திருச்சி - காரைக்குடி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்: தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.மேலும், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி - காரைக்குடி இடையே ரூ.374 கோடி செ

திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

மேலும், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி - காரைக்குடி இடையே ரூ.374 கோடி செலவில் 4 வழிச் சாலை அமைப்பதற்கான  திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டு வந்தது.

இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கி, ஒப்புதலும் அளித்தது. இதன்படி, இந்த திட்டத்துக்கான பணிகளை 2013-ஆம் ஆண்டுக்குள் முடிப்பதற்கும் திட்டமிடப்ட்டது.

 இந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை தமிழக அரசு திரும்பப் பெற்றது.

  மேலும், இந்தத் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கும், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசுப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தேசிய நெடுஞ்சாலைத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

 இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி திருச்சி - காரைக்குடி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.

 மேலும், இந்தத் திட்டப் பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

 தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

 இந்த மனு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை (அக்.15) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தேசிய நெடுஞ்சாலைத் துறை தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜரானார்.

 அரசு தரப்பில் அரசு வழக்குரைஞர் ஆஜராகி திருச்சி - காரைக்குடி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதிக்க கோரினார்.

 மனுவை விசாரித்த நீதிபதிகள், சாலை விரிவாக்கப் பணிகளுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com