25. சவாலே சமாளி!

புதிய நாடு பிறந்துவிட்டது. நெருப்பில் ஞானஸ்நானம் ஆரம்பம். லீ மனசு முழுக்க பிரிவுத் துயர். மனம் நிறையக் கலக்கம், குழப்பம், பயம். கைகளில் இருப்பதோ பச்சிளம் குழந்தையாக நாடு.

புதிய நாடு பிறந்துவிட்டது. நெருப்பில் ஞானஸ்நானம் ஆரம்பம். லீ மனசு முழுக்க பிரிவுத் துயர். மனம் நிறையக் கலக்கம், குழப்பம், பயம். கைகளில் இருப்பதோ பச்சிளம் குழந்தையாக நாடு. இருபது லட்சம் மக்களின் தலைவிதி அவர் கையில். இயற்கைச் செல்வங்கள் எதுவுமே கிடையாது. குடிக்கும் தண்ணீருக்குக் கூட  மலேஷியாவிடம் கையேந்தவேண்டிய கட்டாயம்.

எங்கே திரும்பினாலும், பற்றி எரியும் பிரச்சனை நெருப்பு. விழுங்கிவிடத் துடிக்கும் அண்டை நாடுகள் மலேஷியா, இந்தோனேஷியா; காணும் இடமெல்லாம் குடிசைகள், குப்பை கூளங்கள், வேலைக்காக அலையும் இளைஞர்கள், நோய்களின் மூலஸ்தானமாக மருத்துவமனைகள், அரசியல்வாதிகளின் கூடாரமாகி விட்ட கல்வி நிலையங்கள், அர்ப்பணிப்பில்லாத ஆசிரியர்கள், வழிகாட்டல் இல்லாமல் திணறும்

மாணவர்கள், இளைஞர்கள், காரணமே இல்லாமல் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளிகள், அரசின் ஊழல் பெருச்சாளிகள், இனக் கலவரத் தினவெடுத்த ரவுடிகள், விரக்தியின் உச்சியில் மக்கள்…… 

இவை அத்தனையையும் தரை மட்டமாக்க, ஒன்றே ஒன்று இருந்தது. அதுதான், லீயின் மன உறுதி. மனதுக்குள் மலேஷியாவுக்கு சவால் விட்டார், ‘பொய்ம்மையும், வஞ்சமும் உன் பூர்வீகமாக இருக்கலாம், ஆனால், ரத்தமும் வியர்வையும்தான் என் ராஜாங்கம். எனது படையில் உனது படைகள் பொடிபடும். உன்னை வெல்வேன்.’ உளி தாங்கும் கற்கள் மட்டுமே மண்மீது சிலையாகும். ஆகவே, இந்தக் கனவு நனவாகவேண்டுமானால், ஒவ்வொரு சிங்கப்பூரியனும் வலி தாங்கும் உள்ளத்தோடு, தன் ரத்தம், வியர்வை, நேரம், உழைப்பு ஆகியவற்றை நாட்டுக்காக அர்ப்பணிக்கவேண்டும்.

இதை நிஜமாக்க வேண்டும் மாபெரும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. மக்கள் மனங்களில் ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, நேர்மையை, அர்ப்பணிப்பை வளர்க்கவேண்டும். திறமைக்கு அரியாசனம் போடவேண்டும். ஊழலை ஒழித்துக்கட்டவேண்டும். நாட்டின் இருபது லட்சம் மக்களுக்கும் முன்னோடியாக அவர் வாழவேண்டும்.   

லீ தன் பாதையை மக்களுக்கு விளக்கினார், உறுதிமொழி தந்தார். ‘நீங்கள் எதற்கும் கவலைப்படவேண்டாம். உறுதியாக, அமைதியாக இருங்கள். பல்வேறு இனத்தவரும் இணைந்து வாழும் சமத்துவ சமுதாயத்தை நாம் உருவாக்கப்போகிறோம். நம் நாடு மலாய்களின் நாடல்ல; சீனர்களின் நாடல்ல: இந்தியர்களின் நாடல்ல. எல்லா இனத்தவருக்கும், எல்லா மதத்தினருக்கும், எல்லா மொழியினருக்கும் இங்கே சம இடம் உண்டு. சிங்கப்பூரியர்களே, இன, மொழி, மத, கலாச்சார வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வோம்.’

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய அண்டைய பகைமை நாடுகளுக்குச் சிங்கப்பூர்மீது படையெடுத்து ஆக்கிரமிக்கும் ஆசையே வரக்கூடாது. குழம்பிய நீரில் மீன் பிடிக்கும் எண்ணமும் கம்யூனிஸ்ட்கள் மனங்களில் வரவே கூடாது. லீ முடிவு செய்தார், முதல் வேலை, ராணுவத்தையும், போலீசையும் தன் முழு நம்பிக்கைக்குரிய இரும்புக் கோட்டைகளாக்கவேண்டும்.

பிரிவின்போது, சிங்கப்பூர் ராணுவத்தில் இரண்டு காலாட்படைப் பிரிவுகள் மட்டுமே இருந்தன. இவை இரண்டிலும் சேர்த்து மொத்தம் ஆயிரமே வீரர்கள். ஒரு நாட்டின் படைபலமா இது? இவர்களிலும் எழுநூறு வீரர்கள் மலேஷியக் குடிமகன்கள். இவர்களின் தளபதி, அக்மத் அல்காஃப் (Ahmad Alsagoff) என்னும் மலேஷியர். சிங்கப்பூர் மீது எதிரி நாடுகள் படையெடுப்பு வந்தால் இவர்களை எத்தனை தூரம் நம்புலாம் என்று தெரியாது.   

வலிமையான ராணுவத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தாமாகவே முன்வந்தார், நிதி அமைச்சராக இருந்த கோ கெங் ஸ்வீ (Goh Keng Swee).  நிதிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுத்திக்கொண்டார், ராணுவ அமைச்சரானார்.   

பாதுகாப்புத்தான் முதல் வேலை என்று லீ போட்ட கணக்கு நூற்றுக்கு நூறு சரியானது என்பது சீக்கிரமே தெரிந்தது. சிங்கப்பூர் ராணுவம் புதிய வீரர்களைப் பணியில் அமர்த்திக்கொண்டிருந்தது. சிங்கப்பூரைக் கைக்குள் வைத்திருக்க, மலேஷிய அதிகாரிகள் சதி செய்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் எண்பது சதவிகிதம் பேர் மலேஷியர்கள்

பெப்ரவரி 1, 1966. ராணுவ அமைச்சர் ஸ்வீ இதைக் கண்டுபிடித்தார். அத்தனை புது நியமனங்களையும் நிறுத்தினார். மலேஷிய நாட்டவர்களை இனி ராணுவத்தில் எடுக்கக்கூடாது என்று ஆணையிட்டார். இந்தக் கட்டளையை ஒரு சீனக் கமாண்டர் தவறாகப் புரிந்துகொண்டார். படையினரை அணி வகுக்கச் சொன்னார். ‘மலாய்கள் அல்லாதவர்கள் அத்தனை பேரும் வெளியே வாருங்கள்” என்றார். வந்தார்கள். இப்போது, அணிவகுப்பில் நின்றவர்கள் மலாய் இனத்தவர்கள் மட்டுமே. முழங்கியது கமாண்டர் குரல், ‘நீங்கள் அத்தனைபேரும் மொத்தமாக ராணுவத்திலிருந்து நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.’

மலாய் வீரர்களுக்குக் கொஞ்ச நேரம் என்ன நடந்தது என்றே புரியவில்லை. புரிந்ததும், எரிமலை வெடித்தது. தொடங்கியது ராணுவத்தில் இனக் கலவரம். மலாய்கள் சீன, இந்தியச் சக வீரர்கள் மீது பாட்டில்கள், கம்புகள், உருட்டுக் கட்டைகள் எனக் கைகளில் கிடைத்தவற்றை எல்லாம் எடுத்துத் தாக்கினார்கள்; மூன்று மோட்டார் சைக்கிள்களை நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். ஒரு வேனைத் தலைகீழாகக் கவிழ்த்தார்கள். நிலைமை அறிந்து வந்த போலீஸ் காரையும், தீயணக்கும் எஞ்சினையும் உள்ளே நுழையவிடாமல் தடுத்தார்கள். ராணுவத்தினரின் புரட்சியை வேடிக்கை பார்க்கக் கூட்டமோ கூட்டம்.         

கலவரத்தை அடக்கும் தனிப்படை வந்தது. வீரர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கினார்கள், போலீஸ் வேன்களில் அடைத்தார்கள். காவல் நிலையத்துக்குக் கொண்டுபோனார்கள். ராணுவ அமைச்சர் ஸ்வீ, லீயிடம் ஓடோடி வந்தார். நிலைமையை விளக்கினார். கலவரக்காரர்கள் முகாம்களை விட்டு வெளியே வந்தால், மலாய் - சீன இனக்கலவரம் நாடு முழுக்கப் பரவிவிடும். சிங்கப்பூர் முழுக்க, ரகளை, ரத்தக் களறியாகிவிடும். என்ன செய்யலாம்?

லீ உடனேயே முடிவெடுத்தார். சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த பிரிட்டீஷ் படைத் தளபதியிடம் பேசினார், ‘தேவைப்பட்டால், உங்கள் உதவி கேட்பேன்.’ அவர் எடுத்த அடுத்த முடிவு, காவல் நிலையத்துக்குப் போய், கலவரக்காரர்களைச் சந்தித்து உண்மை நிலையை விளக்குவது. இது மிக மிகத் துணிச்சலான முடிவு. ஏனென்றால், அவர்களின் கோபம் லீ மீதுதான் மையம் கொண்டிருந்தது. அவரை அவர்கள் தாக்கலாம், அவரைக் கொலையே செய்யலாம். துணிச்சல் இருந்ததால், மரணமும் தூசு. லீ காவல் நிலையம் வந்தார்.    

அருகே இரு அமைச்சர்கள். மற்றப்படி, துணிவு மட்டுமே துணையாக, பாதுகாப்பாக லீ. சுற்றிலும், வெறுப்பிலும், கோபத்திலும் கொந்தளிக்கும் பலநூறு படை வீரர்கள்.  லீ கையில் ஒலிபெருக்கியை எடுத்தார். மலாய் மொழியில் பேசினார். அமைச்சரின் ஆணையைக் கமாண்டர் தவறுதலாகப் புரிந்துகொண்டதால் வந்த விபரீதத்தை விளக்கினார். தன் ஆட்சியில், மலாய்கள், சீனர்கள், இந்தியர்கள் என்னும் மூன்று இனத்தவர்கள் கிடையாது. அத்தனைபேரும் சிங்கப்பூரியர்கள் மட்டுமே என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துவைத்தார். மலேஷிய மலாய்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக வேண்டும். சிங்கப்பூர் மலாய்கள்   எல்லோருக்கும் வேலை உண்டு. மறுநாள் காலை, டியூட்டிக்கு அவர்கள் வந்தேயாக வேண்டும்.

அரசாங்கத்தின் கொள்கையைத் தெளிவாக்கி, அமைதி வேண்டிய லீயின் கருணை முகம் இது. மனிதநேயத்தைப் பலவீனமாகப் பலரும் கருதும் காலம், ஆகவே, அடுத்து லீ, தன் கண்டிப்பு முகத்தைக் காட்டினார். கலவரக்காரர்களில் பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தாகப் பத்துப்பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இவர்களுக்குத் தண்டனை நிச்சயம். மற்ற அத்தனைபேரும் விடுதலை செய்யப்படுவார்கள். ஒரு நிபந்தனை. யாராவது வதந்திகள் பரப்பினாலும், கலவரங்கள் செய்தாலும், கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். யாரேனும் சிங்கப்பூர் மலாய் வீரர் டியூட்டிக்கு வராவிட்டால், அரசு அவர்கள் மேல் தேசத் துரோகக் குற்றம் சுமத்திக் கடும் நடவடிக்கைகள் எடுக்கும்.

லீ பேசி முடித்தார். கை தட்டல்கள், ஆரவாரங்கள். லீ முதல் நெருப்பாற்றை  வெற்றிகரமாக நீந்திக் கடந்துவிட்டார். ஆனால், இது சோதனகளின் முடிவல்ல, ஆரம்பம். இனக் கலவரங்கள் தொடர்கதையாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதை  உணர்ந்தார். ராணுவத்திற்கும், போலீஸூக்கும் நவீன ஆயுதங்கள் தரவேண்டும், பயிற்சி அளிக்கவேண்டும்.  லீ, இந்தியா, எகிப்து, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளிடமும் உதவி கேட்டார். இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தக் கோரிக்கைக்குப் பதிலே இல்லாத ‘வழவழா கொழ கொழா’ பதில் போட்டார். நண்பர், நிச்சயமாக உதவுவார் என்று லீ நம்பிய எகிப்து அதிபர் நாஸர் கோரிக்கையை மறுத்தார். சக முஸ்லிம் நாடான மலேஷியாவுக்கு எதிரானதாக இந்த நடவடிக்கை இருக்கும் என்னும் நாஸரின் சக முஸ்லிம் சகோதரப் பாசம் இதற்குக் காரணம் என்பது லீ கணிப்பு. 

சிங்கப்பூர் ராணுவத்தை மேம்படுத்த இஸ்ரேல் முன்வந்தார்கள். இஸ்ரேலுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் ஜென்மப் பகை. இஸ்ரேலிடம் உதவி வாங்குவது தெரிந்தால், பெரும்பாலான முஸ்லிம் மதத்தவரான மலாய் இனத்தவர்கள் கொதித்தெழுவார்கள். ஆகவே, மெக்சிகோ நாட்டிடம் உதவி வாங்குவதாக அரசாங்கமும், அரசு வழிகாட்டலில் ஊடகங்களும், மக்கள் மனங்களில் மாயத் தோற்றத்தை உருவாக்கினார்கள். 

இஸ்ரேல் உதவியோடு சிங்கப்பூர் அரசு நம்பவே முடியாத ஒரு திட்டம் தீட்டியது. அடுத்த ஐந்து வருடங்களில், ஒன்றரை லட்சம் பேர் கொண்ட சிங்கப்பூர் ராணுவம் (Singapore Armed Force)  என்னும் படை திரட்டவேண்டும். யாராவது கேட்டிருந்தால், கூரைமேல் ஏறமுடியாத கோழி வானத்தில் பறந்து வைகுந்தம் போக ஆசைப்பட்ட கதையாக இதை நினைத்திருப்பார்கள். ஏன் தெரியுமா? அன்றைய சிங்கப்பூர் ராணுவத்தில் இருந்தவர்கள் வெறும் ஆயிரம் பேர். ஆயிரத்திலிருந்து பல  லட்சம் வீரர்கள்.  அதுவும் ஐந்தே வருடங்களில்………..நடக்கக்கூடிய காரியமா? ஆனால், இது நடக்கும் என்பதில் ஒரு மனிதர் படா நிச்சயமாக இருந்தார். அவர் லீ. ஏன் தெரியுமா? அவரைப் பொறுத்தவரை, ‘முடியாது என்னும் வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே உண்டு.’ ஆனால், இலக்கை எட்டுவதற்குள் சந்தித்த பிரச்சனைகள், அவற்றை லீ சமாளித்த முறைகள்……..

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com