காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வலியறுத்தி 24-ல் பாஜக ஆர்ப்பாட்டம்
By | Published On : 21st August 2013 06:22 PM | Last Updated : 21st August 2013 06:22 PM | அ+அ அ- |

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் நவம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்குமாறு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது. அதோடு காமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை அதிபர் தலைமை வகிக்கும் வரை அதிலிருந்து இந்தியா விலகி இருக்க வேண்டும்.இதனையும் மீறி மாநாட்டில் பங்கேற்றால், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இந்தியா அங்கீகரித்ததாகிவிடும். எனவே, மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
"மெட்ராஸ் கபே' படத்தை திரையிடக் கூடாது:இலங்கைத் தமிழர்களின் துயரங்களை அறியாமல், அவர்களை தீவிரவாதிகளைப்போல சித்தரித்து மெட்ராஸ் கபே என்ற பெயரில் திரைப்படம் எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல, நாட்டில் எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.