குற்றால அருவிகளில் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள்

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளிக்கும் போது எண்ணெய், ஷாம்பு, சீயக்காய், சோப்பு போன்ற வேதிப்பொருள்களை பயன்படுத்துவதற்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளிக்கும் போது எண்ணெய், ஷாம்பு, சீயக்காய், சோப்பு போன்ற வேதிப்பொருள்களை பயன்படுத்துவதற்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.

 அருவிகளின் அருகில் இது போன்ற பொருள்கள் விற்பனை செய்வதற்கும் தடைவிதித்துள்ளது உள்பட 33 உத்தரவுகளை குற்றாலம் ஊராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது.

 வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவிவரம்: திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இயற்கையாக விழும் அருவி உள்ளது. குற்றாலத்தில் சாரல் விழத் தொடங்கும் பருவ காலத்தில் குற்றால அருவியை பார்வையிடுவதற்கும், அங்கு குளிப்பதற்காகவும் தென்னிந்தியாவில் இருந்து பல லட்சம் மக்கள் இங்கு வருகை புரிகின்றனர்.

  மலை உச்சியிலிருந்து கீழே விழும் தண்ணீரில் பல மூலிகைகள் கலந்திருப்பதால் அதில் குளிக்கும் போது உடலும், மனதும் நன்றாக இருக்கும். நான் கடந்த ஆண்டு மே மாதம் குற்றாலத்துக்கு சென்றேன்.

 அங்கு சென்று பார்த்த போது, சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போதிய பாதுகாப்பு ஆகியவை குறைவாக இருந்தது. பார்வையாளர்களை ஒழுங்குபடுத்த போதிய போலீஸ் படை இல்லை. போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கும், அங்கு வசூலிக்கும் கட்டடணமும் அதிகமாக இருந்தது.

 அருவியில் குளித்து வெளியே வரும் ஆண் மற்றும் பெண்களுக்கு உடை மாற்றுவதற்கு கூட அறைகள் அங்கு இல்லை. திறந்த வெளியில் உடைகள் மாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. அவசர உதவி மையம் மற்றும் முதலுதவி மையம் ஆகிய வசதிகள் கூட அங்கு இல்லை.

 எனவே, குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுலாத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

 இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணையின் போது, மனு தொடர்பாக குற்றாலத்தை ஆய்வு செய்ய குழு அமைத்தனர். அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்பைடியில் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

  இதில் முதல் உத்தரவே, குற்றால அருவியில் குளிக்கும் போது, எண்ணெய், ஷாம்பு, சீயக்காய், சோப்பு, பிளாஸ்டிக் பொருகள், துணி துவைத்தல் போன்ற பயன்படுத்தக்  கூடாது. அது போன்ற பொருள்களை குளிக்கும் இடங்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த தண்ணீர்தான் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு குடிநீருக்கான பிராதன ஆதாரம்.

 மேலும், அருவி விழும் பகுதிகளில் துருப்பிடிக்காத வகையில் தூண்கள் மற்றும் பிடிமானங்கள் அமைக்க வேண்டும். பருவ காலம் தொடங்குவதற்கு முன் அதில் வர்ணம் பூச வேண்டும்.

 அருவி விழும் தரையில் உள்ள குழிகளை மூட வேண்டும். அதில் தரமான கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். இதை அதிகாரிகள் தினமும் கண்காணிக்க வேண்டும். மேலும், இருள் சூழ்ந்த பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாத வகையில், அதிக வெளிச்சம் தரக் கூடிய விளக்குகளை அமைக்க வேண்டும்.

 அருவி விழும் பகுதிகள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகே அதிகமான கழிவறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் கட்ட வேண்டும். பெண்களுக்கான கழிவறை மற்றும் உடை மாற்றும் அறைகளை பெண்களைக் கொண்டு தனியாக பராமரிக்க வேண்டும்.

 ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். அருவிகளுக்கு அருகே உள்ள கழிவறைகளை 24 மணி நேரத்துக்குள் மாற்ற வேண்டும். அப்போதுதான், ஆற்று நீர் மாசுபடுவதைத் தடுக்க முடியும்.

 அருவிகளுக்கு அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை உடனடியாக பழுதுபார்க்க வேண்டும். மேலும், அதிகமான சுத்திகரிப்பு இயந்திரங்கள், குடிநீர் மையங்களை விரைவில் அமைக்க வேண்டும்.

 அருவிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி, தூரமான இடங்களில் அமைக்க வேண்டும். அருவிகளுக்கு அருகே திறந்த வெளியில் மதுபானங்கள் அருந்துவதை தடுக்க வேண்டும்.

 சட்டவிரோதிகளை கண்டறிந்து, அவர்களை அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. சுகாதார ஆய்வாளர்கள் அப்பகுதியில் உள்ள உணவகங்களையும், உணவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரம் இல்லாமல் உணவு தயாரிக்கும் உணவகங்களை சீல் வைக்க வேண்டும். அதிகமான போலீஸôரை பணிக்கு தேர்வு செய்ய வேணடும்.

 குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் குறைக்க வேண்டும். நடமாடும் நீதிமன்றத்தை அங்கே நிறுத்த வேண்டும். குற்றச் செயல்கள் புரிபவர்களிடமிருந்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும். 

 மருத்துவ அவசர உதவிக்காக 24 மணிநேரம் செயல்படும் மருத்துவமனைகள் அல்லது மையங்கள் அங்கே அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக்குழு அருவிகளுக்கு அருகே நிறுத்த வேண்டும். கடைக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுóம்.

 கார் நிறுத்தம், அருவிகள், கோயில்கள், பஸ் நிலையம் போன்ற முக்கியமான பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்  என்பன உள்பட 33 வகையான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

 மேலே கூறப்பட்ட உத்தரவுகளை அனைத்தையும் நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் உள்பட 9 அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com