ஐபிஎல்: வீரர்களைத் தடுக்கும் அதிகாரம் இல்லை: இலங்கை கிரிக்கெட் வாரியம்
By dn | Published On : 30th March 2013 08:31 PM | Last Updated : 30th March 2013 08:31 PM | அ+அ அ- |

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாடுவதை தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, சென்னை ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு அறிவித்தது. எனினும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இலங்கை வீரர்களுக்கு அனுமதியளித்த அந்நாட்டு அரசு, தமிழகத்தில் நடைபெறும் போட்டியில் மட்டும் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும். அவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கக்கூடாது. அப்படி பங்கேற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்குள்ள புத்த பிக்குகளின் அமைப்புகள் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியிருந்தன.இந்த நிலையில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரிய செயலர் நிஷந்தா ரணதுங்கா, "வீரர்களை தடுத்தும் நிறுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கக்கூடாது என்று வீரர்களை வற்புறுத்த முடியாது' என்று கூறியுள்ளார்.