அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பள்ளி மாணவி உயிரிழப்பு: ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டி.சுலோச்சனா. இவரது மகள் சுதாசினி (13). எட்டாம் வகுப்பு படிக்கும் இவருக்கு, கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி வயிற்றுப்போக்கு

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த பள்ளி மாணவியின் தாய்க்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டி.சுலோச்சனா. இவரது மகள் சுதாசினி (13). எட்டாம் வகுப்பு படிக்கும் இவருக்கு, கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் காலை 9 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது, சுலோச்சனா மருத்துவர் பாண்டியனை அணுகிய போது, அவர் இதர நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். அதன் பிறகு, மருத்துவர் சுமதியை அணுகினேன். அவர் மற்றொரு பெண்ணிடம் தேவையில்லாத விவாத்தில் ஈடுபட்டிருந்தார்.

அதன் பிறகு, மருத்துவர் ராமச்சந்திரன் சுதாசினியை அனுமதித்து சிகிச்சை அளித்தார். இருந்த போதிலும் பிற்பகல் 1.15 மணிக்கு அவர் இறந்துவிட்டார். மருத்துவர்களின் அலட்சியப் போக்கே சுதாசினி இறந்ததற்கு காரணம்.இது தொடர்பாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, அதன் பிறகு அந்த வழக்கை முடித்து வைத்து விட்டனர்.எனவே, அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்த எனது மகளின் வழக்கை திரும்ப விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என சுலோச்சனா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மருத்துவர்கள் நோயாளி மீது போதிய கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்த மருத்துவ அறிவியல் துணை இயக்குநர், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், நோயாளியின் உடல்நிலை மோசமான நேரத்தில் மருத்துவர்கள் யாரும் உடன் இல்லை. அங்கு பணிபுரியும் செவிலியர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை அரசு தரப்பிலும் மறுக்கவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் அலட்சியமாக இருந்தனர் என்பதற்கும் போதிய ஆவணங்கள் இல்லை. அதனால், இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட முடியாது. அதனால், இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்.

தவிர, இறந்தவர் எட்டாம் வகுப்பு படித்த 13 வயது மாணவி. மனுதாரருக்கு ஒரே மகள். அவரது மரணம் இயற்கையானது அல்ல. எனவே, மனுதாரருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக 9 சதவீத வட்டியுடன் சுகாதாரத் துறை வழங்க வேண்டும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com