பகுதி 20: உடற்பயிற்சி என்னும் மூடநம்பிக்கை

மெதுவான வேகத்தில் நாளின் பெரும்பகுதியை வேலை செய்தே கழித்தார்கள் பழங்குடிகள். இது உடற்பயிற்சி அல்ல; வேலை. ஒரு மணி நேரம் ட்ரெட்மில்லில் காட்டுத்தனமாக ஓடி உடலை புண்ணாக்கிக்கொண்டு, சத்து பானங்களைக் குடித்துவிட்டு டிவி முன் சரியும் நாகரிக மனிதனின் உடற்பயிற்சி முறை, ஆதிமனித உடற்பயிற்சி முறைக்கு முற்றிலும் முரணானது

1970-80-களில், உடற்பயிற்சி செய்யாததால்தான் குண்டாக இருக்கிறோம் எனும் மூடநம்பிக்கை மக்களைப் பிடித்து ஆட்டத் துவங்கியது. மேலைநாடுகளில் டிரெட்மில், எக்ஸர்சைக்கிள் போன்ற உடற்பயிற்சிச் சாதனங்கள், மக்களிடையே இந்த டிரெண்டை பயன்படுத்தி விற்கப்பட்டன. உடல் இளைக்கிறேன் என புத்தாண்டு சமயம் சபதம் எடுக்கும் பலரும் செய்யும் முதல் வேலை, உடற்பயிற்சி நிலையங்களில் சென்று உறுப்பினர் ஆவதே.

புத்தாண்டு சமயத்தில்தான் பலருக்கும் தம் ஆரோக்கியம், உடல்நலன் பற்றிய கவலை பிறக்கும். புத்தாண்டு சபதமாக, எடைக் குறைப்பு என்னும் லட்சியத்தை மேற்கொள்வார்கள். இதைப் பயன்படுத்தி, மேலைநாடுகளில் பல உடற்பயிற்சி மையங்கள் புத்தாண்டு சமயம் நுழைவுக் கட்டணத்தை தள்ளுபடி செய்தும், சலுகைகள் அறிவித்தும் உறுப்பினர்களை ஈர்க்கும்.

இப்புத்தாண்டு சபதங்கள் எல்லாம் பிப்ரவரி மாதம் வரும்போது மக்களுக்கு மறந்துபோயிருக்கும். ஆரம்பகட்ட உற்சாகத்தில், தினமும் பல மைல்கள் நடந்தும், ஓடியும் உடற்பயிற்சி செய்துவிட்டு, அதன்பின் கைகால் சுளுக்கி, வலி எடுத்து, ஓடுவது என்றாலே அலுப்படைந்து, அதன்பின் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு, டயட்டையும் நிறுத்திவிட்டு, பழையபடி எடையை ஏற்றிகொள்வார்கள்.

மக்களிடையே பரவலாகப் பரவியிருக்கும் உடற்பயிற்சி குறித்த மாயைகள்

  1. உடற்பயிற்சி செய்யாததால்தான் குண்டாகிறோம். அதனால் உடற்பயிற்சி செய்தால் எடை இறங்கிவிடும்.

  2. ஆதிமனிதன், காட்டில் பல மைல்கள் ஓடியாடி வேட்டையாடியதால்தான் ஆரோக்கியமாக இருந்தான்.

  3. நம் முன்னோர்கள் எல்லாம் ஒல்லியாக இருந்ததற்குக் காரணம், அவர்கள் காரில் போகாமல், நடந்தும் சைக்கிளில் போனதுமே.

இவை எல்லாம் உண்மையா? இல்லவே இல்லை. இந்த நம்பிக்கைகளின் பின்புலனையும், இதன் அறிவியல்ரீதியான தவறுகளையும் காண்போம்.

தவறான நம்பிக்கை 1

உடற்பயிற்சி செய்யாததால்தான் குண்டாகிறோம். அதனால் உடற்பயிற்சி செய்தால் எடை இறங்கிவிடும்.

மிதமான உடற்பயிற்சி மாரடைப்பை தடுக்கும், பிரஷரை தடுக்கும், சில வகை கேன்சர்களைக்கூட தடுக்கும், புத்துணர்வு அளிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், எடையைக் குறைக்க அது பொதுவாகப் பலனற்ற விஷயம்.

உதாரணமாக, ஒரு கேன் கோக்கில் உள்ள கலோரிகளை எரிக்க 35 நிமிடம் நடக்க வேண்டும்.

15 உருளைக்கிழங்கு சிப்ஸை எரிக்க 12 நிமிடம் அதிக வேக ஸ்கிப்பிங் செய்ய வேண்டும்.

1 சாக்லட் பாரை எரிக்க 52 நிமிடம் ஓட வேண்டும்.

ஆக, கலோரிகள் கணக்கின்படி பார்த்தால், நீங்கள் உடற்பயிற்சி செய்வதைவிட, தினம் உண்ணும் குப்பை உணவின் (Junk Food) அளவைக் குறைத்தால் போதும். தினம் ரெண்டு பாட்டில் கோக் குடித்து ஒரு மணி நேரம் நடப்பதைவிட, தினமும் கோக் குடிக்காமல் இருந்தாலே போதும், உடற்பயிற்சி அவசியமில்லை.

சரி, ‘நான் இரண்டையும் செய்கிறேன். கோக் குடிப்பதையும் நிறுத்துகிறேன். உடற்பயிற்சியும் செய்கிறேன். இரண்டையும் செய்தால் கூடுதல் நன்மையல்லவா?’ என்று கேட்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக, மனித உடல் இம்மாதிரி கணித அளவீடுகளின்படி இயங்குவதில்லை. உடற்பயிற்சி செய்யும் பலரும் உடற்பயிற்சி செய்யும்முன் ஒரு வாழைப்பழம், உடற்பயிற்சி செய்து முடித்தபின் காபி என எடுக்கிறார்கள்.

அமெரிக்காவில், உடற்பயிற்சி செய்பவர்களை குறிவைத்து எலக்ட்ரோலைட் நிரம்பிய பானங்கள் (Gatrorade, Powerade) விற்கப்படுகின்றன. நடுவே வெய்யில் அதிகரித்ததால் தாகம் எடுத்து இளநீர், ஜூஸ் எனப் பருகுவதும் உண்டு. அல்லது எந்தப் பானமும், சிற்றுண்டியும் எடுக்காமல் உடற்பயிற்சி செய்பவர்கள்கூட, அதனால் பசி அதிகரித்து வழக்கமாக உண்பதைவிடக் கூடுதலாக உண்பார்கள்.

என் அனுபவத்தில் சொல்வதனால், நான் காட்டுத்தனமாகத் தினமும் ஏழெட்டு கிலோமீட்டர் ஓடி உடற்பயிற்சி செய்த நாட்கள் உண்டு. 20 கி.மீ. தினமும் நடந்த நாட்களும் உண்டு. அப்படி ஓடிக் களைத்தபின், நாள் முழுக்க களைப்படைந்து சோபாவில் படுத்தபடி டிவி பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறேன்.

ஆக, உடற்பயிற்சியினால் எடை இறங்கும் என நினைப்பது மிக மிகத் தவறு. இதை ஒரு மூடநம்பிக்கை என்றுகூட சொல்லலாம். இது நான் சொல்லும் கூற்று மட்டும் அல்ல; அறிவியல் சொல்லும் கூற்றும் ஆகும்.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிஸினில் (British Journal of Sports Medicine) இது குறித்து வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றில், பிரிட்டிஷ் இதயவியல் நிபுணர் ஆஸிம் மல்ஹோத்ரா, உடற்பயிற்சிக் கலாசாரத்தை கடுமையாகச் சாடுகிறார். கீழே உள்ள லிங்க்கில் அந்தக் கட்டுரையை நீங்கள் படித்துப் பாருங்கள்.

URL: http://www.theguardian.com/society/2015/apr/22/obesity-owes-more-to-bad-diet-than-lack-of-exercise-say-doctors

கோக், பெப்ஸி மற்றும் பிற வகை சிப்ஸ், நொறுக்குத்தீனிகளை விற்கும் கம்பெனிகளும், அரசும், பிற அமைப்புகளும் சேர்ந்து, ‘உடற்பயிற்சி செய்யாததால்தான் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள்’ என மக்களை நம்பவைத்துவிட்டன. கடந்த 30 ஆண்டுகளில், அமெரிக்கர்களின் உடற்பயிற்சி அளவுகள் அதிகரித்தே வந்துள்ளன. பலரும் உடற்பயிற்சி செய்கிறார்கள்; ஓடுகிறார்கள்; உடற்பயிற்சி மையங்களில் சேருகிறார்கள். ஆனால் இதனாலெல்லாம் குண்டாக இருக்கும் மக்களின் சதவிகிதம் என்னவோ குறைவதாகத் தெரியவில்லை. மக்களின் எடை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

மிதமான உடற்பயிற்சி இதயநலனுக்கு நல்லது. ஆனால், குண்டாக இருக்கும் யாரும் அதனால் ஒல்லியாக ஆகமாட்டார்கள். அதற்கு மிகக் கடுமையான அளவில் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அவ்வளவு கடுமையான பயிற்சிகளை செய்தால், மூட்டுவலி, விபத்துகள் போன்ற பல அபாயங்கள் நேரும்.

உதாரணமாக, நடிகர் கார்த்திக்கின் தந்தை முத்துராமன், 51 வயதில் ஊட்டியில் அதிகாலையில் ஓடுகையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். டெண்டுல்கர் கடும் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல கிரிக்கட் வீரர்களும், விளையாட்டு வீரர்களும் காயங்களுக்கு அதிநவீன மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டும், வலி நிவாரணி மருந்துகள் துணையுடனும்தான் விளையாடி வருகிறார்கள்.

ஆக, மிதமான உடற்பயிற்சியால் எடை இறங்காது. அதீத உடற்பயிற்சியால்தான் எடை இறங்கும். அதேசமயம், அதீத உடற்பயிற்சியானது உடலுக்கு ஆபத்தானது என்பதால் அதைச் செய்வது ரிஸ்க். அதிலும், மிக அதிக அளவில் குண்டாக இருப்பவர்கள், வயதானவர்கள் எனப் பலரும் உடற்பயிற்சி செய்யும்போது, சின்னதாகக் கால் வழுக்கினாலும், கீழே விழுந்து முதுகெலும்பு முறிந்து மரணம் வரை செல்லும் நிலை உருவாகும்.

ஆனால், இதை எல்லாம்விட முக்கியமாக ‘உடல் இளைக்கணும்னா பார்க்கில் ஓடு, ஜிம்மில் ஓடு’ என்று சொல்லி, குண்டாக இருப்பவர்களுக்குப் பலரும் தவறான அறிவுரை கூறி, அவர்கள் சோம்பேறிகள் என மறைமுகமாகச் சொல்லாமல் சொல்கிறார்கள். ஆக, உடற்பயிற்சி செய்யாமல் உடல் இளைக்க முடியாது என மனத்தை தளரவிட்டு, அவர்கள் மேலும் மேலும் சிப்ஸ், சோடா எனக் குடித்து மேலும் குண்டாகிறார்கள்.

ஆக, உடற்பயிற்சி முக்கியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதைச் செய்வதால் உடல் இளைக்கும் என்பது தவறான வழிகாட்டுதலாகும். உடல் எடையை இறக்க, டயட்டைவிடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.

தவறான நம்பிக்கை 2

ஆதிமனிதன், காட்டில் பல மைல்கள் ஓடியாடி வேட்டையாடியதால்தான் ஆரோக்கியமாக இருந்தான்.

ஆதிமனிதன், தினமும் காட்டில் ஓடியாடி உடல்பயிற்சி செய்தான் எனப் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. ஏனெனில், காடுகளில் ஓட முடியாது. நான் சுற்றுலாவுக்காகப் பல தேசியப் பூங்காக்களில் உள்ள காடுகளுக்குச் சென்றுள்ளேன். அவற்றில் மரங்கள் அடர்த்தியாக இருக்கும். தரையில் முட்கள், கற்கள் இருக்கும். வருடத்தின் பல மாதங்கள் அவற்றில் பனி படர்ந்து இருக்கும். ஷூ, செருப்புகூட கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில், அதில் ஓடுவது மிக ஆபத்தான விஷயம். மேலும், ஆதிகாலத்தில் காட்டில் கை, கால் முறிந்தால் ஆம்புலன்ஸ், டாக்டர் என எதுவுமே கிடையாது. காட்டில் அப்படியே மரணமடைய வேண்டியதே.

ஆக, ஆதிமனிதன் ஓடிய சமயம் என்பது சிங்கம், புலி மாதிரி மிருகங்கள் துரத்தும்போதுதான். அல்லது எதாவது வேட்டையின்போது ஓரிரு நிமிடம் ஓடியிருக்கலாம். ஆனால், மனிதன் ஓடிப் பிடிக்கும் வகையான மிருகங்கள் என எவையும் காட்டில் இல்லை. மான், முயல், காட்டெருமை, யானை, குதிரை என பலவும் மனிதனைவிட வேகமாக ஓடக்கூடியவை. மனிதன் தூர இருந்து வேல் எறிந்தும், அம்புவிட்டும், குழிவெட்டியும், கண்ணி வைத்துமே வேட்டையாடினானே ஒழிய, ஓடியாடி வேட்டையாடவில்லை.

ஆதிமனிதன் மட்டுமின்றி, காடுகளில் வாழும் மான், புலி எதுவுமே ஜாக்கிங் போகாது. மான் மெதுவாக, நாள் முழுக்க நடந்தபடி புல்லை மேயும், அல்லது படுத்திருக்கும். புலி, சிங்கம் எல்லாமே அப்படித்தான். அவை வேகமெடுத்து ஓடுவது, இரையைத் தேடும் ஒரு சில நிமிடம்தான். புலி, வேட்டையின்போது மிக வேகமாக ஓடும். ஆனால், அதனால் 90 விநாடி மட்டுமே தொடர்ந்து ஓடமுடியும். 90 விநாடிகளுக்குப் புலியிடம் சிக்காமல் ஓடமுடிந்தால், நீங்கள் உயிர் தப்பிவிட முடியும். மாடு, ஆடு, மான், முயல், குரங்கு, குதிரை எதுவுமே ஜாகிங் போய் நீங்கள் பார்த்திருக்க முடியாது. அதேசமயம், அவை சோபாவில் படுத்து டிவியும் பார்க்காது.

ஆக, ஆதிமனிதன் உடற்பயிற்சி செய்யவும் இல்லை; சோம்பியும் இருக்கவில்லை. அவன் வாழ்க்கை முறை வேறு. ஆதிமனித ஆண்கள் என்ன செய்தார்கள்? வேட்டையாடினார்கள். நாள் முழுக்க கல்முனை ஈட்டியை ஏந்தியபடி, மெதுவாக மைல்கணக்கில் இரையைத் தேடி நடந்துசென்றார்கள். ஜாக்கிங் போகவில்லை, காட்டுத்தனமாக ஓடவில்லை. ஜிம்களில் நூற்றுக்கணக்கான கிலோக்களை தூக்குவது போன்று அவர்கள் செய்யவில்லை. அவர்கள் செய்தது மெதுவான, மிதமான வேலையே ஒழிய, கடும் உடற்பயிற்சி அல்ல.

ஆதிவாசிப் பெண்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் வாழ்க்கையும் நம் இந்தியக் கிராமப்புறப் பெண்கள் வாழ்க்கையும் ஒன்றே. அக்காலம் முதல் இன்றுவரை மாறாதது, வீட்டுக்குத் தண்ணீர் கொண்டுவரும் வேலை பெண்களுடையது என்பதே. மேட்டுக்குடி குடும்ப நிலை வேறு. ஆனால் ஆப்பிரிக்காவில், மைல் கணக்கில் தண்ணீர்க் குடங்களுடன் நடக்கும் பெண்களைக் காண்கிறோம்.

நான் சிறு வயதாக இருந்தபோது, குழாய்த் தண்ணீரெல்லாம் கிடையாது. அம்மா என்னை அழைத்துக்கொண்டு, தலையில்/இடுப்பில் ஒரு குடத்துடன், ஒரு மைல் தூரத்தில் உள்ள தோட்டத்துக்குச் சென்று பம்ப்செட்டில் தண்ணீர் பிடித்து வருவார். அதன்பின் தண்ணீர்க் குழாய் வந்தது. ஆனால், குழாயில் தண்ணி வராது. கைபம்பில்தான் அடிக்க வேண்டும். அதையும் அம்மாதான் செய்தார். நானும் கொஞ்சம் அடிப்பேன். சமையல், பிள்ளைகளைக் கவனிப்பது, சுள்ளி பொறுக்குவது, தண்ணீர் சேகரிப்பது என, அக்காலம் முதல் இக்காலம் வரை, பெண்கள் பணியில் பெரிதாக மாற்றம் இல்லை.

ஆக, மெதுவான வேகத்தில் நாளின் பெரும்பகுதியை வேலை செய்தே கழித்தார்கள் பழங்குடிகள். இது உடற்பயிற்சி அல்ல; வேலை. ஒரு மணி நேரம் ட்ரெட்மில்லில் காட்டுத்தனமாக ஓடி உடலை புண்ணாக்கிக்கொண்டு, சத்து பானங்களைக் குடித்துவிட்டு டிவி முன் சரியும் நாகரிக மனிதனின் உடற்பயிற்சி முறை, ஆதிமனித உடற்பயிற்சி முறைக்கு முற்றிலும் முரணானது

அதனால், நம் மரபணு சார்ந்த ஆதிமனித உடற்பயிற்சி முறை என்பது கீழ்க்காணும் வகையில் அமைய வேண்டும் –

  1. வீட்டு வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல், சமையல் செய்தல், குழந்தைகளுடன் விளையாடுதல், வீட்டை கூட்டிப் பெருக்குதல் (இதையெல்லாம் ஆண்களும் செய்யலாம்).

  2. மெதுவான, மிதமான வேகத்தில் தொலைதூரம் நடத்தல்.

  3. மாலை நேரத்தில், குழந்தைகளுடன் பார்க், பீச்சில் விளையாடுதல். ஆதிமனிதர்கள், மாலையில் கூட்டமாக நடனம் ஆடுவதை சினிமாக்களில் பார்த்திருக்கலாம். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? மாலை நேரத்தில், டிவி முன் உட்கார்ந்து விடுகிறோம்.

  4. வாலிபால், டென்னிஸ், கோல்ஃப், பேட்மின்டன், கிரிக்கெட் மாதிரி, வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக ஆடக்கூடிய விளையாட்டுகள்.

என் உடற்பயிற்சி முறை பின்வருமாறு அமைகிறது –

தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைகளைச் செய்வேன். உதாரணமாக, என் உணவை நானே தினம் சமைத்துக்கொள்வேன். பிற வீட்டு வேலைகளிலும் பங்கெடுப்பேன். தோட்டத்தில் புல் வெட்டுவேன். பனிக்காலத்தில், வீட்டில் தினமும் பனி படியும். அதை அகற்ற வேண்டும். அதுவே வாரம் மூன்று, நாலு மணி நேர வேலையாகவும் மாறிவிடும். கோடையில், குழந்தைகளுடன் மாலையில் பூங்காவுக்கு நடந்துசெல்வேன். மிதமான வேகம். சில சமயம், குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு நடப்பேன். வேலை நாட்களில் இது கிடையாது. உடற்பயிற்சி மையத்தில் உறுப்பினராக இருக்கிறேன். வாரம் ஒருநாள் அங்கே சென்று தண்டால், பஸ்கி மாதிரி உடல் எடையைப் பயன்படுத்திச் செய்யும் லேசான பயிற்சிகளைச் செய்வேன். குறைந்த எடைகளைத் தூக்குவேன். எப்படியும், வாரம் ஒரு மணி நேரத்துக்கு மேல் உடற்பயிற்சி நிலையம் செல்வதில்லை. இவற்றை தவிர்த்து வேறு எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை.

ஆக, நான் செய்யும் பயிற்சிகள் எல்லாமே பெரிய அளவிலான உடற்பயிற்சிகள் அல்ல. சாதாரண வீட்டு வேலைகள்தான். சராசரி அமெரிக்கர், தன் வீட்டில் செய்யும் வேலையைவிட அதிகமாக நான் செய்வதில்லை. அதேசமயம், சோம்பேறியாக டிவி முன் நாள்கணக்கில் அமர்ந்து நேரத்தைக் கழிப்பதும் இல்லை.

தவறான நம்பிக்கை 3

நம் முன்னோர்கள் எல்லாம், ஒல்லியாக இருந்ததற்குக் காரணம், அவர்கள் காரில் போகாமல் நடந்தும், சைக்கிளில் போனதுமே.

நம் தாத்தா பாட்டிக் காலத்தில் கார், ஸ்கூட்டர் இல்லை என்பது உண்மையே. ஆனால், அவர்கள் காலத்தில் குப்பை உணவுகளும் இல்லை; பலகாரம், இனிப்பு எல்லாம் தீபாவளி, பொங்கல் சமயத்தில்தான் சாப்பிட்டார்கள். இன்றைக்கும், உடல் உழைப்பில் ஈடுபட்டு வீட்டு வேலைகளைச் செய்துவரும் இல்லத்தரசிகள் பலருக்கும் உடல் பருமன் அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். அவர்களது உழைப்பு, அவர்களை உடல்பருமனிலிருந்து காக்கவில்லை. ஆக, இதுவும் தவறான நம்பிக்கையே.

பொதுவாக, இன்றைய வணிகமயமான விளையாட்டுகள், மனிதனின் உடல்நலத்தை முற்றிலும் சிதைப்பவையாகவே உள்ளன. இன்றைய விளையாட்டு வீரர்கள், உடல்நலன் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், போட்டி என்ற ரீதியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால், தினமும் மணிக்கணக்கில் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். கண்டகண்ட மருந்துகள், ஊக்க மருந்துகள், புரோட்டின் பவுடர் போன்றவற்றை எடுக்கிறார்கள். காயம் ஏற்பட்டால், வலி நிவாரணிகளைப் போட்டுக்கொண்டு ஆடுகிறார்கள். பல வீரர்களுக்கும் மூட்டுவலி, முதுகுவலி உள்ளிட்ட பல வலிகள் உள்ளன. இதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.

ஆக, இதெல்லாம் இயற்கையா, உடல்நலனுக்கு உகந்ததா என்றால் இல்லை. முன்பெல்லாம் அர்ஜுன ரணதுங்கா, இன்ஸமாம் உல் ஹக் மாதிரி குண்டாக இருந்தாலே கிரிக்கெட் ஆடமுடியும் என்ற நிலை இருந்தது. இன்று, கிரிக்கெட் விளையாட ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும். பந்தை பாய்ந்து பிடிக்க வேண்டும் என்பது போன்ற உடல் தகுதி விதிமுறைகள் வந்துவிட்டன. இதனால், பல விளையாட்டுகளிலும் உள்ளவர்கள், கடுமையான பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு, சிக்ஸ்பேக் எனப்படும் கட்டுடலை வளர்க்க ஆர்வம் செலுத்துகிறார்கள். நடிகர்களும் சினிமாவில் நடிக்க ஆஜானுபாகுவான உடலைப் பெற ஆர்வம் செலுத்தி, பாடிபில்டிங் துறையில் ஈடுபடுகிறார்கள்.

பாடிபில்டிங் அளவுடன் செய்தால், அது ஒரு நல்ல கலை. ஆனால், மனித உடல் எவ்வளவு பளுவை தாங்கும் என்பதில் ஒரு வரைமுறை உள்ளது. நம் மூட்டுகள், முதுகெலும்புகள் 200 கிலோ எடையைத் தாங்கும் அளவில் படைக்கப்பட்டவை அல்ல. இவ்வளவு அதிக அளவிலான எடையை தூக்கும்போது, சின்னதாகத் தவறு நேர்ந்தாலும், அதனால் ஏற்படும் விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும்.

பல விளையாட்டுகளிலும், பணம் சம்பாதிப்பதற்காக பல கம்பெனிகள், புரோட்டின் பவுடர் (protein powder), க்ரியேட்டினின் (creatinine) போன்ற மருந்துகளை விற்கிறார்கள். இதற்காக, தினமும் மிக அதிக அளவில் புரதம் உண்ண பாடிபில்டர்கள் விரும்புகிறார்கள். கம்பெனிகள், புரத பவுடரை சாக்லேட்டில் கலந்து புரோட்டின் பார் (protein bar) என்ற பெயரில் விற்கிறார்கள். புரத பவுடர்களும், கெமிக்கல்கள், இனிப்புகள், சர்க்கரைகள், செயற்கை வைட்டமின்களுடன் உள்ள உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவே ஆகும்.

ஆக, உடற்பயிற்சித் துறை இன்று வணிகமயமாகி, உடல்நலனுக்கும் கெடுதல் எனும் வகையில் சென்றுகொண்டுள்ளது. இதை இயற்கையான முறையில், மிதமான அளவு எடையுடன் செய்தால் பிரச்னை இல்லை.

உடற்பயிற்சி என்னும் பெயரில், பன்னாட்டு கம்பெனிகள் தங்களது பொருள்களை விற்று கல்லா கட்டுவதையும், குப்பை உணவுகளைச் சந்தைப்படுத்தி மக்களை குண்டாக்கிவிட்டு, உடற்பயிற்சி செய்யவில்லை என மக்கள் மேலேயே பழி போடுவதையும் நாம் புரிந்துகொள்வது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com