போடிமெட்டு மலைச்சாலையில் மீண்டும் பாறை சரிவு: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை மீண்டும் பாறை சரிவு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை மீண்டும் பாறை சரிவு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடிமெட்டு மலைச்சாலையில் 14 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே பாறை, மண் சரிவு ஏற்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்தனர். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை புலியூத்து அருவி அருகே வளைவு ஒன்றில் பாறை சரிந்து சாலையில் விழுந்தது.சுமார் 200 டன் எடை கொண்ட இப்பாறை விழுந்து சாலையின் ஓரத்தில் உருண்டு நகர்ந்தது. இதில் சாலையில் லேசான பள்ளமும், சேதமும் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜீப், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் முந்தல் மற்றும் போடிமெட்டு சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டன.

இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜா எபினேசர் தலைமையில் மீட்பு குழுவினர் பாறையை நகர்த்தும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சாலையில் இருந்த சிறிய பாறைகள், மண் அகற்றப்பட்டு பேருந்து, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் உடனே சீரமைக்கப்பட்டது.இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜா எபினேசர் கூறுகையில், 14 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்ட பாறை சரிவில் மீதியுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை அகற்றி வருகிறோம். அந்த பணி முடிந்தவுடன் புலியூத்து அருகே சரிந்த பாறையும் வெடிவைத்து அகற்றப்படும். இந்த பணிகளால் போக்குவரத்திற்கு பாதிப்பில்லை என்றார்.

இதனிடையே சனிக்கிழமையும் போடி மற்றும் போடிமெட்டு மலைச்சாலையில் கனமழை பெய்தது. இதனால் மேலும் சில இடங்களில் பாறை சரிவு மற்றும் மண் சரிவு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் அச்சத்துடனே வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com