பெங்களூரில் தமிழ் இளைஞர் மீது தாக்குதல்: புதுச்சேரியில் கர்நாடக வங்கி முற்றுகை

காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட அமைப்பினர் அடித்து, உதைத்தனர்.

புதுச்சேரி: காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட அமைப்பினர் அடித்து, உதைத்தனர்.
பெங்களூரு, பிஇஎஸ் பாலிடெக்னிக்கில் படித்து வருபவர் சம்பத் (21). இவர் பெங்களூரைச் சேர்ந்த தமிழ் இளைஞராவார். காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டுள்ளதைக் கண்டித்து கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரு, மண்டியா, மைசூரு மாவட்டங்களில் தீவிர போராட்டம் நடந்துவருகிறது. கர்நாடக முழு அடைப்புப் போராட்டமும் செப்.9-ஆம் தேதி நடந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் சம்பத் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். கன்னடர்களையும், கன்னட நடிகர்களையும் அவதூறாக விமர்சித்து முகநூலில் பதிவிட்டுள்ளதாக அப் பகுதி கன்னட அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு, கிரிநகரில் சனிக்கிழமை சம்பத்தை வழிமறித்த கன்னட அமைப்பைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சரமாரியாக அவரைத் தாக்கினர். கன்னடர்களை இழிவுபடுத்திப் பேசியதற்கு ஆத்திரத்தை வெளிப்படுத்திய அந்த இளைஞர்கள், சம்பத்தை சூழ்ந்துகொண்டு தாக்கி, காலால் உதைத்தனர். இதை தாங்கிக் கொள்ள முடியாமல் சம்பத் கதறினார்.
கன்னடம் வாழ்க, காவிரி வாழ்க, காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம் என்று கூறுமாறு சம்பத்தை நிர்பந்தித்தனர். அதன்படி, சம்பத்தும் திரும்பக் கூறினார். பின்னர், தனது செயலுக்கு முகநூல் மூலம் சம்பத் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் தமிழர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள கர்நாடக வங்கியை பல்வேறு சமூக அமைப்புகள் முற்றுகையிட்டும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவம் பொறித்த போஸ்டர்களை கொளுத்தியும், கன்னடர்களின் செயல்களை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com