இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல்: மம்தா பானர்ஜி
By | Published On : 08th March 2013 05:58 PM | Last Updated : 08th March 2013 05:58 PM | அ+அ அ- |

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மக்களவைக்குத் தேர்தல் வரும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது மேற்கு வங்கத்தில் 16 ஆலைகள் அமைக்க ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலகட்டத்தில் ரயில்களில் கரப்பான்பூச்சி, எலி பிரச்னை உள்ளது என்று தொலைக்காட்சிகளில் தினசரி செய்தி வெளிவரும். இப்போது அந்தக் கரப்பான்பூச்சிகளும் எலிகளும் அமெரிக்கா போய்விட்டனவா? வங்கத்தின் குரல் வளையை நெரிக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது.
மேற்கு வங்கத்துக்கு கிடைக்க வேண்டிய ரயில்வே திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெறும். தேவைப்பட்டால் ரயில்வே துறை மீண்டும் திரிணமூல் காங்கிரஸுக்கே திரும்பிவரும் என்றார்.