24. தலாக், தலாக், தலாக்!

மலேஷிய மத்திய அரசு, சிங்கப்பூருக்கும், குறிப்பாக லீக்கும் சிரமம் தரும் வேலைகளைப் பல்வேறு கோணங்களில் தொடங்கியது. நவம்பர் 24, 1964. மலேஷிய நிதி அமைச்சர் டான் ஸியூ ஸின் (Tan Sieu Sin) நாட்டின் பட்ஜெட்டை

மலேஷிய மத்திய அரசு, சிங்கப்பூருக்கும், குறிப்பாக லீக்கும் சிரமம் தரும் வேலைகளைப் பல்வேறு கோணங்களில் தொடங்கியது. நவம்பர் 24, 1964. மலேஷிய நிதி அமைச்சர் டான் ஸியூ ஸின் (Tan Sieu Sin) நாட்டின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பல புது வரிகள். எல்லா பிசினஸ்கள் மீதும் ஒன்றரைச் சதவிகிதம். அவர்கள் ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்துக்கு  இரண்டு சதவிகிதம். இந்த வரிச்சுமைகள் பிசினஸ் வளர்ச்சியைத் தடுக்கும்: புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை நிறுத்தும்.

மலாயைவிடச் சிங்கப்பூரில்தான் அதிக பிசினஸ்கள் இருந்தன. அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புதிய பிசினஸ்களை சிங்கப்பூருக்குக் கொண்டு வருவதுதான், லீயின் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை. இந்த அடிப்படையைத் தகர்ப்பதுதான், புதிய வரிகளின் நோக்கம், ஆகவே, லீ இந்த வரிகளைக் கடுமையாக எதிர்த்தார். மலேஷிய அரசு, இந்த வரிகளை வாபஸ் பெறவேண்டும் என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.

துங்குவின் பதில் வந்தது. காட்டமான பதில். லீயை அதிரவைத்த பதில். ‘சிங்கப்பூர் அரசியல்வாதிகள் யாருக்காவது இந்த வரிகள் குறித்து எங்களோடு கருத்து வேறுபாடுகள் இருந்தால், ஒரே தீர்வு, சிங்கப்பூர் மலேஷியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகப் போவதுதான்.’

மத்திய அரசின் பிற நடவடிக்கைகள், சிங்கப்பூரைத் துரத்தும் செயல்களோ என்னும் நியாயமான பயத்தை லீ மனதில் உண்டாக்கின. ‘மலேஷியா முழுக்க வறுமையில் வாடும்போது, சிங்கப்பூர் மட்டும் பாலைவனச் சோலையாக இருக்கமுடியாது’ என்றார் நிதி அமைச்சர் டான். அவர் செயல்கள் இந்தப் பேச்சின் பாணியில் தொடர்ந்தன.

சிங்கப்பூரில் தொழில் தொடங்க விரும்பும் முனைவர்கள், தங்கள் விண்ணப்பங்களைச் சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சிக் குழுமத்துக்கு (Singapore Economic Development Board) அனுப்ப வேண்டும். இந்தக் குழுமம் பரிந்துரை செய்தால், 5 முதல் 10 வருடங்களுக்கு அரசாங்கம் வரி விலக்கு தரும். மலேஷியாவோடு இணைந்தபின் 69 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றுள் 67 விண்ணப்பங்களை ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி, மத்திய அரசு தள்ளுபடி செய்தது. இரண்டு தொழிலகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது.

இதேபோல், சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் இன்னொரு தகிடுதத்தத்தை மத்திய அரசு செய்தது. உலக வாணிபத்தில் பெரும்பங்கு ஜவுளிப் பொருட்களுக்கு உண்டு. வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதியில் வாய்ப்புக்கள் தருவதற்காக, உலக வணிகக் கழகம் (World Trade Organization),   பங்குமுறை (Quota System) என்னும் திட்டத்தை அமல்படுத்தினார்கள். இதன்படி, ஒவ்வொரு நாடும் எவ்வளவு டாலர் மதிப்புக்கு ஜவுளி சாமான்கள் ஏற்றுமதி செய்யலாம் என்று உலக வணிகக் கழகம் உச்சவரம்பு நிர்ணயித்திருந்தது. மலாயாவும், சிங்கப்பூரும் தனி நாடுகளாக இருந்தபோது அவர்களுக்குத் தனித்தனியான உச்சவரம்புகள் இருந்தன. இரு நாடுகளும் இணைந்ததும் இந்த உச்சவரம்புகள் இரண்டும் ஒன்றாகக் கூட்டப்பட்டன.       

மலேஷிய மத்திய அரசு, சிங்கப்பூரில் ஏற்கெனவே இருந்த தொழிற்சாலைகளுக்கு இந்தக் கோட்டாவைத் தர மறுத்தது. மலாயாவில் ஜவுளி ஏற்றுமதிக்காகப் புதிய தொழிற்சாலை தொடங்கியது. சிங்கப்பூர் தொழிலின் வயிற்றில் அடிக்கும் வேலை இது. சுமார் 2000 சிங்கப்பூர் தொழிலாளிகள் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்கள்.

இமையே கண்களைக் குத்துமா, பெற்ற தாயே தன் பச்சிளம் குழந்தைக்கு நஞ்சு ஊட்டுவதுண்டா? செய்தார்களே! லீ என்னும் தனிமனிதர் மீது இருந்த காழ்ப்பால், அவர் வளர்ந்துவிடுவாரோ என்னும் பயத்தால், மலாயா ஆட்சியாளர்கள் சிங்கப்பூரின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதோடு மட்டுமல்ல, உள்நாட்டு அமைதியைக் கெடுக்கும் இனக் கலவரங்களையும்  தூண்டிவிட்டார்கள். மலாய்க் குண்டர்கள் கலவரங்களைத் தொடங்குவார்கள். சீனர்கள், இந்தியர்கள் ஆகியோரின் சொத்துக்களை அழிக்கும்போது, போலீஸ் அந்தக் குண்டர்களுக்குப் பாதுகாப்புத்தரும். சீனர்கள் பதிலடி கொடுக்கும்போது,  போலீஸ் அவர்களை அடித்து விரட்டும், கைது செய்யும். கலவரம் பரவும். சாதாரண மலாய்களும், சீனர்களும் அடித்துக்கொள்வார்கள். கம்யூனிஸ்ட்கள் என்னும் கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்புவதற்காக எரியும் இனவெறியர்கள் அடுப்பில் சிங்கப்பூரை விழ வைத்துவிட்டோம் என்று லீ உணர்ந்தார். ஐயோ, ஏதோ கணக்குப்போட்டு, சிங்கப்பூருக்குக் கெடுதல் செய்துவிட்டோமே என்று அவர் மனச்சாட்சி குத்தியது.  

மலேஷியாவிலிருந்து லீ நெஞ்சைக் குறிவைத்து வந்தது இன்னொரு விஷக்கத்தி. மலாய் இன ஆதரவுக் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின்கீழ்க் கொண்டுவரத் துங்கு திட்டமிட்டார். அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இதற்குப் பதிலடியாக, இன ஒற்றுமையை விரும்பும் நல்லிணக்க எதிரணி அமைக்க லீ முடிவு செய்தார்.

துங்குவின் ‘குரலான’ அல்பர் இப்போது கீழ்த்தரத் தாக்குதல்கள் தொடங்கினார். மலேஷியா நாளிதழான உட்டூஸான் மெலாயு (Utusan Melayu) அவர் குரலானது. லீ இந்தோனேஷியக் கைக்கூலி, கம்யூனிஸ்ட்களின் அடிவருடி, போலிவேடம் போடுபவர், தேசத்துரோகி, கிரிமினல், கலவரங்களைத் தூண்டிவிட்டு எளிய மக்களின் சாவுக்குக் காரணமானவர், சிங்கப்பூர் முதல்வராகத் தொடரத் தகுதியவற்றவர் என்று அளவில்லாச் சேற்றை அள்ளிவீசினார்கள். தங்கள் குற்றச்சாட்டுக்களை வாபஸ் வாங்குமாறும், மன்னிப்புக் கேட்குமாறும் லீ வேண்டுகோள் விடுத்தார். மறுத்தார்கள். இருவர் மீதும், லீ இங்கிலாந்துக் கோர்ட்டில் மானநஷ்ட வழக்குத் தொடுத்தார். பொய்க் குற்றச்சாட்டுக்கள் நீதிமனறத்தில் எடுபடாது, தங்கள் வேஷம் கலைந்துவிடும் என்று உணர்ந்த அலிபரும், உட்டூஸான் மெலாயுவும் மன்னிப்புக் கேட்டார்கள்.

துங்கு அடுத்து இன்னொருவரைக் களத்தில் இறக்கினார். அவர் துங்குவின் வலது கை என்று அறியப்பட்ட ரஸாக். ‘மலாய் இனத்தவர்கள் மலாய் நாட்டின் மண்னின் மைந்தர்களல்ல, அவர்களும் புலம் பெயர்ந்து வந்தவர்கள்தாம்’ என்று லீ அறிக்கை விட்டதாகக் குற்றம் சாட்டினார். அப்படிப்பட்ட அறிக்கையைத் தான் வெளியிடவேயில்லை என்று லீ மறுத்தார். ரஸாக் கவலைப்படவேயில்லை. தாக்குதலை இன்னும் கடுமையாக்கினார். ‘எங்களோடு நல்லுறவு வேண்டுமென்றால், சிங்கப்பூர் மக்கள் நேர்மையான இன்னொரு தலைவரைக் கண்டுபிடிக்கவேண்டும்.’  துங்குவும் போரில் கலந்தார். ‘லீயின் அறிக்கை குழந்தைத்தனமானது.’

லீ அரசியலில் இருக்கும்வரை, சிங்கப்பூர் மலேஷியாவின் ஒரு பகுதியாக நீடிக்கமுடியாது என்று மலேஷியத் தலைவர்கள் ஒவ்வொருவரின் பேச்சுக்கள், அறிக்கைகள். ‘சிங்கப்பூர் மலேஷியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகப் போனாலும், 15 லட்சம் சீனர்கள், 10 கோடி மலாய்களால் சூழப்பட்டிருப்பார்கள். இதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று மத்திய நிதியமைச்சர் டான் மிரட்டினார்.

சிங்கப்பூர் தனிநாடாகவேண்டும் என்று தான் கனவில்கூட நினைப்பவனல்ல என்று லீ தன்னிலை விளக்கம் தந்தார். காதுகளை மூடிக்கொண்டவர்களுக்கு நேர்மையின் குரல் கேட்கவில்லை. அல்பர் ஒரு பொதுக்கூட்டத்தில் சவால் விட்டார், ‘லீ குவான் யூ ஆண்மகனாக இருந்தால், மலேஷியாவிலிருந்து பிரிந்துபோகவேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்கவேண்டும்.’ (பின்னாட்களில் மலேஷியப் பிரதமரான) உம்னோ கட்சித் தலைவர் மாத்திர் பின் முகமது PAP கட்சி சீன, கம்யூனிஸ்ட் ஆதரவுக் கட்சி, மலாய்களை வெறுக்கும் கட்சி’ என்று பழித்தார்.

தன் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்கவும், அது முடியாவிட்டால், சிங்கப்பூரை மலேஷியாவிலிருந்து துரத்தவும் துங்கு முடிவெடுத்துவிட்டார் என்பது லீக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. பொய்ப் பிரச்சாரத்துக்குச் சாவு மணி அடித்தாகவேண்டும்.

சிங்கத்தின் குகைக்கே போய், மலேஷியப் பாராளுமன்றத்தில், கர்ஜித்தார், ‘நாட்டின், மலாய்களின் முக்கிய பிரச்சனை வறுமை. அவர்கள் வாழ்க்கையை உயர்த்துவதற்கான தீர்வு  ஒதுக்கீடுகளல்ல. சமுதாயம் போட்டிகள் நிறைந்தது. கல்வி, பயிற்சி ஆகியவற்றால் மலாய்கள் தங்களை உயர்த்திக்கொள்ளவேண்டும்.’ மலாய்கள் தன்னை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், தான் அவர்களின் எதிரியல்ல என்று நிரூபிக்கவும், லீ இந்த உரையை மலாய் மொழியில் நிகழ்த்தினார். இன வேறுபாடற்ற, திறமையின் அடிப்படையிலான சமுதாயம் அமைப்பதுதான் லீயின் பாதை என்னும் தொலைநோக்குப் பார்வையை இந்தப் பேச்சு வெளிச்சம் போட்டுக் காட்டியது. பாராளுமன்றத்தில் ஊசி விழுந்தாலும் கேட்காத அமைதி. அவர்மேல் வெறுப்பைச் சுமந்த உம்னோ கட்சி உறுப்பினர்கள்கூட மெய்மறந்தார்கள்.

லீயின் உரைக்குப் பதிலளிக்க வந்தார் அமைச்சர் ரஸாக். திசை திருப்பினார். உரைக்கு சம்பந்தமே இல்லாத பதில் சொன்னார், ‘நமக்கும் PAP கட்சிக்கும் இருக்கும் இடைவெளி இப்போது தெளிவாகிவிட்டது. PAP கேட்பது பிரிவினை.’

லீயின் துணிச்சலான பேச்சு, மலாய் இனவெறிக்கு எதிரான பல்வேறு கட்சிகளைச் சங்கமிக்கவைத்தது. சிங்கப்பூர், மலாயா, சராவாக் ஆகிய பகுதிகளில் இருந்த மூன்று எதிர்க் கட்சிகள் அவர் தலைமையில், மத்திய அரசின் மலாய் இனவெறியை முறியடிக்க முன்வந்தார்கள். ஜூன் 6, 1965. நான்கு கட்சிகளின் ஒருங்கிணைப்பு மாநாடு சிங்கப்பூரில் கூடியது. 3000 பேர் கொள்ளளவு கொண்ட அரங்கம் நிரம்பி வழிந்தது. எல்லாத் தலைவர்களின் பேச்சுக்களிலும் அனல் வெடித்தது.   

‘எந்த ஒரு இனமும் பிற இனங்களை அடக்கி ஆளாமல், இனபேதமின்றி எல்லாக் குடிமக்களும் சமமாக நடத்தப்படும் நாடுகள் மட்டுமே ஒன்றுபட்டவையாக வாழமுடியும்.’ – சின் சை (Chin Chye), PAP கட்சி சேர்மேன்.

‘மலாயர்கள் அல்லாதவர்களுக்கு சம உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது நிறுத்தப்படவேண்டும்.’ – ஓங் கீ ஹூயி (Ong Kee Hui), சராவாக் பகுதியின் யுனைட்டெட் பீப்பிள்ஸ் கட்சித் தலைவர்.

‘நாம் இப்போதைய முயற்சிகளில் தோல்வி கண்டால், நமக்கும் நம் வாரிசுகளுக்கும், எதிர்காலம் கிடையாது, சமத்துவ சமுதாயம் இருக்காது.’ – லிம் சோங் இயூ (Lim Chong Eu), யுனைட்டெட் டெமோக்ரட்டிக் கட்சித் தலைவர்.

லீ ஒருங்கிணைப்பு மாநாட்டின் இறுதி உரை நிகழ்த்தினார். ‘இனவெறி தொனிக்கும் கடுமையான வார்த்தைகள், மிரட்டும் செயல்கள், தொண்டர்களுக்கு விடுக்கும் சமிக்ஞைகள்...இந்த நிலை நீடித்தால், மலேஷியா மலேஷியர்களுக்குச் சொந்தமானதாக இருக்காது.’ மலேஷியர்கள் என்றால், மலாய், சீனர்கள், இந்தியர்கள் என்று மலேசியாவின் மூன்று இனக் குடிமகன்களையும் குறிக்கும். உம்னோ தலைவர்கள் இந்தப் பேச்சைத் திரித்தார்கள். மலேஷியாவில் இருக்கும் மலாய் மக்களை ஒழித்துக்கட்டுவதாக லீ பேசியதாக விபரீத அர்த்தம் சொன்னார்கள்.

லீ கைது செய்யப்படலாம், அவர் அப்படிப் பதவி இழந்தால், சக அமைச்சர்களுள் ஒருவர் முதலமைச்சர் நாற்காலியில் அமரத் தயாராக இருக்கிறார்கள் என்று வதந்திகள் பரவின. (பரப்பப்பட்டன). சக அமைச்சர்கள் கூட்டறிக்கை விட்டார்கள் – எங்கள் தலைவர் லீக்கு எப்போதும் துரோகம் செய்யமாட்டோம். அவர் மட்டுமே முதல்வர்.

துங்கு அரசுக்கும் லீ ஆட்சிக்குமிடையே இரும்புத் திரை விழுந்துவிட்டது, பரஸ்பர நம்பிக்கை சிதறிவிட்டது. ஒரே நாடாகத் தொடர, ஏதாவது செய்தாகவேண்டும். அதிகாரப் பகிர்வை மறுபரிசீலனை செய்யலாமா, சிங்கப்பூரை மலேஷியாவின் அங்கமான தனிநாடு ஆக்கலாமா? லீ மனதில் பல்வேறு மாற்றுச் சிந்தனைகள். துங்குவின் அமைச்சர்களோடு, குறிப்பாக அவரது வலதுகரம் ரஸாக்கைப் பலமுறை சந்தித்தார். ஆனால், அவரோ கழுவும் நீரில் நழுவும் மீனாக இருந்தார். எங்கே போகிறது பாதை என்று லீயால் கணிக்கவே முடியவில்லை.

ஏகப்பட்ட முயற்சிகளுக்குப் பின் துங்குவைச் சந்தித்தார். துங்குவின் மனக்கதவுகள் மூடிவிட்டன, இணைப்பு முறியப்போகிறது என்று லீ மனதில் எச்சரிக்கை மணிகள். அதுவே நடந்தது. துங்கு சொன்னார், ‘நான் முடிவெடுத்துவிட்டேன். நாங்கள் எங்கள் வழியில் போகிறோம். நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். நமக்குள் உறவுகள் இருக்கும்வரை, நாம் நண்பர்களாக வாழ முடியாது. பிரிவோம், நட்பைத் தொடர்வோம்.’        

வரும் வழியில் லீ, மலேஷிய நிதி அமைச்சர் டானைப் பார்த்தார். அநியாய வரிகள் போட்டுச் சிங்கப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு நந்தியாக இருந்தவர் இவர்தானே என்று கோபம் கொப்பளித்தது. அவரிடம் பேசினார். அது பேச்சல்ல, தன்மானச் சவால். ‘இந்த நாள், உங்கள் வெற்றித் திருநாள், நாங்கள் தோல்வி காணும் நாள். ஆனால், 5, 10 வருடங்களுக்குள் இந்த நாளை நினைத்து நினைத்து நீங்கள் வருத்தப்படுவீர்கள்.’ 

அடுத்த சில வாரங்கள். லீ கண்கள் தூக்கம் மறந்தன. ஆயிரமாயிரம் வேலைகள். சிங்கப்பூர் மலேஷியாவிலிருந்து பிரியவேண்டிய கட்டாயம் பற்றிச் சக அமைச்சர்களைத் திருப்திப்படுத்தவேண்டும்: முக்கிய அதிகாரிகளிடம் செய்தியைப் பகிர்ந்துகொண்டு, அவர்களுடைய தொடர்ந்த அர்ப்பணிப்பைப் பெறவேண்டும். வெளிநாட்டுத் தூதர்களிடம் புதிய தனிநாடான சிங்கப்பூரின் நட்புக் கரங்களை நீட்டி, அவர்களின் நல்லுறவை நாடவேண்டும். 

அந்த நாள், மலேஷிய நாடு துண்டுபடும் நாள் வந்தது. ஆகஸ்ட் 9, 1965. காலை மணி 10. மலேஷிய நாடாளுமன்றத்தில் பிரிவைத் துங்கு அறிவித்தார். சிங்கப்பூரில் அரசாங்கம் கெஜட்டில் அறிவிப்புச் செய்தது. சிங்கப்பூர் வானொலியில் இரு நாடுகளின் பிளவு (பிரிவு) பற்றிய அறிக்கையைச் சம்பிரதாயப்படி பிரதமர் லீ படிக்கவேண்டும். அவர் படிக்கவில்லை. வானொலி அறிவிப்பாளர் படித்தார். ‘வேறு வேலைகள் இருந்ததால் என்னால் படிக்கமுடியவில்லை’ என்று லீ சொன்னார். இது பச்சைப் பொய். ஏன் தெரியுமா?  

லீ சாயம் அன்று மதியமே வெளுத்தது. லீ பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார். அவரை நோக்கிச் சரமாரியாகக் கேள்விகள் -  இந்தோனேஷியாவோடு உறவு வைத்துக்கொள்வீர்களா, பொருளாதார முன்னேற்றத்துக்கு உங்கள் திட்டங்கள் என்ன, உங்கள் குட்டி நாட்டின் பாதுகாப்புக்கு என்ன செய்யப்போகிறீர்கள், கம்யூனிஸ்ட் ரஷ்யாவோடு உங்கள் பழகுமுறை என்ன? அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாக, உறுதியாகப் பதில்கள் சொன்னார்.

அப்போது ஒரு கேள்வி, ‘இன்று காலை அறிவிக்கப்பட்ட அரசாணையின் பின்னணி நிகழ்ச்சிகளைச் சொல்லமுடியுமா?’

லீ துங்குவோடு நடந்த பல பேச்சு வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். ‘எனக்கு இது மிகவும் சோகமான நேரம். ஏனென்றால், அறிவு தெரிந்த நாட்கள் முதலாக, மலாயா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் இணைப்பையும், ஒற்றுமையையும் நம்பியவன் நான். பூகோளத்தால், பொருளாதாரத்தால், ரத்த பந்த உறவுகளால் ஒன்றுபட்ட நாடுகள் இவை.’

இதற்குமேல் லீயால் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களில் நீர் பொங்கியது. பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். 20 நிமிடங்கள் டி.வி. காமெராக்கள் நிறுத்தப்பட்டன.

நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றிவிட்டோமே என்னும் அதிர்ச்சி கொண்ட இந்த மனிதர் நிச்சயமாக, அரசு ஆணையை வானொலியில் படிக்க முடியாமல் திண்டாடித் திணறியிருப்பார். இதனால்தானே, ‘வேறு வேலைகள் இருந்ததால் என்னால் படிக்கமுடியவில்லை’ என்று பொய் சொன்னீர்கள் லீ?  ஆமாம், தொப்புள் கொடியை அறுத்த மலேஷியாவின் கொடூரம், எதற்கும் கலங்காத அஞ்சாநெஞ்சர் இதயத்தைச் சுக்கல் சுக்கலாக்கிவிட்டது.

சிங்கப்பூர் இனிமேல் மலேஷிய நாட்டின் ஒரு மாநிலமல்ல, சர்வ உரிமைகளும் கொண்ட தனி தேசம், தன் தலைவிதியைத் தானே நிர்ணயிக்கப்போகும் தேசம்.

மலேஷியாவும், சிங்கப்பூரும் பிரிந்தது ஏன்? பல காரணங்கள். சீனர்களையும், இந்தியர்களையும் அடக்கி ஆள நினைத்த மலாய்த் தலைவர்களின் இனவெறி, சிங்கப்பூரை வளரவிடாமல், அவர்கள் போட்ட பொருளாதாரத் தடைகள் என்று லீ சொல்லுவார்: துங்கு ஒருவேளை சொல்லுவார், ‘என் ராசி மோதிரம் அணியாமல் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட்டதுதான் காரணம்’ என்று.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com