர்கள் ஒரு தகரடப்பாவை எடுத்துக்கொண்டு வீடுவீடாகச் சென்று பிச்சையெடுத்தார்கள்! உணவு விடுதிகளிலிலிருந்து தூக்கி எறியப்படுகிற மிச்சம்மீதி உணவுப்பண்டங்களைச் சேகரித்துக்கொண்டு வந்து, சுத்தப்படுத்திக் கொடுப்பார்கள்! வசதி வந்தபிறகும் அன்னையின் கருணையுள்ளத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. விமானப்பயணங்கள் மேற்கொண்டபோதெல்லாம் விமானத்தில் கொடுக்கப்படும் உணவுப்பண்டங்களை எடுத்துவந்து கண்ணில் பட்ட ஏழைகளுக்கெல்லாம் பகிர்ந்தளித்தார்!

அன்னை தெரசா தொடங்கிய மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி என்ற தொண்டு அமைப்பு இன்றைக்கு 133க்கும் மேற்பட்ட நாடுகளில் 500க்கும் மேற்பட்ட மையங்கள் என பரந்துவிரிந்துள்ளது. கிட்டத்தட்ட 5000 பேர் சேவைபுரிகிறார்கள். ஆனால் அன்னை தெரசா தன் சேவையைத் தொடங்கியபோது அவரிடம் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? வெறும் ஐந்து ரூபாய்!

துறவு வாழ்வு மேற்கொண்டு மனிதர்களுக்குச் சேவை செய்து வாழ்வைக் கழித்தால் என்ன என்று பன்னிரண்டு வயதில் அவருக்குத் தோன்றியது! அதுவும் எப்படி? தோன்றி மறையக்கூடிய மேகம் மாதிரி அல்ல. மனதுக்குள் வேர்விட்ட ஆலமரமாக. பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கு வரக்கூடிய எண்ணமா அது?! இறைவன் மனிதர்கள்மீது கொண்ட கருணையின் அடையாளம் அது.

சமீபத்தில்கூட அன்னையின் சேவையின் நோக்கத்தை ஒருவர் விமர்சித்து அது ஒரு பரபரப்பான செய்தியானது. அன்னையை விமர்சித்தவர் கடுமையாகப் பலரால் விமர்சிக்கப்பட்டார். அவரைப்போலவே அன்னையின் காலத்திலும் சிலர் சொன்னார்கள். நிர்மல் ஹிருதய் இல்லம் செயல்படத்துவங்கிய காலத்திலேயே அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு வெளிநாட்டுப்பெண்மணி, உயிர் பிரிந்துகொண்டிருக்கும் வேளையில் ஒன்றும் அறியாத ஏழைகளை கிறிஸ்தவத்துக்கு  மதம்மாற்றுகிறார் என்று கூப்பாடு போட்டனர். போலீஸில் புகார் கொடுத்தனர். அன்னையை அங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

நிலைமையை நேரில் கண்டபிறகுதான் எதுவும் செய்யமுடியும் என்று கூறிய கமிஷனர் இறப்போர் இல்லத்தைப் பார்வையிட நேரில் வந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை ஸ்தம்பிக்க வைத்தது. அது என்ன காட்சி?

முற்றிய நிலையிலிருந்த ஒரு தொழுநோயாளியின் அழுகி வடிந்துகொண்டிருந்த புண்ணை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலைப் போட்டு அன்னை தெரசா துடைத்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் ஒரே மருந்து நாற்றம். அவர் வந்த நோக்கத்தை அறியாத அன்னை, ‘கொஞ்சம் இருங்கள், நான் வந்து எல்லா இடத்தையும் சுற்றிக்காட்டுகிறேன்’ என்றார். அதற்குள் இல்லம் முழுவதையும் சுற்றிப்பார்த்துவிட்டார் கமிஷனர். திரும்பி வந்த அவர் புகார் கூறியவர்களிடம், “நான் கொடுத்த வாக்குறுதியின்படி அன்னையை வெளியேற்றிவிடுகிறேன். ஆனால் அவர் இங்கே செய்துகொண்டிருக்கும் பணியினை உங்கள் அன்னையர் வந்து செய்யவேண்டும், சம்மதமா?” என்று கேட்டார்! குறைகூறியவர்கள் இப்போது வாய்திறக்கவில்லை. தொடர்ந்து கமிஷனர், “இந்தக் கட்டடத்தின் பின்புறம் காளியின் சிலை இருக்கிறது. ஆனால் இங்கே உயிருள்ள காளியம்மாவை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்!

மரணமடைந்துகொண்டிருப்பவர்களை அன்னை தெரசா மதம் மாற்றிவிடுகின்றார் என்பதைவிட மோசமான, உள்நோக்கம்கொண்ட குற்றச்சாட்டு வேறெதுவும் இருக்க முடியாது. செத்துப்போகின்ற மனிதனை நினைக்கவோ, அவனுக்காக கண்ணீர்விடவோ யாரும் கிடையாது. கடைசிக்காலத்தில் கவலைப்படக்கூட யாரும் இல்லாமல் போகின்ற ஒருவரின் நோயுற்ற உடலை வாரிஅணைத்துக் கொண்டுவந்து, இருக்கை கொடுத்து, மருத்துவமும் செய்த மாதாவுக்கு நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் சாகின்றவருக்கு அன்னை, சிலுவை மாட்டிவிடுகிறார் என்ற குற்றச்சாட்டு மனசாட்சியை பொரித்துத் தின்றுவிட்டவர்களுடையது.

இறந்துகொண்டிருந்தவர் ஹிந்துவாக இருந்தால் அவர் வாயில் புனித கங்கை நீர் ஊற்றப்பட்டது. அவர் முஸ்லிம் என்று தெரிந்தால் ஒரு மௌலவி அங்கே அழைக்கப்பட்டு உரிய முறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். இறந்த மனிதரின் நம்பிக்கை சார்ந்த மதரீதியான சடங்குகளைக்கொண்டே அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. விஷமத்தனமான விமரிசனங்களை மீறி இறப்போர் இல்லம் தொடங்கிய நாளிலிலிருந்து 1970 வரை அங்கு கொண்டுவரப்பட்டோரின் எண்ணிக்கை 23,000! 

குறுகிய மனம் கொண்டவர்கள் அன்னையைப் புரிந்துகொள்ளாவிட்டாலும் அகண்ட இந்த உலகம் அவரைச் சரியாகவே புரிந்துகொண்டது. 1962ல் பத்மஸ்ரீ பட்டம், மேக்சேசே விருது, 1969ல் ஜவாஹர்லால் நேரு விருது, 1979ல் பாரத ரத்னா விருது மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு என இந்தியாவும் உலகமும் அவரை பல விருதுகளால் கௌரவித்தன. இந்தியா முழுக்க அவர் ரயிலிலும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அரசு அறிவித்தது. உலகின் பல பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர்பட்டமும் கொடுத்து கௌரவித்தன.

நோபல் பரிசு பெற்றவர்களுக்கான விழா முடிந்தபிறகு ஒரு விருந்தளிக்கப்படும். அது தனக்கு வேண்டாமென்றும், அதற்காகும் செலவுத்தொகையை தன்னுடைய பணிகளுக்காகக் கொடுத்துதவவேண்டும் என்றும் அன்னை கேட்டுக்கொண்டார்! “இந்த உலகத்தில் உள்ள ஏழைகளின் சார்பில் இதைப் பெற்றுக்கொள்கிறேன்” என்றுதான் நோபல் உரையில் அன்னை கூறினார்!

”உலகிலேயே மிக மோசமான நோய் தொழுநோயோ, என்புருக்கி நோயோ அல்ல. நாம் யாராலுமே நேசிக்கப்படவில்லை, யாருமே நம்மை விரும்பவில்லை என்ற உணர்வுதான் மிகமோசமானது. எனவே நம் சேவையை நாம் நம் குடும்பத்திலிருந்தே தொடங்க வேண்டும்” என்று அன்னை கூறினார். அவருடைய மகத்துவத்தை இதிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம்.  

மானிட சேவை பற்றி எடுத்துச்சொல்லி ஒரு துறவியை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால் அன்னை தெரசாக்களை நம்மால் உருவாக்க முடியாது. அவராகவே உருவானால்தான் உண்டு. அன்னை என்றாலே அப்படித்தான். அன்னையை யாரும் உருவாக்க முடியாது. அன்னைதான் நம்மை உருவாக்குவார்!

                                    ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com