முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கண்டித்து செப்.9-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட சங்கங்களில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதனையொட்டி பெங்களூருவில் பலத்த பாதுகா

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கண்டித்து செப்.9-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட சங்கங்களில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதனையொட்டி பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் ஆர்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பேருந்து, லாரிகள் மீது கல்வீசியதால் வாகனங்கள் சேதமடைந்தன. மண்டியாவில் காங்கிரஸ் அலுவலகமும் தாக்கப்பட்டது. 

தமிழ்நாட்டு எண்கள் கொண்ட கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளானது. பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு தமிழக அரசு பேருந்துகளின் மீது தமிழ் எழுத்துகளை அழித்துவிட்டு, கன்னடத்தில் தங்களின் எதிர்ப்பை சிலர் எழுத்தினர். இந்த நிலையில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு செப்.9-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பின் போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் முழு பாதுகாப்பிற்கு மாநகர காவல் ஆணையர் மேக்ரீக் உத்தரவிட்டுள்ளார்.

 இதனையடுத்து பெங்களூருவில் முழு அடைப்பின் போது பலத்த பாதுகாப்பு அளிக்க காவல்துறையினர் திட்டமிட்டு, நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த 1991-ஆம் ஆண்டு கர்நாடகத்தின் முதல்வராக பங்காரப்பா இருந்தப்போது, காவிரி விவகாரம் தொடர்பாக நடந்த கலவரத்தில் பெங்களூருவில் ஏராளமான தமிழர்கள் தாக்கப்பட்டனர். ஏராளமான பொது சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. 

இதனையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெறும் போராட்டம், முழு அடைப்பின் போதும் பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது வழக்கம். செப். 9-ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின் போதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் கூடுதல் ஆணையர் பி.ஹரிசேகரன் தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com