ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது.

மேலும், 7 பேர் விடுதலை செய்யப்படுவது குறித்த  வழக்கு விசாரணையை 3 மாதத்தில் நடத்தி முடிக்க அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பினை இன்று வழங்கியது.

தீர்ப்பில், குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். 5 முதல் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும்.  இதில் 7 விதமான விஷயங்கள் ஆராயப்பட வேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற வழக்கை முதன்முறையாக உச்ச நீதிமன்றம் எதிர்கொள்கிறது. 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான தடை தொடரும்.

7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான இடைக்கால தடை தொடரும் என்று கூறியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது தாமதமாக மத்திய அரசு முடிவு எடுத்ததாகக் கூறி, அவர்களுக்கு விதித்த தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. அதில், சிறை விதிகளுக்கு உள்பட்டு ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், தமிழக அரசின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்மமுறையீடு செய்தது.  அம் மனு மீது கடந்த மாதம் விசாரணை நடந்த போது, ராஜீவ் கொலையாளிகள் அனைவரும் பயங்கரவாதிகள். அவர்களை மத்திய அரசு அனுமதி பெறாமல் விடுதலை செய்ய தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

 இதையடுத்து, பயங்கரவாத வழக்கு என்பதால் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசிடம் கருத்தையோ, யோசனையையோ மாநில அரசு கேட்கலாம். ஆனால், மத்திய அரசின் உத்தரவின்படிதான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் வாதம் தவறு என்று தமிழக அரசு சார்பிலும், கைதிகள் சார்பிலும் வாதிடப்பட்டது. இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.

தீர்ப்பு அளிக்கப்பட்ட இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com