ஏழு ஆண்டாக கட்டப்படும் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கம்

கரூர் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாவட்ட விளையாட்டரங்க கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என

கரூர் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாவட்ட விளையாட்டரங்க கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டுத் திடல் கட்ட கடந்த 2003-ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் 15 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டுத் திடலும், அதனுடன் இணைந்த விளையாட்டு அரங்கமும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2005-ம் ஆண்டு தொடங்கின. ஆரம்பத்தில் ஓராண்டில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், ஓராண்டுக்குள் முடிவடையவில்லை. நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கட்டுமான பொருள்கள் விலை உள்ளிட்ட காரணங்களால் விளையாட்டரங்க பணிகளுக்கான முழு நிதியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடந்த 7 ஆண்டுகளாக விளையாட்டரங்க பணிகள் அவ்வப்போது, நடைபெறுவதும் பின்பு தொய்வுறுவதுமாக தொடர்கிறது. இப்போது, 15 ஏக்கர் விளையாட்டுத் திடலை சுற்றிலும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்ட நிலையில், விளையாட்டரங்க பார்வையாளர் கூடம், கூடை பந்தாட்டத் திடல் ஆகியவை பாதி கட்டப்பட்டு சுற்றிலும் புல், பூண்டுகள் வளர்ந்த நிலையில் உள்ளது. விளையாட்டுத் திடல் முழுவதும் புல் முளைத்துள்ளது. விளையாட்டரங்கப் பணிகள் எப்போது முடியும் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தியிடம் கேட்டபோது அவர் கூறியது:

மாவட்ட விளையாட்டரங்கப் பணிகள் நிதி நிலை காரணமாக தொய்வடைந்திருந்தன. விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிக்கு இதுவரை ரூ. 1.33 கோடி செலவிடப்பட்டுள்ளது 70 சத பணிகள் நிறைவடைந்து விட்டன. மீதம் உள்ள பணிகளுக்காக, அரசு மற்றும் தனியார் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 மாத காலத்துக்குள் மாவட்ட விளையாட்டரங்க பணிகள் நிறைவு பெறும் என்றார்.

விளையாட்டரங்க கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே, விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com