13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது: கருணாநிதி
By dn | Published On : 26th July 2013 07:43 PM | Last Updated : 26th July 2013 08:20 PM | அ+அ அ- |

13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலையில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், தமிழர்களுக்குத் தன்னாட்சி கிடைக்கும் வரை மத்திய அரசின் பணி தொடரும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
எனக்கு (கருணாநிதி), மற்றும் சீத்தாராம் யெச்சூரிக்கு முன்பு எழுதிய கடிதத்திலும் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை வாழ் தமிழர்கள் உள்பட அங்குள்ள அனைத்துத் தரப்பினரும் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற்று, நல்லணிக்கத்தோடு வாழ வேண்டுமென்ற கருத்தில் இந்தியா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.1987-ம் ஆண்டு இந்தியா - இலங்கைக்கு இடையே இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் நிறைவேறியது.இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் தற்போது இலங்கை அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது.
இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு முழுமையானதும், நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு காண வேண்டும்.ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா கடும் அழுத்தம் தர வேண்டும்.குரல் கொடுத்தவர்கள் எங்கே?... இலங்கையின் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தைத் ரத்து செய்யக்கூடாது என்று முதல்வர் கடிதம் எழுதி,அதற்கு பிரதமர் உடனடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
இதிலிருந்தே இலங்கைத் தமிழர் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும்.சட்டப்பேரவையில் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தபோது, சிலர் தமிழ் ஈழமே கிடைத்துவிட்டது என்பதைப் போல மகிழ்ந்தனர்.தற்போது 13-வது அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியக் கூடிய நிலைதான் உள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னை என்றாலே தாங்கள்தான் என்பது போல எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு வந்தவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தேட வேண்டிய நிலை இருக்கிறது.ஆர்ப்பாட்டம்: 13-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் ஈழத் தமிழர் பிரச்னைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது.
இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா.மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண்பதுதான் நல்ல தீர்வாக அமையும்.எனினும் தாற்காலிக தீர்வாவது ஏற்பட வேண்டும் என்பதற்குத்தான் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் இதை வலியுறுத்தியே டெசோ சார்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் "தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்' நடைபெற உள்ளது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.