தருமபுரி இளவரசன் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் தந்தை மனு

தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாயில் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளவரசன் - திவ்யா ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு

தருமபுரி இளவரசன் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது தந்தை இளங்கோ உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாயில் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளவரசன் - திவ்யா ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை, அங்குள்ள 3 தலித் காலனிகள் மீது பெரும் தாக்குதல், திவ்யாவை ஒப்படைக்கக் கோரி அவரது தாயார் உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு தாக்கல், தாயாருடன் தங்கியிருக்க திவ்யா விருப்பம் என அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடைபெற்றன. இந்நிலையில் ஜூலை 4-ம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் ரயில் பாதை அருகே இளவரசன் சடலமாகக் கிடந்தார். முதலில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் சந்தேகங்கள் எழவே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இந்த சூழலில் தனது மகனின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இளவரசன் தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.சம்பவம் நடந்த நாளில் காலை எனது ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்துக் கொண்ட இளவரசன் சித்தூர் செல்வதாகக் கூறிச் சென்றார். அன்று மதியம் 12.40 மணிக்கு உறவினர் அறிவழகனுடன் இளவரசன் செல்போனில் பேசியுள்ளார். சித்தூர் செல்ல உள்ளதாகவும், அறிவழகனையும் தன்னுடன் வருமாறும் இளவரசன் அழைத்துள்ளார். முதலில் மறுத்த அறிவழகன் பின்னர் உடன் வருவதாகக் கூறியுள்ளார். அடுத்த 10 நிமிஷங்களில் வீட்டுக்கு வருவதாகவும், அதற்குள் தயாராக இருக்கும்படியும் இளவரசன் கூறியுள்ளார். ஆக,  ஆனால் இளவரசன் வரவில்லை.

 இந்நிலையில் ரயில் பாதை அருகே எனது மகனின் சடலம் கிடப்பதாக பிற்பகல் 2.45 மணிக்கு செல்போனில் எனக்கு போலீசார் தகவல் கூறினர். ஆக, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனது மகனிடம் அறவே இல்லை. திவ்யா மீண்டும் வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடனேயே அவர் இருந்தார்.

இந்நிலையில் எனது மகன் மரணம் அடைந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகிறேன். ஜூலை 4-ஆம் தேதி தருமபுரியில் ரயில் மோதி யாரும் உயிரிழக்கவில்லை என்று ரயில்வே கோட்ட மேலாளர் கூறியுள்ளார். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் சென்ற கோவை - மும்பை குர்லா ரயிலின் ஓட்டுநரும் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக புகார் எதுவும் தரவில்லை.

என் மகன் மீது ரயில் மோதியிருந்தால் அப்போது ரயில் இயக்கப்பட்ட வேகத்துக்கு குறைந்தது 20 மீட்டர் தூரத்துக்காகவது உடல் இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் அல்லது ரயில் பாதையில் இழுத்துச் செல்லப்பட்டு உடல் சிதைந்திருக்கும். ஆனால் சம்பவ இடத்திலேயே கிடந்த உடலில் தலையில் ஏற்பட்ட காயம் தவிர பிற பகுதிகளில் பெரிய காயம் எதுவும் இல்லை. ஆகவே, ரயில் மோதியதால் ஏற்பட்ட மரணம் இது என நம்பும்படியாக இல்லை.

எனது மகனின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஆனால் தற்கொலை என கூறி வழக்கை முடிக்க காவல் துறையினர் முயற்சிக்கின்றனர். தற்போதைய காவல் துறை விசாரணையில் உண்மைகள் வெளி வர வாய்ப்பில்லை. ஆகவே, எனது மகனின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று இளங்கோ தனது மனுவில் கோரியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com