தாமினி தனியார் பள்ளி தலைமையாசிரியை வீட்டில் தங்கியிருக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இயக்குநர் சேரன் மகள் தாமினியை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றின் தலைமையாசிரியை பாதுகாப்பில் அவரது வீட்டில் தங்கியிருக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் சேரன் மகள் தாமினியை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றின் தலைமையாசிரியை பாதுகாப்பில் அவரது வீட்டில் தங்கியிருக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தான் சந்துரு என்ற இளைஞரை காதலிப்பதாகவும், எனினும் தனது தந்தை சேரன் தங்கள் காதலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தாமினி புகார் அளித்தார். சந்துரு நல்லவர் இல்லை என்றும், தனது மகளை அவர் நிர்பந்தப்படுத்தி தன் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார் என்றும் கூறி சேரன் ஒரு புகார் அளித்தார். இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் தாமினியை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர்.

இந்நிலையில் தாமினியை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறி சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர். அப்போது தாமினி, சேரன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளை நீதிபதிகளிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதுவரை மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் பாதுகாப்பில் அவரது வீட்டில் தாமினி தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். தங்கள் அறையில் வைத்து நீதிபதிகள் நடத்திய இந்த விசாரணையின்போது மனுதாரர் ஈஸ்வரி அம்மாள், அவர் தரப்பு வழக்குரைஞர் சங்கரசுப்பு, தாமினி, சேரன், அவர் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, ராஜா செந்தூர் பாண்டியன், அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம், கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.என்.தம்பிதுரை உள்ளிட்டோர் தனித்தனியாக நீதிபதிகள் முன் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளைக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அதுவரை சரியான மற்றும் தாமினிக்கு விருப்பமான இடத்தில் அவர் தங்க வைக்கப்பட வேண்டும். அந்த வகையில் இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் தாமினி தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ ஷ்ரைன் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் தாளாளரான திருமதி பி.கே.கே.பிள்ளையின் பாதுகாப்பில், தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் தாமினி தங்கியிருக்க வேண்டும். அடுத்த விசாரணையின்போது தாமினி மற்றும் அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகிட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com