28. வந்தோரை வரவேற்கக் காத்திருக்கிறேன்!

வின்ஸெமியஸ் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் தனித்துவமானவை, ஆலோசகர் என்பதைத் தாண்டி, ஒரு மண்ணின் மைந்தர்போல் அர்ப்பணிப்பு காட்டினார்.

வின்ஸெமியஸ் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் தனித்துவமானவை, ஆலோசகர் என்பதைத் தாண்டி, ஒரு மண்ணின் மைந்தர்போல் அர்ப்பணிப்பு காட்டினார். அமெரிக்க, ஐரோப்பிய சி.இ.ஓக்களின் மனப்போக்கு அவருக்கு நன்றாகத் தெரியும். இதனால், அவர்கள் ‘மொழி’ யில் பேசினார். வின்ஸெமியஸ் பரிந்துரையால், ஏராளமான சி.இ.ஓக்கள் சிங்கப்பூரை எடை போடுவதற்காக வரத் தொடங்கினார்கள்.

அந்தக் காலகட்டத்தில், எல்லா வளரும் நாடுகளும், அன்னிய முதலீட்டை ஈர்க்கப் பல்வேறு முயற்சிகள் செய்து வந்தார்கள். தனித்துவம் காட்டினால் மட்டுமே, தான் ஜெயிக்கமுடியும் என்று லீ உணர்ந்தார். First impresson is the best impression என்று ஆங்கிலத்தில் வார்த்தைப் பிரயோகம் உண்டு. லீ இதை முழுக்க முழுக்க நம்புபவர், கடைப்பிடிப்பவர். சிங்கப்பூருக்கு வரும் விருந்தாளிகளின் ஒவ்வொரு சின்ன அனுபவமும், சுகானுபவமாக இருக்கவேண்டும். இதனால், ஒவ்வொரு குட்டிக் குட்டி விஷயத்தையும், தன் அதிகாரிகளை நுணுக்கமாகத் திட்டமிடச் செய்தார்.

மனோதத்துவத்தில் கனவுக் காட்சி உருவகம் (Visual Imagery) என்கிற கொள்கை இருக்கிறது. இதன்படி, ஒரு செயலைச் செய்து முடிக்கவேண்டுமானால், அந்தச் செய்கையை, அதனால் கிடைக்கும் பலன்களை, மனதில் கற்பனைக் காட்சிகளாக ஓட்டவேண்டும். அப்போது, எடுத்த காரியத்தை முடிக்கும் உத்வேகம் பன்மடங்காகும். சாதனை வசப்படும். இப்படித்தான், லீ சிங்கப்பூரில் வெளிநாட்டுக் கம்பெனிகள் முதலீடு செய்வதைக் கனவுக்காட்சிகளாக ஓட்டிப் பார்த்திருக்கவேண்டும்.

அமெரிக்க ஏபிசி கம்பெனியின் சி.இ.ஓ ராபர்ட் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அழகான, சுத்தமான விமான நிலையம். குடியேற்ற, கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை வி.ஐ.பியாக நடத்துகிறார்கள். மதிப்புத் தந்து பழகுகிறார்கள், சம்பிரதாயங்களை முறையாக, திறமையாக, வேகமாக முடிக்கிறார்கள்.

ராபர்ட் விமான நிலையத்தை விட்டு வெளியே வருகிறார். கோட்டு, சூட் என மேல்நாட்டுப் பாணி உடை அணிந்த பொருளாதார முன்னேற்ற வாரிய அதிகாரி அவரைக் கை குலுக்கி வரவேற்கிறார். அவர் தரும் உபச்சாரம், பழகும் முறை விருந்தாளி ராபர்ட் மனதைக் கவர்கிறது. அதே சமயம், பிற வளரும் நாட்டு அதிகாரிகளிடமிருந்து ஒரு முக்கிய வித்தியாசத்தைப் பார்க்கிறார். அந்த நாடுகளில் அதிகாரிகள் அவரைக் கடவுளின் தூதர்போல், காலில் விழாத குறையாக, அதீதப் பணிவுடன் நடத்துவார்கள். அதில் ஒரு போலித்தனம் இருக்கும், இங்கோ, மரியாதை தரும் அதே வேளையில், தன்மானமும், தன்னம்பிக்கையும் நிறைந்த பழகுதல். அவருக்கும், சிங்கப்பூர் அரசுக்குமிடையே வரப்போகும் உறவு, உதவி கொடுப்பவர் - வாங்குபவர் என்பதல்ல, சமமான கூட்டாளிகள் என்று அறிவிக்கிறது.

ராபர்ட் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறார். கார் தயாராக நிற்கிறது. ‘பளிச்’ வெள்ளைச் சீருடையும், பாலிஷ் செய்த கறுப்பு ஷூவும் அணிந்த டிரைவர் கார்க் கதவைத் திறக்கிறார். மேடு பள்ளங்களே இல்லாத ரோடு. கார் வழுக்கிக்கொண்டு சீரான வேகத்தில் பாய்கிறது. காரின் வேகம் வசதியாக, விருந்தாளிக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்று டிரைவர் விசாரிக்கிறார்.

விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் வரும் ரோடுகள் உலகத்தரத்தில் இருக்கின்றன. வழியெங்கும் கனகச்சிதமாக வெட்டிவிடப்பட்ட பூச்செடிகள், நிழல்தரும் மரங்கள். ஊருக்குள், மையமான ஒரு இடத்தில், 90 ஏக்கர் புல்வெளி, அதன் அருகே பெரிய கால்ஃப் விளையாடும் இடம்.

சிங்கப்பூருக்குள் அடியெடுத்து வைக்கும்போதே, ராபர்ட் மனதில் ஓடும் எண்ணம் - மக்கள் எத்தனை திறமைசாலிகளாக, ஒழுங்கும், கட்டுப்பாடும் கொண்டவர்களாக இருந்தால் நாட்டை இத்தனை அழகாக, சீராக, கனகச்சிதமாக வைத்துக்கொள்ள முடியும்? ‘நிச்சயமாகச் சிங்கப்பூர் தனித்துவமான நாடு, மலேஷியா, இந்தோனேஷியா ஆகியோரிடமிருந்து சிங்கப்பூர் வித்தியாசமான நாடு, இங்கே பிசினஸ் செய்வது லாபமாக மட்டுமல்ல, சுகானுபவமாகவும் இருக்கும்’ என்னும் எண்ணம் அவரை அறியாமலே, அவர் மனதில் அழுத்தமாகப் பதிகிறது.

அடுத்த சில நாட்கள். பொருளாதார முன்னேற்ற வாரிய அதிகாரிகள் தொழிற்பேட்டைகளில் இருக்கும் கட்டமைப்பு வசதிகளைக் காட்டுகிறார்கள். ஒரு வளரும் நாட்டில், ஏழை நாட்டில் இத்தனை வசதிகளா, அரசு அதிகாரிகளிடம் இத்தனை தொழில் நேர்த்தியா? கிட்டத்தட்ட ராபர்ட் சிங்கப்பூரில் முதலீடு செய்ய முடிவெடுத்துவிட்டார்.

நாளை அமெரிக்கா திரும்பவேண்டும். சக டைரக்டர்களிடம் பேசி இறுதி முடிவு எடுக்கவேண்டும். இப்போது வாரிய அதிகாரி வருகிறார், ‘இன்று மாலை லீ அவர்களைச் சந்திக்க உங்களுக்கு நேரம் இருக்குமா?/’

ராபர்ட்டுக்குத் தான் கேட்பதை நம்பவே முடியவில்லை. முதல்வரோடு சந்திப்பா? சந்திக்கிறார். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்பப் பேசும் வாக்கு சாதுரியம், மனதில் இருக்கும் அத்தனை சந்தேகங்களையும் தீர்த்துவைக்கும் கொள்கைத் தெளிவு, நேர்மையுடன் முதல்வர். ராபர்ட் விடை பெறுகிறார், ‘போய் வருகிறேன்.’ இவை சம்பிரதாய வார்த்தைகளல்ல, ஒருவித உறுதிமொழி. ராபர்ட் நிச்சயம் திரும்பி வருவார், முதலீடு செய்வார், தொழிற்சாலை தொடங்குவார், லாபம் பார்ப்பார்.

அக்டோபர் 1968 - இல் இப்படித்தான் வந்தார்கள், அமெரிக்காவின் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் (Texas Instruments). கம்ப்யூட்டர் சிப்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம். சிப்கள் தொழில்நுட்பத்தின் முன்னணித் தயாரிப்புப் பொருட்கள். சிங்கப்பூரில் அசெம்பிளித் தொழிற்சாலை அமைக்க முன்வந்தார்கள். எந்த நாட்டிலும், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் இதுவரை எந்த நாட்டு அதிகாரிகளிடமும் பார்த்தேயிராத வேகம். ஐம்பதே நாட்கள். உற்பத்தி ஆரம்பம்.

விரைவிலேயே, வந்தார்கள் அமெரிக்காவின் இன்னொரு முக்கிய சிப் தயாரிப்பாளர்கள், நேஷனல் ஸெமி கண்டக்ட்டர்ஸ் (National Semi conductors). மூன்றாவதாக வந்தார்கள் அன்றைய நம்பர் 1 எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி, ஹ்யூலெட் அன்ட் பக்கார்ட் (Hewlett & Packard). வளரும் நாடுகளின் அரசு எந்திர மெத்தனம், ஆமை வேக முடிவெடுத்தல் ஆகியவற்றுக்குப் பழகிப்போன இந்த நிறுவனங்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. தங்கள் தேவைகளைத் தெரிவிக்கும் முன்னாலேயே, அவற்றைப் புரிந்துகொண்டு, தீர்வுகள் தரும் மந்திரவாதிகளாக அதிகாரிகள் இருந்தார்கள்.

ஹ்யூலெட் அன்ட் பக்கார்ட் அதிகாரிகள் அடிக்கடி சொல்லும் ஒரு சுகானுபவம். அவர்கள் தொழிற்சாலை ஆறுமாடிக் கட்டடம். முதல் இரண்டு மாடிகளுக்கு லிஃப்ட் பயணிக்கும் அளவுக்கான மின்சாரம் சப்ளை செய்யும் டிரான்ஸ்ஃபார்மர்தான் இருந்தது. கம்பெனி முதலாளிகளில் ஒருவரான பக்கார்ட் புதிய தொழிசாலையைப் பார்வையிட வந்துகொண்டிருந்தார். 3, 4, 5, 6 மாடிகளுக்கு அவர் படிகள் ஏறித்தான் போகவேண்டும். தங்கள் நாட்டு விருந்தாளி சிரமப்படலாமா? மின்வாரியப் பொறியியல் வல்லுநர்கள் ஓடோடி வந்தார்கள். பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஒயர்களோடு வாரிய ஊழியர்கள். பக்கார்ட் வரும்போது, லிஃப்ட் தயார். ஆறாம் மாடிக்குப் போனார். அவர் ஏறிவந்த பின்புலத்தை உதவியாளர்கள் சொன்னார்கள். அசந்தே போனார்.

அமெரிக்கா திரும்பிய பக்கார்ட் தன் அனுபவங்களைப் பல சி.இ.ஓக்களிடம் பகிர்ந்துகொண்டார். US News & World Report, Time போன்ற புகழ்பெற்ற ஊடகங்கள் சிங்கப்பூரில் தொழில் தொடங்கும் வசதிகள் பற்றிச் சிலாகித்து எழுதின.

விரைவில் வந்தார்கள், உலகின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலெக்ட்ரிக். ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலை கொடுத்தார்கள். அமெரிக்கக் கம்பெனிகளின் வெற்றியால், உலகின் பல்வேறு நாட்டு முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புப் பணிகளைச் சிங்கப்பூருக்குத் திசை திருப்பினார்கள். சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பாடும் பொருட்களில் 40 சதவிகிதம் எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பொருட்கள், என்னும் பெருமைக்குரிய நிலை வந்தது.

அடுத்து வளர்ச்சி கண்ட துறை, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் தயாரிப்பு. கணினித் துறை உலகை இயக்கும் மாபெரும் சக்தியாகப்போகிறது என்று சிங்கப்பூர் துல்லியமாகக் கணித்தார்கள். 1981 - இல், கல்வி அமைச்சகம் National Computer Board அமைத்தார்கள். இதன் மூன்று குறிக்கோள்கள்:

1. 2000 - ஆம் ஆண்டுக்குள், அனைத்து சிங்கப்பூர் வீடுகளிலும், அரசு, தனியார் அலுவலகங்களிலும் கம்ப்யூட்டர் இருக்கவேண்டும்.

2. கம்யூட்டர் பயிற்சியைப் பரவலாக்கி, உலகத் தரமுள்ள கம்ப்யூட்டர் வல்லுநர்களை உருவாக்கவேண்டும்.

3. சிங்கப்பூரைக் கணினி சேவையின் உலக மையமாக்கவேண்டும்.

இந்த போர்டின் முயற்சியால், கம்யூட்டர் அறிவு கொண்ட ஆயிரக்கணக்கான திறமைசாலிகள் அயல்நாட்டு நிறுவனங்களுக்குக் கிடைத்தார்கள். இந்தத் திறமைப் படை, சிங்கப்பூருக்கு அயல்நாட்டவரை ஈர்க்கும் இன்னொரு மாபெரும் காந்த சக்தியானது.

இந்த நிறுவனங்களின் அடிமனதில் ஒரு பயம் இழையோடுவதை லீ அறிந்தார். கம்ப்யூட்டர், தொழில்நுட்பப் பொருட்கள் ஆகியவை ஏராளமான பணம், திறமைசாலிகளின் மூளைபலம், உழைப்பு ஆகியவற்றின் கனிகள். சில நாடுகளில், இந்தப் பொருட்களின் தொழில்நுட்பத்தைத் திருடி, போலிப் பொருட்கள் தயாரிப்பார்கள். காப்புரிமை (Patnt), அறிவுசார் தொழில்நுட்பக் காப்புரிமை (Intellectual Property Rights) ஆகிய உலகளாவிய சட்டங்களைச் சில நாடுகள் சீந்துவதேயில்லை. உள்ளூர்த் திருடர்களுக்குத் துணை போகிறார்கள். ”நாங்கள் வித்தியாசமானவர்கள், நேர்மையானவர்கள், அறிவுத் திருட்டை அனுமதிக்காதவர்கள், கடுமையாகத் தண்டிப்பவர்கள் “ என்று லீ காட்டினார். 1986 - இல், சிங்கப்பூர்க் காப்புரிமைச் சட்டம் கொண்டுவந்தார். இதன் பரிணாம வளர்ச்சியாக, 2001 - இல், அறிவுசார் தொழில்நுட்ப உரிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Intellectual Propery Office of Singapore) உருவானது.

இவ்வாறு, கணினி போன்று புத்தம் புதுத் தொழில்நுட்பத் துறைகளில் பொருளாதார வளர்ச்சி வாரியம் கவனம் காட்டினாலும், பாரம்பரியத் தொழில்களையும் மறக்கவில்லை. அவற்றை எப்படி நவீனப்படுத்தலாம், பிற நாடுகளை எப்படி முந்தலாம் என்று வியூகம் வகுத்துக்கொண்டேயிருந்தது. அத்தகைய ஒரு தொழில், டெக்ஸ்டைல்ஸ், அதிலும் குறிப்பாக ஆயத்த ஆடைகள் தயாரிப்பு. பழையன கழிந்தன, புதியன புகுந்தன. அனைத்து நாடுகளுக்கும் சவால் விடும் போட்டித் திறமைகளோடு சிங்கப்பூர் ஜவுளித்துறை களத்தில்.

சிங்கப்பூரின் இன்னொரு முக்கிய தொழில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு. 1960 - களின் இறுதியில், ஜூராங் பகுதியில் தங்கள் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளை நிறுவினார்கள். இன்று சுமார் 100 பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரின் சுத்திகரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. ‘ஆசியாவின் பெட்ரோலிய மையம்’ (Asia’s Oil Hub) என்று வர்ணிக்கப்படும் அளவுக்குப் பெட்ரோலியச் சுத்திகரிப்பும், விற்பனையும் வளர்ந்துள்ளன. வெறும் கையால் முழம் போடமுடியாது என்று சொல்லுவோம். எண்ணெய் வளமே இல்லாத சிங்கப்பூர் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, தன் திறமையையும், உழைப்பையும் சேர்த்துப் பார்க்கிறது, அள்ள அள்ளப் பணம்.

இத்தகைய பல்துறைப் பிரம்மாண்ட வளர்ச்சியால், திறமைசாலிகள் அனைவருக்கும் வேலை கிடைத்தது. ஐந்தே ஆண்டுகளில், வேலையில்லாத் திண்டாட்டம் பழங்கனவானது, எல்லோருக்கும் வேலை தரவேண்டும் என்பது மட்டுமே லீ கனவு அல்ல. இந்தத் தீர்க்கதரிசி, இன்னொரு அவசரத் தேவையை அடையாளம் கண்டார்.

சிங்கப்பூரில் இருந்த பன்னாட்டு நிறுவனங்கள் தொழில்நுட்பக் கருவிகள் தயாரித்தார்கள். இந்தத் துறையில், இன்றைய தொழில்நுட்பம் நாளையே காலாவதியாகிவிடும், காணாமல் போய்விடும். அப்போது, இந்த நிறுவனங்கள் வேறு நாடுகளுக்குப் பறந்துவிடுவார்கள். இதைத் தடுக்க ஒரே வழி, தொழிலாளிகள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டேயிருக்கவேண்டும், திறமையைப் பட்டை தீட்டிக்கொண்டேயிருக்கவேண்டும். இதற்கு லீ வழி வகுத்தார். பன்னாட்டு நிறுவனங்களைச் சிங்கப்பூரில் பயிற்சி மையங்கள் அமைக்குமாறு வற்புறுத்தினார். நான்கு மாதப் பயிற்சி. இந்த வகுப்புகள் எப்படி நடக்கின்றன என்று அரசு மேற்பார்வை செய்தது. விரைவில், உலகின் நம்பர் 1 தயாரிப்புப் பொருட்களுக்கு மட்டுமல்ல, நம்பர் 1 தொழிலாளிகளுக்கும் சிங்கப்பூர் தாயகமானது.

‘தொழில்நுட்பப் பொருட்கள் தயாரிப்பா? போவோம் சிங்கப்பூருக்கு’ என்று திட்டம் போடும்போதே, பன்னாட்டு நிறுவனங்கள் நினைக்கும் நாடாகிவிட்டது சிங்கப்பூர்.

தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும், அயல்நாட்டாரை மட்டுமே நம்பியிருக்க லீ விரும்பவில்லை. ஆகவே, அரசு, உருக்கு தயாரிப்பு, ஆயுதத் தளவாடங்கள் உற்பத்தி, கப்பல் கட்டுதல், விமானப் போக்குவரத்து* போன்ற பல்வேறு தொழில் முயற்சிகள் தொடங்கியது. 1974 - இல் இவை அத்தனையும்,தெமாஸெக் ஹோல்டிங்க்ஸ் (Temasek Holdings) என்னும் முதலீட்டு நிறுவனத்தின் கீழ்க் கொண்டுவரப்ப்பட்டன. தெமாஸெக், தற்போது, சிங்கப்பூர் அரசின் நிறுவனங்களில் மட்டுமல்லாது, ஆசியாவின் பெரும் நிறுவனங்களிலும், அரசுப் பணத்தை முதலீடு செய்துவருகிறார்கள்**. அரசுக் கம்பெனி என்றாலே, நஷ்டக் கம்பெனி என்று எல்லோரும் முடிவு கட்டும் இந்த நாட்களில், தெமாஸெக், தன் முதலீடுகளில் தொடர்ந்து 16 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபம் ஈட்டி வருகிறது. சேமிப்புக் கணக்கிலும், வைப்பு நிதியிலும், வட்டி விகிதம் சுமார் ஒரே ஒரு சதவிகிதம்தான் என்று பார்க்கும்போது, இது எத்தனை பெரிய வருமானம், எத்தனை சிறந்த நிர்வாகத் திறமை!

______________________________________________________________________________________

* 1966 - இல், மலேஷியா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்று அழைக்கப்பட்டது. 1972 - இல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேஷியன் ஏர்லைன் சிஸ்டம் என்னும் இரண்டு நிறுவனங்களாகப் பிரிந்தது.

** தெமாஸெக் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களில், இந்தியாவின் பார்தி ஏர்டெல் ஒன்று.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com