மக்களவைத் தேர்தலில் நாற்பதையும் நாமே வெல்வோம்: ஜெயலலிதா சூளுரை

மக்களவைத் தேர்தலில் நாற்பதையும் நாமே வெல்வோம் என்று அதிமுக பொதுச் செயலாளரும்,
மக்களவைத் தேர்தலில் நாற்பதையும் நாமே வெல்வோம்: ஜெயலலிதா சூளுரை

மக்களவைத் தேர்தலில் நாற்பதையும் நாமே வெல்வோம் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சூளுரைத்தார்.

  மேலும், திசை மாறிப் போய்க் கொண்டிருக்கும் தேசத்தை நல்வழிப்படுத்த தான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் களப் பணியாற்ற வேண்டும் எனவும் கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டார்.

   வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோரின் இல்லத் திருமணங்களை சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்தி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

    சாதகம், பாதகம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் துன்பங்ளே வரக் கூடாது என்று நினைப்பது கோழைத்தனம். துன்பங்களை எதிர்கொண்டு அவற்றை வெல்வது தான் வாழ்வின் சுவை. இருட்டு இருந்தால்தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோன்று, துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால்தான், அதன் முழுப் பலனை உணர முடியும்.

    உளர்ளத்தில் நம்பிக்கையும், அச்சமற்ற தன்மையும் இல்லாத வர நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள்.

    நீங்கள் உங்களை தாழ்த்திக் கொள்ளக் கூடாது. உங்களுடைய எண்ணங்கள் செயலற்றுப் போனால், அச்சம், சோர்வு ஆகியன உடலைக் கூனாக்கி உள்ளத்தை மண்ணாக்கி விடும்.

    குட்டிக் கதை: ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுத் தேவைக்காக தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தண்ணீர் எடுத்து வர இரண்டு பானைகளை வைத்திருந்தார். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு கழியைத் தோளில் சுமந்து செல்வார்.

     இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வரும் போது, ஓட்டையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். ஓட்டையில்லாத பானை, ஓட்டையுள்ள பானையைப் பார்த்து எப்போதும் அதன் குறையை பற்றி கிண்டல் செய்யும்.

    இதுகுறித்த குறையை விவசாயியிடம் தெரிவித்தது ஓட்டையுள்ள பானை. அதற்குப் பதிலளித்த விவசாயி, நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகளை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து இருந்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்றார். இதைக் கேட்ட பானை தன்னை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது.

     தாழ்வு மனப்பான்மையை விலக்குங்கள்: தாழ்வு மனப்பான்மையை விலக்கி விட்டு, துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால் உங்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. வலிமை, வாழ்வை வானளவுக்கு உயர்த்தும். நம்பிக்கையைத் துணை கொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

      அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர். சந்திக்காத சோதனைகளா? அந்தச் சோதனைகளை சாதனைகளாக்கி தீய சக்தியை திக்குமுக்காடச் செய்து இந்த மாபெரும் இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் எம்.ஜி.ஆர்.

     எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்ற நான் சந்திக்காத சோதனைகளா? என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த எத்தனை சதித் திட்டங்கள் தீய சக்திகளால் தீட்டப்பட்டன? எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டன? எத்தனை மிரட்டல்கள்? எத்தனை உருட்டல்கள்? இவற்றையெல்லாம் துணிச்சலுடன் நான் எதிர்கொண்டதால் தான் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறேன்.

     முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை போக்கி தன்னம்பிக்கையை வளர்த்தால் எந்தப் பிரச்னையையும் சமாளித்து விடலாம்.

     ஒத்துழைப்பு தாருங்கள்: திசை மாறிப் போய்க் கொண்டிருக்கும் சேதத்தை நல்வழிப்படுத்த நான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு அரசியல் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் கட்சியினர் அனைவரும் களப் பணியாற்ற வேண்டும். அதை நீங்கள் நிச்சயம் செய்வீர்கள். நாற்பதையும் நாமே வெல்வோம் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com