திண்டுக்கல்லில் தொடர்ந்து 4-வது நாளாக தொடர்மழை: 2 மணி நேரம் வெளுத்து வாங்கியதில் வெள்ளப் பெருக்கு

காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை அடுத்து, திண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து 4ஆவது நாளாக மழை பெய்தது. வியாழக்கிழமை பிற்பகலில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை அடுத்து, திண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து 4ஆவது நாளாக மழை பெய்தது. வியாழக்கிழமை பிற்பகலில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

 வங்க கடலி்ல் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையால் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வந்தது.

 இந்த நிலையிலும் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் லேசான சாரலுடன் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் சாரல் வலுவான மழையாக மாறத் தொடங்கியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைகள், நிழற்குடைகளில் ஒதுங்கத் தொடங்கினர்.

 மழை தீவிரம் அடைந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் மதுரை மற்றும் திருச்சி செல்லும் நான்கு வழிச் சாலையில்(திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதி) செல்லும் கார்கள், லாரிகள் மற்றும் பேருந்துகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மிதமான வேகத்தில் சென்றன.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்:

 சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால், திண்டுக்கல் ஆர்எம் காலனி பிரதான சாலை, தாடிக்கொம்பு சாலை, கரூர் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்திற்கு இடையே வாகனத்தை மெதுவாக நகர்த்திச் செல்லும் நிலை ஏற்பட்டது.

 ஆர்எம் காலனி 1ஆவது கிராஸ் பகுதியில், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நின்றது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஏற்படுத்திய அலையால், அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனை அடுத்து மணல் மூலம் தாற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தி தண்ணீர் வருவதை தடுக்கும் முயற்சியில் அப்பகுதியினர் ஈடுபட்டனர்.

 இதேபோல் ஆர்எம் காலனி மின்மயானம் அருகிலும் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால், சாலையின் வலதுபுறம் வழியாகவே அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டன. மேலும் நகரின் பல பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

 திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

 திண்டுக்கல்-15.40, கொடைக்கானல்-69.20, நத்தம்-32.50, நிலக்கோட்டை-    41.20, பழனி-6.00, வேடசந்தூர்-    28.05, சத்திரபட்டி-13.50, வேடசந்தூர் புகையிலை மையம்    -29.06, கொடைக்கானல் போட்கிளப்-97.50, காமாட்சிபுரம்-    23.80. மொத்தம் 356.21 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com