புதுவையில் அடுத்த ஆட்சி யாருடையது? அவையில் கலகலப்பை தொடங்கிவைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.

புதுவையில் அடு்த்து ஆட்சியமைக்கப்போவது யார் என்ற விவாதத்தை எம்.எல்.ஏ.க்களிடையே ஏற்படும் வகையில் காங்கிரஸ் கட்சி பேரவை உறுப்பினர் தொடங்கிவைத்தது, அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

புதுவையில் அடு்த்து ஆட்சியமைக்கப்போவது யார் என்ற விவாதத்தை எம்.எல்.ஏ.க்களிடையே ஏற்படும் வகையில் காங்கிரஸ் கட்சி பேரவை உறுப்பினர் தொடங்கிவைத்தது, அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

காரைக்காலில் பத்திரிகையாளர் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள் உளளிட்ட முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பேரவை உறுப்பினர்கள் பேசும் வரிசையில் காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் (காங்கிரஸ்) பேசத் தொடங்கினார். புதுச்சேரியில் பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு சொந்த கட்டடம் இருப்பதுபோல், காரைக்காலில் அமைத்துத்தர ரங்கசாமி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மு.சந்திரகாசு மேற்கொள்ளவேண்டும். இவர்களது ஆட்சியில் அதை செய்யத் தவறினால், அடுத்து வரும் காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் நிறைவேற்றித்தருவோம் என்றார்.

அடுத்து திருநள்ளாறு சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா (என்.ஆர்.காங்கிரஸ்)  பேச வந்தார். பத்திரிகையாளர்களுக்கு சலுகைகளை ரங்கசாமிதான் பட்ஜெட்டில் அறிவித்தார். மக்களுக்கும் ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகிறார். இந்த ஆட்சியில் நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது. அடுத்தும் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிதான் ஏற்படும். அப்போது மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும், இது உறுதி என்றார்.

தொடர்ந்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் (திமுக) பேச வந்தார். இங்கு பேசியோரால் மட்டும்தான் ஆட்சியமைக்கமுடியுமென்றால், நாங்கள் என மடம் அமைத்து தனியாக செயல்படப்போகிறோமா, திமுக ஆட்சிக்கு வராதா, மக்கள் திமுக ஆட்சியை எதிர்பார்த்திருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லையா, கண்டிப்பாக அடுத்து புதுவையில் திமுக ஆட்சியே ஏற்படும். எங்கள் ஆட்சியில் மக்களை திருப்திப்படுத்துவோம் என்றார்.

இறுதியில் வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு பேசினார். அவர் பேசும்போது, ரங்கசாமி இருக்கும் வரை அவரது ஆட்சியே புதுவையில் இருக்கும். யார் வேண்டுமானாலும் முதல்வராக வர நினைக்கலாம். எல்லோரையும் ஒப்பிடும்போது மக்கள் செல்வாக்கு உள்ளவர் ரங்கசாமி மட்டுமே. புதுவை அரசு வரலாற்றில் ரங்கசாமி செய்த சாதனைபோல் எந்த முதல்வரும் செய்ததில்லை. அவையில் இருக்கும் எங்கள் கட்சியை சேர்ந்த பேரவை உறுப்பினர் வெளியேறிவிடுகிறோம், இருப்போரிடம் யாருக்கு உங்கள் ஆதரவு என்று கேட்டால் அனைவரும் ரங்கசாமிக்குத்தான் என்பார்கள் என்றார். இவர்களது அடுத்த ஆட்சி அமைக்கும் பேச்சுகள், அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்களுக்கோ அரசியல் நிகழ்ச்சியாக மாறிவிட்டதே என்ற கலக்கம் ஏற்பட்டது.

மேடையில் இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே.கணபதி (அதிமுக), திருமுருகன் எம்.எல்.ஏ. பேசும் முன் பேசிவிட்டு அமர்ந்துவிட்டதால், இந்த தொடரில் அவரது கருத்து பதிவாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com