ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தவர் மீட்பு

 நிலம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க வந்தவர் போலீஸாரால் திங்கள்கிழமை மீட்டு அனுப்பப்பட்டார்

 நிலம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க வந்தவர் போலீஸாரால் திங்கள்கிழமை மீட்டு அனுப்பப்பட்டார்.

 சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க் கூட்டம் ஆட்சியர் க.மகரபூஷணம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார், பொதுமக்களின் உடமைகளை சோதனை செய்து பின்னர் உள்ளே அனுப்பி வைத்தனர்.

 அப்போது, பையுடன் உள்ளே நுழைய முயன்ற நபரை மறித்து போலீஸார் சோதனையிட்டதில் அந்த நபர், மண்ணெண்ணெய் கேனை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில், ஓமலூர் பண்ணவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நகுலன் (53) என்பது தெரிய வந்தது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக அவர் குடியிருந்து வரும் வீட்டை காலி செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும், கையகப்படுத்தப்படும் தனது நிலத்திற்கு பதிலாக வேறு பகுதியில் தனக்கு நிலம் ஒதுக்கித் தரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தனது கோரிக்கையை வலியுறுத்த வந்ததாக அவர் தெரிவித்தார்.

 அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்த போலீஸார், பின்னர் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனால், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் திங்கள்கிழமை பகலில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com