10. வைசேஷிக பதார்த்தங்கள்

வைசேஷிக தத்துவத்தின்படி, இந்த உலகம் ஏழு பதார்த்தங்களால் ஆனது. அதில் முக்கியமான பதார்த்தம், திரவியம்.

வைசேஷிக தத்துவத்தின்படி, இந்த உலகம் ஏழு பதார்த்தங்களால் ஆனது. அதில் முக்கியமான பதார்த்தம், திரவியம்.

1. திரவியம்

பொதுவாக, திரவியம் என்றால் பொருள் என்று அர்த்தம். இங்கே, திரவியம் என்பது உலகின் தோற்றத்துக்குக் காரணமான கருப்பொருள் என்ற அர்த்தத்தைத் தாங்கி நிற்கிறது. அந்த வகையில், ஒன்பது வகையான கருப்பொருள்களால் பேரண்டம் விளங்குகிறது.

எந்தவொரு பருப்பொருளும், அதாவது உருக்கொண்ட எவ்விதப் பொருளும், கருப்பொருள்களால் ஆனது. கருப்பொருள் என்ற இந்த அடித்தளத்தில்தான், ஒரு பொருளின் குணங்களும் செயல்களும் அடங்கியுள்ளன.

இந்தக் கருப்பொருள் இரண்டு வகைப்படும். ஒன்று நிலையானது, மற்றொன்று இயங்கக்கூடியது.

ஒரு கட்டடம் எழுப்ப மணல், செங்கல், சிமென்ட், நீர், இரும்புக் கம்பி போன்ற பொருள்கள் எப்படிப் பயன்படுகின்றனவோ, அப்படி இந்தப் பேரண்டம் தோன்ற 9 வகை திரவியங்கள் காரணமாகின்றன. அவற்றை வைசேஷிக சூத்திரத்தின் ஒரு ஸ்லோகம் (நூற்பா) இவ்விதம் கூறுகிறது –

ப்ருத்வியாபஹ தேஜோ வாயுராகாஸம் காலோ
திகாத்மா மன இதி த்ரவ்யாணி

இதன்படி, பிருத்வி (நிலம்), ஆப (நீர்), தேஜ (தீ), வாயு (காற்று), ஆகாஸம் (ஆகாயம் என்ற வான்), காலம், திக்கு (திசை அதாவது இடம்), ஆத்மா (உயிர்) மற்றும் மனம் ஆகிய ஒன்பதும்தான் திரவியங்கள் எனப்படும்.

இதில் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு திரவியங்களும் (கருப்பொருள்களும்) அணுக்களால் ஆனவை. இந்த நான்கு திரவியங்களும், நாம் எவ்வகையிலும் நேரடியாக உணர்ந்து அறியக்கூடியவை. இங்கே நிலம் என்பது சாதாரண வயலையோ, மண்ணையோ குறிப்பதல்ல. அதற்கு அடிப்படையான, நுண்ணிய அணுக்களால் ஆன நிலம் என்ற மூலக்கூறைக் குறிக்கிறது. நிலம், நீர், தீ ஆகிய மூன்றின் வெளிப்பாட்டை நாம் நேரடியாகப் பார்க்கலாம். ஆனால் காற்று என்னும் திரவியத்தை நாம் நேரடியாகப் பார்க்க இயலாவிட்டாலும், தொடு உணர்வு மூலம் அதனை அறிந்துகொள்ளலாம். ஐந்தாவது திரவியமாகிய வானமும் அணுக்களால் ஆனது என்றபோதிலும், அதனை நாம் எந்த வகையிலும் உணர்ந்து அறிய முடியாது, ஊகித்து அறியவே முடியும்.

இந்த இடத்திலே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். வைசேஷிகம், தான் கூறுகின்ற கோட்பாட்டை நிரூபிக்க பிரத்யட்சம் (நேரடியாக அறிதல்), அனுமானம் (ஊகித்து அறிதல்) ஆகிய இரண்டை மட்டுமே பிரமாணமாகக் கருதுகிறது. அந்த வகையில், வானம் எனப்படும் ஆகாயத்தை உய்த்து அறிய முடியாவிட்டாலும், ஊகித்து அறிய முடியும் என்கிறது வைசேஷிகம். நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு திரவியங்களும் செயல்பட இடம் கொடுப்பதே ஆகாயம் எனப்படும் கருப்பொருள்தான். இந்த 5 வகை திரவியங்களும் பூதங்கள் எனப்படுபவை. பூதம் என்றால் அடிப்படைக்கூறு, மூலப்பொருள் என்று அர்த்தம்.

இந்த பஞ்ச பூதங்களும் அணுக்களின் கலவையால் உருவானவை. தொடுதல் உணர்வை (ஸ்பரிசம்) மட்டுமே கொண்ட அணுக்களால் ஆனது காற்று. அதனுடன் நிறம் உள்ளிட்ட வடிவமும் (ரூபம்) சேர்ந்தது தீ. தொடு உணர்வு, வடிவம் ஆகியவற்றுடன் சுவையும் (ரஸம்) சேர்ந்தது நீர். இந்த மூன்று தன்மையுடன் மணமும் (கந்தம்) சேர்ந்தது நிலம். வான்வெளி என்பது ஓசைமயமானது (நாதமயமானது). இணைதல் (சுருங்குதல்), பிரிதல் (விரிதல்) ஆகிய குணங்களைக் கொண்ட இந்த வானம்தான், அணுக்களின் கூட்டுச் சேர்க்கைக்குத் தளம் அமைத்து, நிலம் உள்ளிட்ட மற்ற நான்கு பூதங்களும் தோன்றக் காரணம் ஆகிறது.

ஐம்பூதங்கள் எனப்படும் இந்த 5 திரவியங்களும் அழியாத நிலைப்பேறு (நித்யத்வம்) உடையவை அல்ல. ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குப்பின் அழியக்கூடியவையே. இவற்றில் முதல் நான்கு திரவியங்களும் இயக்கம் (சலிதம்) உடையவை. ஆனால், வான் எனப்படும் ஆகாயம் இயக்கம் உடையது அல்ல (அசலிதம்). மேற்குறிப்பிட்ட மற்ற நான்கு திரவியங்களும் இயங்குவதற்குத் தளமாக இருப்பதுதான் வான்வெளி. அதனால் சஞ்சரிக்க இயலாது.

இந்த 5 திரவியங்கள் போக, காலம், திக்கு (இடம்), ஆத்மா, மனம் ஆகிய எஞ்சிய 4 திரவியங்களும் நிலைப்பேறு உடையவை (நித்ய திரவியங்கள்). இந்த நான்கு திரவியங்களையுமே எந்த வகையிலும் நேரடியாக அறிந்துகொள்ள முடியாது. அனுமானத்தின் மூலம் ஊகித்துத்தான் அறியமுடியும். அதிலும், ஊகித்து அறியக்கூடிய மனம் என்ற நித்ய திரவியம்தான், காலம், இடம், ஆத்மா ஆகிய மற்ற மூன்று நித்ய திரவியங்களையும் ஊகித்து அறிய உதவுகிறது. இதில், மனம் என்ற நித்ய திரவியம் மட்டுமே இயக்கம் உடையது. காலம், இடம், ஆத்மா ஆகியவை இயக்கம் அற்றவை.

காலமும், இடமும் எங்கும் பரந்துள்ள, அளவிட முடியாத, அழிவற்ற, தனித்தன்மை வாய்ந்த கருப்பொருட்களாகும். பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில், இடமும், பொழுதும்தான் முதல் பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதேபோல்தான் வைசேஷிகமும் இடத்தையும், காலத்தையும் உலகத் தோற்றத்தின் முதல் பொருள்களாக வைக்கிறது.

இடம் எனப்படும் வெளி ஆனது, ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட வானம் அல்ல. இடம் என்பது நாம் இருக்கின்ற திசையையும், இதற்கு அருகே, தள்ளி, மேலே, கீழே, இங்கே, அங்கே ஆகிய நிலைகளையும் அறிந்துகொள்ள உதவுகிறது. இடம், ஒரு பொருளோடு மற்றொரு பொருளைத் தொடர்புபடுத்துவது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இடம் என்பது நாம் வாழுகின்ற உலகம்போல பல்வேறு பேரண்டங்கள் (காஸ்மாக்கள்) இயங்குவதற்கு இடம் அளிக்கக்கூடிய பேரண்ட வெளி ஆகும். இந்த வெளி அழிவற்றது. இதில் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு திரவியங்களின் கலவைகளால் ஆன உலகம் உள்ளிட்ட அண்டங்கள்தான் தோன்றி, இயங்கி, அழிகின்றன. ஆகையால், இடம் இயங்கக்கூடியதும் அல்ல, அழியக் கூடியதும் அல்ல.

இதேபோல், காலமும் இயங்கக்கூடியதும் அல்ல; அழியக்கூடியதும் அல்ல. காலத்தின் மூலம்தான் நிகழ்ந்தது, நிகழ்வது, நிகழப்போவது ஆகியவற்றை நாம் அறிந்துகொள்கிறோம். இந்தக் காலத்துக்குள் உலகம் உள்ளிட்ட பல அண்டங்கள் தோன்றி, இயங்கி, அழிகின்றன. ஆனால், காலம் தோன்றி, அழிவதில்லை. உலகம் பலமுறை தோன்றி, அழிந்துகொண்டிருக்கிறது. பேரண்ட வெளிக்குள் பல்வேறு உலகங்கள் பலமுறை தோன்றி, அழிந்துகொண்டே இருக்கின்றன. இந்த அழிவுக்கும் தோற்றத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், காலம் ஓய்வெடுப்பதில்லையே. ஆகையால், காலம் அழிவில்லாதது. அது இயங்குவதும் இல்லை. இதற்குள் தோன்றும் உலகம்தான் இயங்குகிறது.

ஆத்மா என்பது சுயம் சார்ந்த கருப்பொருள். அதாவது ஜீவன் (உயிர்). இந்த ஆன்மாவானது உடலின் பாகமோ, ஐம்புலன்களோ அல்லது மனமோ அல்ல. அவற்றில் இருந்து வேறுபட்டதுதான் ஆத்மா. இது பிரக்ஞையை (பேருணர்வை) அடிப்படையாகக் கொண்டது. அறிதல், விருப்பம் ஆகியவை இதன் குணங்களாகும். கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் ஆன்மா ஒன்றல்ல, பல. இவை தனித்தன்மை வாய்ந்தவை, எங்கும் நிறைந்தவை, கணக்கிட முடியாதவை, அழிவற்றவை.

இதேபோல், மனம் என்பதும் அழிவற்றது. இது ஒன்றல்ல, பல. ஆத்மாவுக்குத் தனித்த அடையாளத்தை மனம்தான் தருகிறது. ஆத்மாவை மட்டுமல்ல, காலம், இடம் ஆகிய மற்ற நித்ய திரவியங்களையும் மனத்தைக் கொண்டே அறிய முடிகிறது. ஆத்மா, மனத்தின் மூலமே பருப்பொருள்களுடன் (புலப்படும் பொருள்களுடன்) தொடர்புகொள்ள முடிகிறது.


2. குணம்

குணம் என்பது, ஒரு கருப்பொருளின் (திரவியத்தின்) உள்ளார்ந்த தன்மை ஆகும். திரவியத்தை அழியா கருப்பொருளாகவும், அழியக்கூடிய பருப்பொருளாகவும் வைசேஷிகம் பிரித்து வகைப்படுத்தியுள்ளதை ஏற்கெனவே கண்டோம். இந்த அழியக்கூடிய பருப்பொருள்தான் ஆங்கிலத்தில் மேட்டர் எனப்படுகிறது. இதை வைத்துத்தான் பொருளியல் எனப்படும் மெட்டீரியலிசம் உருவானது. ஆன்மா அழியாத்தன்மை வாய்ந்தது என்றால் அது அதனுடைய குணம். மனம் இயங்குவது அதனுடைய குணம். இதேபோல் திரவியங்களின் தன்மையாகிய தொடு உணர்வு, நிறம், சுவை, வாசனை, ஓசை, அறிதல், விருப்பம் ஆகிய அனைத்தும் குணங்களே.


3. கர்மம்

இது செயலை (வினையை) குறிக்கிறது. குணத்தைப் போலவே இதுவும் திரவியத்தின் உள்ளடக்கமாக உள்ளது. எனினும், குணமானது நிலையானதாகவும், இயக்கமற்றதாகவும் விளங்க, வினையோ இயக்கமும், மாறுபாடும் கொண்டதாக இருக்கிறது. இணைதலும், பிரிதலும் வினையே. உலகிலும், அண்ட வெளியிலும் அணுக்கள் ஒன்றோடொன்று இணைதலையும் பிரிதலையும் செய்துகொண்டேதான் இருக்கின்றன. இந்த வினை 5 வகைப்படும். அவை – 1. உத்க்ஷேபணம் (மேல்நோக்கிய இயக்கம்), 2. அவக்ஷேபணம் (கீழ்நோக்கிய இயக்கம்), 3. அகுஞ்சனம் (குறுகுதல்), 4. ப்ரஸாரனம் (விரிவடைதல்), 5. கமணம் (இடம்பெயர்தல்).

4. சாமான்யம்

இதன் பொருள் பொதுத் தன்மை. இது, திரவியங்களின் பொதுத் தன்மையைக் குறிக்கிறது. அதாவது, பல்வகைப் பொருட்களிடம் காணப்படும் ஒருமித்த தன்மை. உதாரணத்துக்கு, எந்தத் தன்மை காரணமாக, ஒன்றை மாடு என்று அழைக்கிறோமோ, அது அனைத்து மாடுகளுக்கும் பொருந்துகிறது அல்லவா அதுதான் சாமான்யம்.

5. விசேஷம்

இது, சிறப்புத் தன்மையைக் குறிக்கிறது. ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்தி அறிய உதவுகின்ற தனித் தன்மைதான் விசேஷம். பொதுத் தன்மை என்பது பல்வேறு பொருட்களை ஒருவகைப்படுத்துவது. அதாவது தொகுப்பது. ஆனால், சிறப்புத் தன்மை என்பது பொருட்களை வேறுபடுத்தி வகைப்படுத்துவது. அதாவது பகுப்பது.

6. சமவயம்

இதற்கு இயல்பு என்று பொருள். இது, பிரிக்க முடியாத, நீடித்த தொடர்பைக் குறிக்கிறது. இரண்டு பொருள்களின் சேர்க்கையால் (சம்யோகம்) ஏற்படும் தொடர்பு நிலையானதல்ல, மாறுபடக்கூடியது. அதுபோலன்றி, இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள நிலையான தொடர்பே சமவயம். ஆகையால் இதனை, இணைப்பால் அல்லாத இயல்பான தொடர்பு எனப் பொருள்படும் ஆயுதசித்த என்றும் அழைப்பார்கள். முழுமைக்கும் அதன் பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பு சமவயம் ஆகும். உதாரணத்துக்கு, ஆடைக்கும் அதன் நூலிழைக்கும் இடையே உள்ள தொடர்பு. இதேபோல், ஒரு திரவியத்துக்கும் அதன் குணத்துக்கும், ஒரு திரவியத்துக்கும் அதன் செயலுக்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பு சமவயம் ஆகும். உதாரணத்துக்கு, ரோஜாப்பூவுக்கும் அதன் இளஞ்சிவப்பு நிறத்துக்கும் இடையே உள்ள தொடர்பு, வேகமாக வீசப்பட்ட பந்துக்கும் அதன் வேகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு.

7. அபாவம்

இதன் பொருள் இல்லாமை என்பது. ஒரு பொருள் அல்லது விஷயம் இல்லாததே அபாவம் ஆகும். காலையில் காணப்படும் சூரியன் இரவில் காணப்படாமல் இருப்பது அபாவமே. ஆகையால், இல்லாமையும் வைசேஷிகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனினும். மேற்சொன்ன 6 திரவியங்களும் நேர்மறையானவை. ஆனால், இந்தக் கடைசி திரவியமானது எதிர்மறையானது.

இந்த அபாவம் 4 வகைப்படும். அவை - 1. பிராக் அபாவம் (முன் இல்லாமை) – ஒரு பொருள் அது தயாரிக்கப்படுவதற்கு முன்பு இல்லாமை. உதாரணத்துக்கு, கார் என்ற பொருள் தயாரிக்கப்படுவதற்கு முன்பு அது இல்லை. 2. ப்ரத்வம்ஸ அபாவம் (பின் இல்லாமை) – ஒரு பொருள் அதன் அழிவுக்குப் பின்பு இல்லாமை. உதாரணத்துக்கு இறந்துபோன மனிதர். 3. அன்யோன்ய அபாவம் (நெருக்கத்தால் இல்லாமை) – ஒரு பொருளை வேறு பொருளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலாததால் இல்லாமை. தூரத்தில் இருந்து பார்க்கப்படும் பச்சைப் பசேல் வயல் வெளியில் குறிப்பிட்ட தாவரத்தைப் பிரித்து அறிய இயலாமை. 4. அத்யந்த அபாவம் (முற்றிலும் இல்லாமை) – எக்காலத்திலும் ஒரு பொருள் இல்லாமை. உதாரணத்துக்கு, முயல் கொம்பு. முயலுக்கு ஏது கொம்பு?

இவ்வாறு, அக்காலத்திலேயே இயற்பியல், வானியல், பேரண்டவியல், அணுவியல் என விஞ்ஞானக் கருத்துகளைப் பேசியுள்ள வைசேஷிகம், அதிருஷ்டம் தான் உலகின் தோற்றத்துக்குக் காரணம் என்கிறது. அது ஏன்? எப்படி?

அடுத்த வாரம் பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com