27. உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்!

சிங்கப்பூரில் வேலை இல்லாதவர்கள் 14 சதவிகிதம். அதாவது, வேலை தேடியவர்களில் ஏழில் ஒருவருக்கு வேலை கிடைக்காத நிலை.

சிங்கப்பூரில் வேலை இல்லாதவர்கள் 14 சதவிகிதம். அதாவது, வேலை தேடியவர்களில் ஏழில் ஒருவருக்கு வேலை கிடைக்காத நிலை. இவர்கள் விரக்தி கொண்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்களானர்கள் அல்லது அனுதாபிகளானார்கள். 1971 – இல் பிரிட்டீஷ் படைகள் முகாமைக் காலி செய்துவிட்டால், இன்னும் 70,000 பேர் வேலை இல்லாதோர் பட்டியலில் சேர்ந்துவிடுவார்கள். அதற்குள் எப்படியாவது வேலை வாய்ப்புக்களை அதிகமாக்கவேண்டும். உள்ளுரில் இயற்கை வளங்கள் எதுவும் சுத்தமாகக் கிடையாது. கோடிக் கோடியாக முதலீடு போட்டுத் தொழிற்சாலை ஆரம்பிக்க வெளிநாட்டிலிருந்து முதலாளிகள் வராமலிருக்க இன்னொரு காரணமும் இருந்தது. அண்டைய மலேஷியாவும், இந்தோனேஷியாவும் சிங்கப்பூரை விழுங்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பகைமையை மீறிச் சிங்கப்பூர் தாக்குப்பிடிக்க முடியவே முடியாது என்று எல்லோருமே அஞ்சலி எழுதிவிட்டார்கள். அல்பாயுசு நாட்டில் முதலீடு செய்ய யார் முன்வருவார்கள்?         . 

லீயின் நண்பர் ஒருவர், சுற்றுலாத் துறையில் நாடு நல்ல வருமானம் பார்க்கலாம் என்று சொன்னார். நல்ல யோசனை. குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கலாம். ஹோட்டல்கள், உணவகங்கள், கடைகள் ஆகியவற்றின் வியாபாரம் பெருகும். சுற்றுலா வழிகாட்டிகள், டிரைவர்கள், சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் ஆகிய பல நூறு பேருக்கு வேலை கிடைக்கும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலையில் இருந்த லீ அரசின் சிங்கப்பூர் சுற்றுலா முன்னேற்ற வாரியம் (Singapore Tourist Promotion Board) தொடங்கினார்.      

ஷா பிரதர்ஸ் என்னும் நிறுவனம், சீனா, சிங்கப்பூரில் சினிமா தயாரிப்பில் முன்னோடிகள், பல நூறு வெற்றிப்படத் தயாரிப்பாளர்கள். இதன் பங்குதாரர்களில் ஒருவரான ருன்மே ஷா (Runme Shaw) வாரியத்தின் தலைவராக இருக்கச் சம்மதித்தார். மக்களின் ரசனைகள் தெரிந்தவர், திறமைசாலி, மிகச் சரியான தேர்வு.

சிங்கப்பூர்ச் சுற்றுலாவின் அடையாளச் சின்னமாக, சிங்கத்தின் தலையும், கடற்கன்னியின் உடலும் கொண்ட உருவத்தை ருன்மே ஷா அறிமுகம் செய்தார். இதற்கு மெர்லயன் (Merlion) என்று பெயர் வைத்தார். கடற்சிங்கம் என்று அர்த்தம் கொண்ட ஆங்கில வார்த்தை. மெர் என்றால் கடல்; லயன் என்றால் சிங்கம். சிங்கத் தலை, நாட்டின் முன்னாட் பெயரான “சிங்கப்புரா’ என்பதைக் குறிப்பிடுகிறது: கடற்கன்னி, நாடு முதலில் மீனவக் குடியிருப்பதாக இருந்ததன் சங்கேதம். 

மெர்லயன் இன்றும் சிங்கப்பூர்ச் சுற்றுலாவின் அடையாளமாக மக்களை ஈர்த்து வருகிறது. சுற்றுலாத் தொழில், மந்திரத்தால் மாங்காய் விழவைக்கும் சமாச்சாரமல்ல, வருடம் வருடமாகக் கட்டிக் காத்தால் மட்டுமே வருமானம் தரும் தொழில். ஆகவே, சுற்றுலா முயற்சி வெற்றி கண்டது. ஆனால், லீ எதிர்பார்த்த அளவுக்கு, வேகத்துக்கு, வேலை வாய்ப்புக்களை உருவாக்கவில்லை.    

இந்தியப் பொருளாதார ஆலோசகர் ஒருவரை லீ அழைத்துவந்தார். மலேஷியோவோடு கை கோர்த்தாலொழிய சிங்கப்பூரில் தொழில் வளர்ச்சி வர வாய்ப்பே இல்லை என்று இவர் அறிவுரை சொன்னார். தன் நாட்டை அவமானப்படுத்திய மலேஷியா முன் கையேந்தி நிற்க லீ தயாராக இல்லை. சொந்தக் காலில் நின்று காட்டுகிறேன் என்று மனதுக்குள் சபதமிட்டார்.  தன் கனவோடு ஒத்துப்போன ஆல்ஃபிரட் வின்ஸெமியஸ் (Alfred Winsemius) என்னும் பொருளாதார மேதையை ஆலோசகராக நியமித்தார். இவர் ஹாலந்து நாட்டுக்காரர். ஐ.நா. சபையில் பணியாற்றியவர். உலகப் பொருளாதாரம் பற்றி ஆழமாக அறிந்தவர். பன்னாட்டுத் தொழிலதிபர்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். 

வின்ஸெமியஸ் ஆலோசனைப்படி, லீ, 1961 – இல், 10 கோடி சிங்கப்பூர் டாலர் முதலீட்டில் சிங்கப்பூர் பொருளாதார முன்னேற்ற வாரியம் (Singapore Economic Developmemt Board) தொடங்கினார். தொழில் முனைவர்களை, குறிப்பாக அயல்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சி இது. அவர்களுக்குத் தேவையான நிதி உதவி, நிலம், மின்சாரம், தண்ணீர், மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் ஆகியவற்றை ஊரெல்லாம் ஓடவைக்காமல், ஒரே இடத்திலேயே அவர்களுக்குத் தருவது இந்த வாரியத்தின் குறிக்கோள்.

ஐ.நா சபையின் தொழில் வல்லுநர்கள் பலரை வின்ஸெமியஸ் அழைத்துவந்தார். அடுத்து வந்த பல திட்டங்களில் இவர்கள் பங்களிப்பு கணிசமானது.  பெரும்பாலான பொருட்செலவில், ஏகப்பட்ட கட்டமைப்பு வசதிகளோடு ஏற்கெனவே, ஜப்பானியக் கம்பெனிகளுக்காக ஒரு தனித் தொழிற்பேட்டை இருந்தது. யாருமே வராமல், இந்தத் தொழிற்பேட்டை ஈ ஓட்டியது. இதன் கதவுகளை வின்ஸெமியஸ் எல்லா நாடுகளுக்கும் திறந்துவிட்டார். 

வின்ஸெமியஸ் தன் குறிக்கோளில் தெளிவாக இருந்தார். இந்தத் தொழிற்பேட்டையைப் பயன்படுத்தவேண்டும். குறைந்த முதலீட்டில் அதிகம் பேருக்கு வேலை தந்து, நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தீர்வு காணவேண்டும். அதே சமயம், சிங்கப்பூரின் சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு விளைவிக்கக்கூடாது. இத்தகைய தொழில்களைத் தேடினார். கப்பல் உடைத்தல் மற்றும் பழுதுபார்த்தல், கனிமத் தொழில், கெமிக்கல்கள், எலெக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பு ஆகியவற்றில் ஒருமுகம் காட்டினார்.    

உள்ளூர் பிசினஸ்மேன்கள், அடுத்தவர் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் மட்டுமே செய்யாமல், உற்பத்தித் தொழிற்சாலைகள் தொடங்குமாறு ஊக்குவிக்கப்பட்டடார்கள். அப்போதுதானே அதிகம் பேருக்கு வேலை தரமுடியும் என்பது லீ கணக்கு. அழகு சாதனங்கள், தாவர எண்ணெய்கள், கொசுவர்த்திச் சுருள், பாச்சா உருண்டை ஆகியவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் (!!!!) வந்தன. ஹாங்காங், தைவான் ஆகிய அண்டை நாடுகளிருந்து பொம்மைகள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பாளர்கள் ஒருசிலரும் வந்தார்கள்.

இங்கிலாந்தும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு உதவியது. ராணுவ முகாமை மூடுவதால் சிங்கப்பூரின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று  உணர்ந்தது. நட்புரிமையில், நிதி உதவி தரப்போவதாகக் காற்றோடு காற்றாகப் பல செய்திகள். அடுத்தவர் கையை நம்பி நாடு வாழ்வதை லீ வெறுத்தார். தன் மக்களுக்கும் அண்டிவாழும் மனப்பாங்கு வராமல் தடுக்கவேண்டும். நிமிர்ந்த நன்னடியும், நேர்கொண்ட பார்வையுமாகக் கர்ஜித்தார், ”நமக்கு உதவுவது உலகத்தின் தலையெழுத்தல்ல. நாமும் அவர்களிடம் திருவோடு ஏந்திப் பிழைக்கமாட்டோம்.’”      

பிரிட்டீஷ் ராணுவ மையம் இருந்த இடம், துறைமுகத்தின் அருகே இருந்தது. தொழிற்சாலைகள் அமைக்க அருமையான இடம் – மூலப்பொருட்கள் இறக்குமதி, தயாரிப்புப் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றுக்குச் செலவு கணிசமாகக் குறையும், அரசாங்கம் இந்த இடத்தைத் தொழிற்சாலைப் பகுதியாக அறிவித்தது. கூறுகள் போட்டுத் தனியார் தொழில் முனைவர்களுக்கு விற்பனை செய்தது. இதில் பலர் வெளிநாட்டவர். அந்நிய முதலீட்டை ஈர்க்கும் ஜன்னலாக, இந்த நிலங்கள் உதவின. முகாம் மூடியதால் வேலை இழந்த 30,000 தொழிலாளிகளுக்கு இந்தப் புதிய தொழிலகங்கள் பணி தந்தன. 

சிங்கப்பூர் வரலாற்றில் இது சிக்கலான நேரம். நாட்டின் பலத்தையும், தன் தலைமையையும் லீ நிருபித்தேயாக வேண்டிய நாட்கள்.. நாட்டைத் தலமையேந்தி நடத்துபவருக்கு நாளின் 24 மணி காலம் போதாது. லீ யாருமே நினைத்துப்பார்க்க முடியாத காரியம் செய்தார். முதலமைச்சர் பதவியிலிருந்து ஒரு வருட விடுப்பு எடுத்தார். எதற்கு?

இந்தக் காலகட்டத்தில், உலகில் ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள். இதனால், பொருளாதாரக் கொள்ககளும், பிசினஸ் முறைகளும் அதிரடியாக மாறிக்கொண்டிருந்தன. இவற்றை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான், சரியான அரசியல், நிர்வாக, பொருளாதார, தொழில் வளர்ச்சி முடிவுகளை எடுக்கமுடியும் என்பது அவர் எண்ணம் தன் பாட்டரிகளை ரீச்சார்ஜ் செய்துகொள்ள, உலகத்தின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலிருந்த கென்னடி அரசு நிர்வாகக் கல்லூரியின் (Kennedy School of Government) ஒரு வருடப் படிப்பில் சேர்ந்தார். 

தான் நாட்டின் முதல்வர், 45 வயதானவர் என்பதை லீ மறந்தார். முழு நேரமும் அறிவுத்தேடல். முன்பு அவர் சிங்கப்பூரிலும், இங்கிலாந்திலும் படித்தது அவருடையவும், குடும்பத்துடையவும் வளர்ச்சிக்காக. இப்போது படிப்பது சிங்கப்பூருக்காக. பாடப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தார்: நூலகங்களில் புத்தக மலர்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து அறிவுத்தேன் பருகினார். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர்களை அடிக்கடி சந்தித்துப் பேசினார். சந்தேகங்களுக்கு விளக்கங்கள் கேட்டார். தன் சிந்தனைகளை அவர்களோடு மோதவிடும் விவாதங்கள் செய்தார்.   

பிசினஸ் நுணுக்கங்கள் லீக்குத் தெளிவாயின. நிலையான, தொடர்ந்த வெற்றிகள் காணவேண்டுமானால், பலங்களை, பலவீனங்களை, தன்னை எதிர்நோக்கியிருக்கும் அபாயங்களை, வாய்ப்புக்களைச் சரியாக எடைபோட்டு முடிவுகள் எடுக்கவேண்டும், வியூகங்கள் வகுக்கவேண்டும். இது தனி மனிதன், சமுதாயம், மாநிலம், நாடு ஆகிய அனைத்துக்கும் பொருந்தும் என்னும் கருத்து மனதில் ஆழமாகப் பதிந்தது. ஹாங்காங்கில் ஏராளமான ஆயத்த ஆடைத் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். இவர்கள் உலகத்துக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யும் ஆடைத் தொழிற்சாலைகள் நடத்தினார்கள். ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. ஹாங்காங் தொழிலாளிகளின் சம்பளம் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவு. இதை ஆயுதமாக்கி, மேலை நாடுகளின் ஆயத்த ஆடைகள் விற்பனையில் பெரும்பங்கை ஹாங்காங் பிடித்துவிட்டது. லீ மனதில் மின்னல் வெட்டியது, “சிங்கப்பூரிலும் தொழிலாளர் சம்பளம் மிகக் குறைவு. இந்த அடித்தளத்தில், ஆயத்த ஆடைகள் போன்ற தொழில்கள் தொடங்கலாம்.” 

லீ, தான் அமெரிக்காவில் இருக்கும்போது முடிந்த அளவுக்கு பிசினஸ்மேன்களைச் சந்திக்க விரும்பினார். அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளை சிங்கப்பூருக்கு வரவைத்தால் தன் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று அவர் உள்மனம் சொன்னது. அந்த நாட்களில், வளரும் நாடுகள் இதற்கு  எதிர்மறையான சித்தாந்தத்தைக் கடைப்பிடித்தார்கள். பன்னாட்டு நிறுவனங்களை நுழையவிட்டால், நாடு ஒட்டகம் புகுந்த கூடாரமாகிவிடும்,  வருபவர்கள் நாட்டின் மூலப்பொருட்களையும், ஏழைத் தொழிலாளிகள் உழைப்பையும் உறிஞ்சுவார்கள். தங்கள் லாபங்கள் குவிந்தபின், கறிவேப்பிலையாக உதறித் தள்ளிவிட்டு நடையைக் கட்டுவார்கள் என்பது அவர்கள் கருத்து, பயம். 

லீ வித்தியாசமாக நினைத்தார். பன்னாட்டுக் கம்பெனிகளுக்குக் குறைந்த உற்பத்திச் செலவு, அதனால் அதிக லாபம்: வளரும் நாடுகளுக்கு நவீனத் தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புக்கள், நாட்டின் பொருளாதார முன்னேற்றம், மக்களின் உயரும் வாழ்க்கைத்தரம் என இரு தரப்பினருமே பங்காளிகளாகப் பலன் காணமுடியும் என்று சிந்தித்தார்.  

லீ தொழில்வளர்ச்சி காணப் பயன்படுத்திய ஆயுதம் மார்க்கெட்டிங். பல அயல்நாட்டு பிசினஸ்மேன்கள் கூட்டங்களில் லீ பேசினார். தன் பூகோள அமைப்பால், முதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளால், குறைவான தொழிலாளர் சம்பளத்தால், அவர்கள் உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்கமுடியும், உலகச் சந்தையில் தங்கள் பங்கை அதிகமாக்க முடியும் என்று புள்ளிவிவரங்கள் துணையோடு ஆணித்தரமாக வாதிட்டார்.

சிங்கப்பூர் பொருளாதார முன்னேற்ற வாரிய அதிகாரிகள் லீ போட்ட புள்ளியைக் கோலமாக்கினார்கள். பொங்கும் உற்சாகத்தோடு பல நூறு பன்னாட்டு நிறுவன சி.இ.ஓக்களைச் சந்தித்தார்கள். தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள். பலருக்குச் சிங்கப்பூர் என்ற ஒரு நாடு இருப்பதே தெரியவில்லை. இன்னும் பலருக்குப் பூகோள உருண்டையில் தேசத்தைக் காட்டவேண்டிய கட்டாயம். விசிட் அடிப்பதற்கு “ஆமாம்” கிடைப்பதற்கு சுமார் 50 ”’இல்லை”களைச் சந்தித்தார்கள், ஆனால், தளராமல் தொடர்ந்தார்கள். தலைவர் காட்டிக்கொண்டிருந்த வழி, போட்டுக்கொண்டிருந்த பாதை!     

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com