பழுப்பு நிறப் பக்கங்கள்

பழுப்பு நிறப் பக்கங்கள்

எனது இளம்பிராயத்து ஆசான்களில் ஒருவரான ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த தினமணியில் இதுவரை நான் எழுதியதில்லை என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது எழுதத் துவங்கும் இந்த வேளையில், எது பற்றி எழுதலாம் என யோசித்தேன். சினிமா பற்றி நிறையவே வந்துகொண்டிருப்பதால் அதைத் தவிர்க்க விரும்பினேன். 

அடுத்து, நம் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் மறதி பற்றி யோசித்தேன். ஏதோ ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவதுபோல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே நம் ஞாபகத்தில் எஞ்சியிருக்கின்றன. அதிலும் இளைய தலைமுறைக்கு பெயர்கூடத் தெரியாது. 

சார்வாகன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். எழுத்தாளர்களுக்கே அவர் பெயர் தெரியுமா என்று தெரியவில்லை. நாரணோ ஜெயராமனின் 'வேலி மீறிய கிளை' என்று ஒரு அற்புதமான கவிதைத் தொகுப்பு. உ.வே.சாமிநாதைய்யருக்கு சிலை வைத்துவிட்டோம். ஆனால் அவருடைய 'என் சரித்திரம்' என்ற நூலை எத்தனை பேர் படித்திருப்போம்? நோபல் பரிசு பெற்றதாலும், மேஜிகல் ரியலிசத்தினாலும் கார்ஸியா மார்க்கேஸின் பெயர் நமக்குத் தெரிகிறது. அவருடைய 'நூறாண்டுகளின் தனிமை' என்ற புகழ் பெற்ற நாவல் மொழிபெயர்ப்பிலும் வந்துவிட்டது. ஆனால், தென் அமெரிக்காவில் மேஜிகல் ரியலிசப் பாணியை முதல் முதலாகக் கையாண்டு வெற்றி கண்டவரான அலெஹோ கார்ப்பெந்த்தியருக்கு நோபல் கிடைக்காததால் நமக்கு அவர் பெயர் தெரியவில்லை. 

இப்படி வரலாற்றின் பக்கங்களில் மறக்கடிக்கப்பட்ட ஏராளமான பெயர்களில் ஒரு சிலரையாவது இந்தத் தொடர் மூலம் தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை