கீழடி ஸ்பெஷல்: தமிழி / வட்டெழுத்துக்கள் ஓர் அறிமுகம்

கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று.
கீழடி
கீழடி

கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று. எனவே குகைக் கல்வெட்டு எழுத்துகளைத் தமிழி என்றே குறிப்பிடுவோம். தமிழி எழுத்து வடிவங்களைக் கீழே இடம் பெற்றுள்ள படத்தில் காணலாம். 

ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வரிவடிவம் அறிஞர்களால் பிராமி என்ற பெயரால் வழங்கப்படுகிறது. பிராகிருத, பாலி மொழிகளில் ‘பம்மி’ என்றும், சமஸ்கிருதத்தின் ‘பிராமி’ என்றும் இது பெயர் பெற்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை எழுதப்பயன்பட்ட இவ்வரிவடிவம், கால ஓட்டத்தில் பல்வேறு வளர்நிலைகளுக்குட்பட்டதால், 18-19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் போது, தமிழர்களாலும், ஏனைய இந்திய மக்களாலும் முழுதாக மறக்கப்பட்டு படிக்க இயலாத நிலையை எட்டியது. கி.பி. 1800களில், வடஇந்தியாவில் மௌரியப் பேரரசன் அசோகனால் எழுதுவிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் ஒன்று அதற்கு இணையான கிரேக்க எழுத்து வரிவடிவிலும் எழுதப்பட்டிருந்ததால், அதன்வழி, இவ்வெழுத்தும் படிக்கப்பட்டது.

பெயர் வரலாறு
முதலில் அசோகன் கல்வெட்டுகளில் இவ்வரிவடிவம் படிக்கப்பட்டதால், இது அசோகன் பிராமி என்று சுட்டப்பட்டது. இவ்வெழுத்து வகைக்கும், தமிழகத்தில் கிடைத்த எழுத்து வகைக்கும் இருந்த ஒற்றுமை காரணமாகவும், அதே வேளையில் தமிழக எழுத்துகளில் சில வேற்றுமைகள் இருந்ததனாலும், இவ்வேறுபாட்டைக் குறிக்கும் வகையில் ‘தமிழ்பிராமி’ என்று அறிஞர்களால் அழைக்கப்படலாயிற்று. 

தொல்லெழுத்தறிஞர்கள் தம் ஆய்வின்போது கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தகும் சமண நூலான ‘சமவாயங்க சுத்த’ என்பதில் இடம்பெற்றிருந்த 18 வகை எழுத்துகளில் ஒன்றான ‘தாமிழி’ என்ற சொல், தமிழ்மொழிக்கான எழுத்துகளையே குறித்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில அறிஞர்கள் இதனைத் ‘தமிழி’ என்று குறித்தனர். கி.பி. 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெளத்த நூலான ‘லலிதவிஸ்தரத்தில், புத்தர் பயின்ற மொழிகள் என்ற வகையில் செய்யப்பெற்ற பட்டியலில், ‘திராவிடி’ என்றொரு எழுத்துவகை குறிக்கப்படுதலின், அது தமிழ்மொழிக்கான எழுத்து வகையினையே குறித்தாதல் வேண்டும் என்றும் கருத்துரைத்தனர். இவை இவ்வாறிருக்க, தொன்மைத் தமிழ் எழுத்து பல்வேறு வளர்நிலைகளை கடந்து வந்துவிட்ட வழியில் வட்டெழுத்து, தமிழ் எனப் பல பெயர்களால் சுட்டப் பெற்றது. ஆதலினாலும், அவற்றில் ஒன்று ‘தமிழ்’ என்று வழங்கப் பெறுவதாலும், மிகப்பழைய தமிழ் எழுத்துகளைத் ‘தொல்தமிழ் எழுத்து என்று பெயரிட்டழைக்கலாம். ஆனால் தொல்லெழுத்தறிஞர்கள் பலரும் தமிழ் பிராம்மி என்ற சொல்லையே தொல் தமிழ் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். தற்பொழுது ’தமிழி” என்ற சொற்பெயரே தலைத்தோங்குகிறது.

தோற்றம்
இவ்வெழுத்துகள் முதலில் யாரால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது  என்பதில் பெரும் கருத்து வேறுபாடு உள்ளது. அசோகன் பிராமியிலிருந்தே இவ்வரிவடிவம் பெறப்பட்டது என்பாரும், தமிழர்களால் முதலில் அறிமுகம் செய்யப் பெற்றுப் பின்னர் அசோகனால் உள்வாங்கப்பட்டுப் பயன் படுத்தப்பட்டது என்பாரும் உளர். மேலும் இவ்வெழுத்துக்களை உருவாக்கியவர்கள் தமிழர்களே என்றும், வேறொரு எழுத்து வகையிலிருந்து உள்வாங்கப்பட்டவை என்றும் இருவேறு கருத்துகளும் உள்ளன. தமிழர்களே உருவாக்கினர் என்ற கருத்திலும், இந்தியாவின் மிகப்பண்டைய, படிக்கப்படாத ஓவிய / ஒலியெழுத்து வகையிலமைந்த ஹரப்பா நாகரிக எழுத்திலிருந்து உருவாக்கப்பட்டது என்றும், தமிழக அகழாய்வுகளில் கிடைக்கும் மண்பாண்டங்கள் மற்றும் சில தொல்பொருட்கள் மீதும் கீறப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து வளர்ந்ததே என்றும் இருவகைக் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. வெளிநாட்டு எழுத்து வகையிலிருந்து உள்வாங்கப்பட்டது என்று கருத்தில், உலகில் பல்வேறு பண்டைய வரி வடிவங்களை ஆராய்ந்து முடிவில் வடசெமிட்டிக் எழுத்து வகையினை அடிப்படையாகக் கொண்டே இவை உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். 

செமிட்டிக் எழுத்து வகையில் 22 மெய்யெழுத்து வரிவடிவங்கள் கி.மு. 1000 வாக்கில் வழக்கில் இருந்துள்ளது. பின்னர் கி.மு. 800 வாக்கில் சிரிய பாலஸ்தீனப் பகுதியில் உயிரெழுத்து வடிவங்கள் வழக்கிற்கு வந்துள்ளன. தொல்தமிழ் எழுத்து வரிவடிவங்கள் பகுதி உயிர்மெய் வகையாகவும் பகுதி உயிர்வகையாகவும் விளங்குகின்றன. பாரசீக வளைகுடா வழியாக வணிகத்தொடர்பின் வழி அறியப்பட்டு, இவ்வரி வடிவங்களின் பரவல் நிகழ்ந்திருக்கலாம். இவ்வாறு அறியப்பட்ட இவ்வரிவடிவங்கள், தமிழ்மொழிக் கேற்ப ஒற்றுமையுடையனவாகவும் (identical) அதே வரிவடிவினவாகவும் (Similar) சிறிய குறியீடுகளால் வேறுபடுத்தப்பட்டு இணைத்துக்கொள்ளப்பட்டனவாகவும் (hormonised) தமிழர்களால் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதலாம். எவ்வாறிருப்பினும், கி.மு. 6 – 5 ஆம் நூற்றாண்டு வாக்கில், தமிழகம் முழுவதும் தமிழ்மொழியை எழுதுவதற்கு இவ்வரிவடிவம் மிகுந்த அளவில் அனைத்துத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டது என்பது ஆதித்தநல்லூர், கீழடி அகழாய்வுகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

தனித்தன்மை

அசோகனால் பயன்படுத்தப்பட்ட எழுத்து வகையில் உயிர் எழுத்துகள் 52ம், வல்லின எழுத்துகள் ஐந்திற்கும் வர்க்க எழுத்துகளுடன் 20 உம், இடையின, மெல்லொலி எழுத்துகள் 9 –உம், மூன்று வகை சகரங்களும் ‘ஹ’ ன்றும் ஆக 34 எழுத்துகள் அடிப்படை எழுத்துகளாக இருக்க, தமிழகத்தில் தமிழை எழுதப் பயன்படுத்தப்பட்ட வரிவடிவில் உயிரெழுத்துகள் 12ம் மெய்யெழுத்துக்கள் 18 ம் ஆக 23 அடிப்படை எழுத்துக்கள் உள்ளன.  மெய்யெழுத்துகளில், ழ, ளகர, றகர, னகரங்கள் தமிழுக்கேயுரிய சிறப்பெழுத்துகளாக உள்ளன. அசோகன் எழுத்து வகை பிராகிருத, பாலி மொழிகளுக்கேற்றவாறும், தமிழ் எழுத்துவகை தமிழை எழுதுவதற்கேற்றவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அசோகன் கூட்டெழுத்துகளையும், அனுங் வாரம் என்றும் குறை மாத்திரை எழுத்துகளையும் பயன்படுத்தியிருக்க, தமிழ் கூட்டெழுத்தைப் பயன்படுத்தவில்லை. மெய்யைக் குறிக்க தமிழில் புள்ளி பயன்படுத்தப்பட்டதும் அதன் தனித்தன்மை.

தொல்தமிழ் காணப்படும் இடங்கள்

தமிழகத்தில் இயற்கையாக அமைந்த மலைக் குகைகளில் அமைந்த பாறைகளிலும், முகப்புகளிலும், சமண சமயத்தார் பயன்படுத்தும் கற்படுக்கைகளுக்கு அருகிலும் இவ்வகை எழுத்திலமைந்த கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. சங்க  காலச் சேரர் பாண்டியர்  வெளியிட்ட காசுகளிலும், தமிழக அகழாய்வுகளிலும், மேற்பரப்பு ஆய்வுகளிலும் கிடைத்த முழு / உடைந்த மட்பாண்டங்களிலும் இவ்வெழுத்துகள் இடம்பெறுகின்றன. இத்தகைய மண்பாண்டப் பொறிப்புகள், கடல்கடந்த நாடுகளிலும் கிடைத்திருப்பது தமிழரின் பரவலுக்குச் சிறந்த சான்றாகவும் உள்ளது. செங்கடற் பகுதியிலமைந்த எகிப்தியத் துறைமுகங்களான குவைசர் அல் காதிம், பெரணிகே ஆகியவற்றில் நடந்த அகழாய்வுகளிலும், தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில் உள்ள குவந்லுக் பத் என்ற இடத்தில் கிடைத்த பொன் உரைகல் ஒன்றின்மீதும் இவ்வெழுத்தில் அமைந்த தமிழ்ப் பெயர்ப் பொறிப்புகள் கிடைத்துள்ளன.

ஏறத்தாழ 2800 ஆண்டுகால தொல்தமிழ் எழுத்து
இன்றைய தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் கி.மு. 600 வாக்கிலேயே தொல் தமிழ் எழுத்துகள் தமிழகத்தில் வழக்கிற்கு வந்துவிட்டன என்று தெரிகிறது. இதன் அடுத்த கட்ட மாற்றம் கிபி. 3-4 ஆம் நூற்றாண்டுகளில் தான்  நிகழ்ந்துள்ளது. இடைப்பட்ட ஏறத்தாழ 800 ஆண்டு காலத்தில் குறைந்த அளவு 500 ஆண்டுகளாவது இவ்வரி வடிவங்களில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். அவற்றை மாற்றம் என்று கூறுவதைவிடச் செம்மைப்படுத்துதல் மற்றும் நிலைப்படுத்துதல் என்று கூறலாம். உள்வாங்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட காலத்தில் உயிருக்கும், மெய்க்கும், உயிர்மெய்க்கும் தனித்தனியான வரையறுக்கப்பட்ட வரிவடிவங்கள் நிலைபெறவில்லை. தமிழ்மொழிக்கு  ஏற்ப வடிவமைக்கப்படும் போது முதல் அடிப்படை எழுத்து மெய்யைக் குறிக்கும். உயிரைக் குறிக்காது. அடுத்த கட்டத்தில் அகரத்தைக் குறிக்கத் தலையில் ஒரு கோடிடப்பட்டது; அந்த வடிவமே ஆகாரத்தையும் குறித்தது பின்னர் ஆகாரத்தைக் குறிக்க (நெடில்)த் தலையில் இரண்டு கோடிடப்பட்டது. அப்போது அடிப்படை வடிவம் அகத்தை (குறில்) மட்டும் குறித்தது. இப்போது மெய்யையும், அகரத்தையும் (குறில்) வேறுபடுத்திக் காட்ட மெய்க்குப் புள்ளி இடப்பட்டது. இதுபோல 5 அடிப்படை உயிர்வரி வடிவங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் குறில், நெடிலை வேறுபடுத்திக்காட்ட புள்ளியும், சிறு கோடுகளும் இணைக்கப்பட்டன. ஐகார, ஔகாரங்கள் இரண்டு வரிவடிங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இத்தகைய வளர்ச்சிப் படிநிலைகளைத் தாண்டியே தொல்தமிழ் எழுத்து வடிவம் நிலைப்பட்டது. இத்தகைய படிநிலைகளைத் தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திரப் பகுதியிலமைந்த பௌத்தத் தலமான பட்டிபுரோலு ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளிலேயே காணமுடிகிறது. இந்த வளர் நிலைகளே – இதுபோன்ற எந்த மாற்றங்களையும் தன்னுள் கொண்டிராத அசோகன் பிராம்மிக்கு முன்னால் தொல்தமிழ் எழுத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாகிறது.

தமிழி வரலாறு
“தமிழி” எழுத்துக்களை 1903இல் திரு.வெங்கோபராவ் முதன் முதல் கீழவளவு என்ற இடத்தில் கண்டு வெளிக்கொணர்ந்தார். 1906இல் மறுகால்தலை என்ற இடத்தில் எல்.எ.கெமைடு (L.A.Cammiade) அவர்கள் ஒரு கல்வெட்டையும் அதே ஆண்டில் பிரான்சிஸ் (W.Francis) மற்றொரு கல்வெட்டையும் கண்டுபிடித்தார். அதன் பிறகு ஆனைமலை, அழகர்மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தன்னவாசல் முதலிய இடங்களில் சில கல்வெட்டுக்களை ச.கிருஷ்ண சாஸ்திரியும், கே.வி.சுப்பிரமணிய அய்யரும் கண்டுபிடித்தனர். அதன் பின்பு திருச்சி, மாமண்டூர் முதலிய இடங்களிலும் சில கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அறச்சலூரில் (அறச்சாலையூர்) ஒரு கல்வெட்டை மயிலை சீனி வேங்கடசாமி, செ.இராசு ஆகியோர் கண்டுபிடித்தனர் (1960). 1966இல் ஐராவதம் மகாதேவன் திருவாதவூரில் மற்றொரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து பல அறிஞர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இன்று இதன் எண்ணிக்கை 94 ஆகும்.

இது போன்று பல இடங்களிலும் தமிழிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட போதிலும் இவ்வெழுத்துக்களை முறையாகக் படிக்கும் முயற்சி 1910ஆம் ஆண்டிற்குப் பின்னரே தொடங்கியது எனலாம். 1906இல் கண்டுபிடிக்கப்பட்ட மறுகால்தலை கல்வெட்டு 1910ஆம் ஆண்டு கல்வெட்டு ஆண்டறிக்கையிலேயே (ARE), வெளிவந்துள்ளது.

வட இந்திய பிராமி வரிவடிவம் தமிழ் நாட்டில் கிடைத்ததை அறிந்த அறிஞர்கள் அதைப் படிப்பதில் ஆர்வம் கொண்டனர். இதைத் தொடர்ந்து கே.வி.சுப்ரமணிய அய்யர், எச்.கிருஷ்ண சாஸ்திரி, வெங்கோப ராவ், வெங்கையா போன்றோர் இதில் கவனம் செலுத்தினர். இதன் விளைவாக புதிதாகக் கண்டுபிடிக்கப்பெறும் தமிழி கல்வெட்டுக்கள் ஆண்டுதோறும் கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளிவர ஆரம்பித்தன. 1924ஆம் ஆண்டிற்குள் 12 இடங்களிலிலிருந்து 32 கல்வெட்டுக்கள் வெளிவந்தன. இதனைக் கொண்டே கே.வி. சுப்ரமணிய அய்யர் 1924இல் இவ்வெழுத்துக்கள் தமிழ் மொழியைச் சார்ந்ததே என உறுதிப்படுத்தினார். 1882இல் இராபர்ட் சீவலாலும், 1906இல் டபிள்யு.ஃபிரான்ஸிஸாலும் கண்டுபிடிக்கப்பட்ட மாங்குளம் கல்வெட்டு 1965இல் தான் முழுமையாகப் படித்துணரப்பட்டது. இதில் பாண்டிய அரசர் நெடுஞ்செழியன் பெயர் உள்ளதை முதன் முதலில் கண்டறிந்த பெருமை ஐராவதம் மகாதேவனையே சாரும். அண்மைக் காலத்தில் (2006) இக்கல்வெட்டுக்கள் நடுகற்களிலும் நெடுநிலைக்கற்களிலும் இருப்பதைப் புலிமான் கோம்பை மற்றும் தாதப்பாட்டியில் கிடைத்த கல்வெட்டுக்கள் கொண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை முனைவர் பட்ட மாணவர்கள் வி.பி.யதீஸ்குமார் மற்றும் எஸ்.செல்வக்குமார் ஆகியோர் கண்டறிந்தனர். இக்கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வு செய்த கா.ராஜன் தமது கருத்துக்களை விரிவாக விளக்கியுள்ளார். கல்வெட்டுக்களில் மட்டுமின்றி பானை ஓடுகளிலும் காசுகள், முத்திரைகள் மற்றும் மோதிரங்களில் இருக்கும் எழுத்துக்களையும் கண்டறிந்தனர். இவ்வகையில் பானை ஓடுகளிலுள்ள பழந்தமிழ் எழுத்துப்பொறிப்புகள் முதன் முதலில் மார்டிமர் வீலர் நிகழ்த்திய அரிக்கமேடு அகழாய்வின் மூலம் அறியப் பெற்றுள்ளன. அதுபோல் காசுகளிலுள்ள பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகளை முதன் முதலில் 1985இல் காசுகளில் கண்டு வெளியிட்டவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆவார். இவர் சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கிய பாண்டிய மன்னர் பெருவழுதியின் காசுகளைக் கண்டுபிடித்து படித்து தமிழக எழுத்தியல் வரலாற்றுடன் நாணய வரலாற்றிற்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து 1987இல் சேர மன்னர் கொல்லிப் புறை காசுகளைக் கண்டுபிடித்து சேர வரலாற்றுக்குப் பெருமைச் சேர்த்தவர் ஆர்.நாகசாமியாவார். இவ்வெழுத்துக்கள் முத்திரைகளில் இருப்பதை 1981இல் “கோவேத” என்று தமிழ் பிராமியில் எழுதப்பட்ட ஆனைகொடை (இலங்கை) முத்திரைக் கொண்டு இந்திரபாலாவும் பொ.ஆ. 2000இல் “தீயன்” என்ற தமிழி எழுத்துப் பொறிப்பை மோதிரத்தில் சங்கரன் ராமனும் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இவ்வெழுத்துக்களைக் கண்டறிந்து படித்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த அனைத்து அறிஞர்களின் செயல்களும் மிகவும் போற்றுதற்குரியதாகும்.

உருமாற்றங்கள்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு அளவில் தமிழி எழுத்து வடிவங்களில் உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அம்மாற்றங்கள் இரண்டு பிரிவுகளைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஒன்று தமிழ் என்று அழைக்கப்படும் எழுத்துகளின் தொடக்கமாக அமைகின்றது. மற்றொன்று வட்டெழுத்து என்று அழைக்கப்படும் எழுத்துகளின் தொடக்கமாக அமைகின்றது. அதாவது தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தமிழ் எழுத்து எழுதப் பெற்று வந்துள்ளது. வேறு சில பகுதிகளில் வட்டெழுத்து எழுதப் பெற்று வந்துள்ளது.

தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும்
பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதியில் தமிழ்மொழியை எழுத வட்டெழுத்து வடிவம் பயன்படுத்தப் பெற்றுள்ளது. அதே காலத்தில் பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்த பகுதியில் தமிழ் எழுத்து வடிவங்களில் தமிழ்மொழி எழுதப் பெற்றுள்ளது. மன்னர்களுக்கு இடையே நிகழ்ந்த போர்களின் விளைவான ஆட்சி பரவலினால் வட்டெழுத்தில் எழுதும் முறை தமிழகம் முழுவதும் பிற்காலத்தில் பரவியுள்ளது. தமிழ் எழுத்து, வட்டெழுத்து ஆகியவற்றிற்கு இடையே எழுத்து எண்ணிக்கை நிலையில் வேறுபாடு இல்லை. எழுத்துகளை எழுதும் முறையில்தான் வேறுபாடு காணப்பெறுகின்றது. இரு எழுத்து வடிவங்களுக்கும் உரிய வரிவடிவ அட்டவணைகளின் வாயிலாக இதனை அறியலாம்.


வட்டெழுத்து வடிவம்
வட்ட வடிவமாக எழுதப் பெற்றதால் இவை வட்டெழுத்துக்கள் எனப் பெயர் பெற்றன. மலையாள மொழி பேசப் பெற்ற பகுதிகளிலும் வட்டெழுத்துகள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இதனால் தெக்கன் மலையாளம், நாநாமோன என்று வட்டெழுத்துகளை வேறுபெயர்களிட்டுக் குறிப்பிடுவதும் உண்டு..
டி.ஏ.கோபிநாதராவ் என்பவரே தமிழ்-பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து தோன்றியது என முதன் முதலில் கருத்து தெரிவித்தவர் ஆவார். எனினும் இவர் கருத்தை நிரூபிக்கத் தேவையான சான்றுகள் அக்காலத்தில் கிடைக்காததால் ஹரிப்பிரசாத் சாஸ்திரி இதை கரோஷ்டி எழுத்திலிருந்து தோன்றியது எனவும், பியூலர் தமிழ்-பிராமியின் மாறுபட்ட வடிவம் என்றும் வணிகர் மட்டும் பயன்படுத்தும் எழுத்து என்றும், பர்னல் பொனிசியன் வரிவடிவத்திலிருந்து தோன்றியது எனவும் இதன் தோற்றம் தொடர்பாகப் பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவின. ஆனால் அண்மைக் காலச் சான்றுகளான அறச்சலூர், பூலாங்குறிச்சி, இந்தளூர், அரசலாபுரம், பெருமுக்கல், அம்மன் கோயில்பட்டி ஆகிய ஊர்களில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் தமிழி எழுத்துக்களிலிருந்தே வட்டெழுத்து வளர்ச்சி அடைந்துள்ளமையினை நன்கு அறியலாம்.

இதுவரை தமிழ் வரிவடிவ வளர்ச்சியைத் தமிழி, தமிழ், வட்டெழுத்து ஆகிய எழுத்துகள் வழி அறிந்தோம். தமிழ் வரிவடிவம் நூற்றாண்டு தோறும் வளர்ச்சி பெற்று வந்துள்ளதைக் கீழ்வரும் அட்டவணை வழி அறிந்து கொள்ளலாம்.

அட்டவணையின் நடுவில் தமிழி எழுத்துகள் அளிக்கப் பெற்று உள்ளன. இரண்டு பக்கங்களில் வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துகளும் நூற்றாண்டு வாரியாக வளர்ந்த முறை குறிப்பிடப் பெற்று உள்ளது. அதில் தமிழ் எழுத்துகள் இன்றைய வடிவ வளர்ச்சியை அடைந்து உள்ளதை அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.