ஜி.கே. மணி உள்ளிட்ட பாமகவினர் 362 பேரும் ராமநாதபுரத்தில் ஜாமீனில் தங்கியிருக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அடுத்த உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும் என்றும், வழக்கை வரும் ஜுன் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் கூறினார் நீதிபதி எம்.சத்தியநாராயணா. இதை அடுத்து, ஜி.கே.,மணி உள்ளிட்ட பாமகவினர் அனைவரும் விடுவிக்கப்பட்டு ராமநாதபுரம் செல்வர் என்று தெரிகிறது. 
ஜி.கே. மணி உள்ளிட்ட பாமகவினர் 362 பேரும் ராமநாதபுரத்தில் ஜாமீனில் தங்கியிருக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜி.கே.மணி உள்ளிட்ட பாமகவினர் 362 பேரும் ராமநாதபுரத்தில் ஜாமீனில் தங்கியிருந்து தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மாமல்லபுரம் சித்திரை முழுநாள் விழாவைத் தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி மரக்காணத்தில் நடந்த கலவரத்தை அடுத்து, போலீசார் எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து விழுப்புரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறி

ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பாமகவினர் 362 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமீன் கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களுக்கு  கடந்த மே 3ம் தேதி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

இந்நிலையில், ஜிகே மணி மற்றும் பாமகவினர் 361 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி காவல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது

அப்போது, ஏற்கெனவே விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை விதிக்க மறுத்தார் நீதிபதி. இருப்பினும், இவர்களை உடனடியாக வெளியில் விடுவித்தால், ஏற்கெனவே கலவரமாக உள்ள சூழ்நிலையில், மீண்டும் கலவரம் நடக்கும் என்று காவல்துறை தெரிவித்த  அச்சத்தைக் கருத்தில் கொண்டு ஒரு நிபந்தனை விதிப்பதாக நீதிபதி கூறினார். அதன்படி, அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இல்லாமல் வேறொரு மாவட்டத்தில் தங்கியிருந்து தினமும் கையெழுத்திட்டு வரவேண்டும் என்று கூறினார். அதற்காக அவர் கூறிய இடம் ராமநாதபுரம்.

அப்போது ஜி.கே.மணி தரப்பில், சேலத்தில் தங்கி கையெழுத்து இடுவதாகக் கூறப்பட்டது. ஆனால், அதுவும் அவர்கள் கட்சியினர் அதிகம்பேர் இருக்கும் இடம் என்று ஆட்சேபனை கூறவே, வேறு இடம் என்று அவர்கள் கூறினர்., தற்போதைய வெயில் காலத்தைக் கருத்தில்கொண்டு, குளு குளு வென இருக்கும் பொள்ளாச்சியில் தங்கி கையெழுத்திடுகிறோம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் அதனை மறுத்த நீதிபதி, ராமநாதபுரத்தில் இவர்கள் 362 பேரும் தங்கியிருந்து, தினமும் நகர காவல் நிலையத்தில் 11 மணிக்கு கையெழுத்திட்டு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும் என்றும், வழக்கை வரும் ஜுன் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் கூறினார் நீதிபதி எம்.சத்தியநாராயணா. இதை அடுத்து, ஜி.கே.,மணி உள்ளிட்ட பாமகவினர் அனைவரும் விடுவிக்கப்பட்டு ராமநாதபுரம் செல்வர் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com