சி.ஏ. படிப்பில் முதலிடம் பெற்ற பிரேமாவுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
By பாலா | Published On : 24th January 2013 07:25 PM | Last Updated : 24th January 2013 08:00 PM | அ+அ அ- |

சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த, மும்பை வாழ் தமிழ் மாணவி பிரேமாவின் சாதனையைப் பாராட்டி ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில்:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பெரிய கொல்லியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், கடந்த 20 ஆண்டுகளாக மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் தொழில் புரிந்து வருகிறார். அவரது மகள் பிரேமா. அவர் அண்மையில் நடைபெற்ற சி.ஏ., தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்து எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.இவரது சாதனை தமிழ்ச் சமுதாயத்துக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையில் கல்வி பயின்று, நிதித்துறையில் மிக உயரிய கல்வியாகக் கருதப்படும் சி.ஏ. தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்த பிரேமாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை கௌரவிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.