மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார்: எடியூரப்பா
By dn | Published On : 30th August 2013 07:16 PM | Last Updated : 30th August 2013 07:16 PM | அ+அ அ- |

மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள தயாராக இருப்பதாக கஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடக ஜனதாகட்சியை(கஜக)அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் நோக்கில் செப்டம்பர் முதல்வாரத்தில் இருந்து மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். மக்களவை தேர்தலுக்கு கட்சியை தயார்ப்படுத்துவதும், பலப்படுத்துவதும் என்னுடைய நோக்கமாக உள்ளது. கஜக எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியில் இருந்துவிலகமாட்டார்கள். இதில் யாருக்கும் குழப்பம் வேண்டாம். தொண்டர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.
அண்மையில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கஜக வேட்பாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகியுள்ள மக்களவை தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கு கட்சியை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மக்களவை தேர்தலுக்கு போதுமான கால அவகாசம் இருப்பதால், அதற்குள் கட்சியை பலப்படுத்திவிடுவேன்.
மக்களவை பொதுத்தேர்தலில் ஒத்தகருத்துடைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துக்கொள்ளப்படும். இதுகுறித்துகட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்தத்தலைவர்களுடன் ஆலோசித்து கூட்டணி குறித்துமுடிவு செய்வோம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குறித்து நான் சர்ச்சை எதையும் கிளப்ப விரும்பவில்லை. நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது பாஜகவின் விருப்பம். பாஜக பற்றி கவலைப்படுவதை காட்டிலும், கஜகவை பலப்படுத்துவதே எங்கள் நோக்கமாக உள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது, வறட்சியால் பாதிக்கப்பட்ட வட்டங்களுக்கு நிதி ஆதாரம் ஒதுக்குவது உள்ளிட்டபணிகளை மாநில அரசு செய்ய தவறினால், விதானசௌதா மற்றும் மாநிலம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களுக்கு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்ப்படும். முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனால், வளர்ச்சிப்பணிகள் எதையும் செயல்படுத்தாதால் அரசு மீதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாநிலத்தில் தினமும் கொலை, கொள்ளை நடப்பதால், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெங்களூர்-மைசூர் மட்டும் கர்நாடகம் என்று முதல்வர் சித்தராமையா புரிந்து கொண்டுள்ளார். எனவே, மாநில வளர்ச்சியில் சித்தராமையா கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர்கள் ஷோபாகரந்தலஜே, தனஞ்செய்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.