முடியும் வரை கல்

போய்ச் சேர வேண்டியவர்களுக்குப் போய்ச் சேரும் வரை, சலிக்கவே சலிக்காமல் சிலவற்றை மீண்டும் மீண்டும் பேசவேண்டி இருப்பதன் அவசியத்தை உணர்கிறேன். “கூறியது கூறல் குற்றம்” என்ற மரபை உடைத்துக்கொண்டும், கல்வி குறித்து மீண்டும் மீண்டும் சிலவற்றைப் பேசவே ஆசைப்படுகிறேன். “எல்லாமே மோசம்” என்ற பொதுக் கருத்தை, சகலத்தையும் நாசப்படுத்தும் மிக முக்கியமான காரணிகளுள் ஒன்றாக நான் பார்க்கிறேன். 

எல்லாம் மோசம் என்ற கருத்துக்குள் நிபந்தனையற்று விழுவதன் மூலம், நல்லவற்றை அங்கீகரிக்கவும் கொண்டாடவும் நாம் தவறுகிறோம் என்றே உணர்கிறேன். இந்தத் தவறை, கல்வித் தளத்திலும் நாம் செய்கிறோம் என்றே படுகிறது. நல்லவற்றைத் தட்டிக் கொடுத்து ஒன்று திரட்டாமல், அல்லவற்றை அப்புறப்படுத்த இயலாது. எனவே, நல்லவற்றைத் தட்டிக் கொடுத்து அல்லவற்றுக்கு எதிராக ஒன்று திரட்ட நிச்சயமாக இந்தத் தொடர் முயற்சிக்கும். அது முடியாதபட்சத்தில், குறைந்தபட்சமாக நல்லவற்றைத் தட்டிக் கொடுக்கிற வேலையையாவது செய்யும். 

1. எது கல்வி? 2. எது செய்யக் கல்வி? 3. மனத்தைத் தொட்ட ஆசிரியர்கள், சம்பவங்கள், பள்ளிகள், மாப்பிள்ளை பெஞ்ச்சுகள், கல்லூரிகள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொதுஜனங்கள்… என, கல்வியோடு தொடர்புடைய அனைத்தையும், அனைவரையும் கலந்துகட்டிப் பேசவும் விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன். ‘இளமையில் கல்’ என்றாள் ஔவைக் கிழவி. முடியும் வரை கல்வி அவசியம் ஆகிறது. எனவே, இத்தொடருக்கு ‘முடியும் வரை கல்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

இரா. எட்வின்

இரா. எட்வின்

மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், தொழிற்சங்கத் தலைவர், கலை இலக்கியச் சமூகச் செயற்பாட்டாளர், கல்வியாளர் என்னும் பன்முக ஆளுமைகொண்டவர். பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் கல்லூரியில் விரிவுரையாளராகத் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய எட்வின், தற்போது சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். சமுதாய மாற்றத்தில் ஆர்வமுடையவர். ஆசிரியர்களின் உரிமைகளைக் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள எட்வின், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான தொழிற்சங்கத்தில் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். மூன்று கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சென்னையில் இருந்து வெளிவரும் ‘காக்கைச் சிறகினிலே’ இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பொறுப்புவகிக்கிறார். இவருடைய வலைத்தளம் http://www.eraaedwin.com.

முடியும் வரை கல்

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை