போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவு: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
By வெங்கடாச்சலம் | Published On : 14th June 2013 11:30 PM | Last Updated : 14th June 2013 11:30 PM | அ+அ அ- |

போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவு ஏற்பட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடி மெட்டு மலைச்சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மலைச்சாலையில் காலையிலும், மாலையிலும் போக்குவரத்து அதிகமாக உள்ள நேரம் தவிர பகல் நேரங்களில் பாறைகளை வெடி வைத்து உடைத்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் வழக்கம்போல் பாறையில் வெடி வைத்து தகர்த்ததில் ஒரு பாறை சாலையில் சரிந்தது. இதனையடுத்து அதன் மேலிருந்த பாறைகளும் அடுத்தடுத்து சரிந்தன. இதனால் சாலை முழுவதும் பாறைகளால் முடியது. போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதில் கேரள பகுதியிலிருந்து போடி நோக்கி வந்த 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நடுவழியில் சிக்கிக்கொண்டன. இதனிடையே பாறை சரிவு ஏற்பட்ட தகவல் போடி முந்தல் சோதனை சாவடிக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள போலீஸார் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் போடியிலிருந்து வாகனங்களை போடிமெட்டு மலைச்சாலையில் அனுமதித்ததால் போடியிலிருந்து கேரளா நோக்கு சென்ற 100-க்கும் மேற்பட்ட வாகனங்களும் சிக்கிக்கொண்டன.
இதனால் போடியிலிருந்து சென்ற மீட்பு வாகனங்களும் மீட்பு பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. சிரமத்திற்கிடையே ஒரு வாகனம் மட்டும் பாறைகளை உடைத்து அப்புறப்படுத்த 5 மணி நேரம் ஆனது. இதில் பாறை சரிவு ஏற்பட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். சிரமத்திற்கிடையே மாலையில் பாதை சரிவு சீராக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.