ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி பர்ஹன் வானி சுட்டுக் கொலை: காவல்துறை டிஜிபி
By dn | Published On : 09th July 2016 11:31 AM | Last Updated : 09th July 2016 11:31 AM | அ+அ அ- |

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து அந்த மாநில காவல் துறை டிஜிபி கே.ராஜேந்திரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பர்ஹன் முசாஃபர் வானி (21) என்ற பயங்கரவாதி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்து இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர வைக்க முயற்சி செய்து வந்தார்.
இவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் கோகெர்நாக் பகுதியில் அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்ற பாதுகாப்புப் படையினர், அவரைத் தேடினர். அப்போது, ஓர் இடத்தில் பதுங்கி இருந்த பர்ஹன் முசாஃபரும், மேலும் 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராஜேந்திரா தெரிவித்தார்.
பர்ஹன் முசாஃபர் வானி தனது 15-ஆவது வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது.