கோவை மாநகர காவல் ஆணையர் மீது வழக்கு: கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவிப்பு

கோவை: கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பை, தேச விரோத அமைப்பு என்று பொய்யான செய்தியை பரப்பி வரும்,

கோவை: கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பை, தேச விரோத அமைப்பு என்று பொய்யான செய்தியை பரப்பி வரும், கோவை மாநகர காவல் ஆணையர் மீது வழக்குத் தொடர இருப்பதாக அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலர் எல்.அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

 கோவையில் அண்மையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, மக்கள் அதிகாரம், நாம் தமிழர், மே 17 இயக்கம், ஆர்.எஸ்.ஒய்.எஃப், எஸ்.எஃப்.ஐ, டி.ஒ.எஃப். ஐ., சிபிஐ (எம்.எல்.) போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, மாணவர்களை வழிநடத்தியதாகவும் இவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றும் காவல் ஆணையர் அ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

 இந்த நிலையில், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பொதுச் செயலர் எல்.அப்துர் ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர் பீர்முஹமது, மாவட்டச் செயலர் அபுதாகீர் ஆகியோர் கோவையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர்.

 அப்போது அவர்கள் கூறும்போது, எங்களது இயக்கம் மாணவர்களின் நலனை, முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு கல்விப் பணி, சமூக சேவை, உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. சென்னை வெள்ளப் பெருக்கு, புயல் பாதிப்பின்போது நாங்கள் ஆற்றிய பணிகளை மக்கள் அறிவார்கள்.

இந்த அடிப்படையில்தான், தமிழகத்தின் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தில் தொடக்க நாள் முதலே எங்களது அமைப்பின் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றிருந்தனர். போராட்டம் அமைதியாக நடைபெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னையில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

பொதுமக்களின் உடைமைகளுக்கு காவல் துறையினரே தீயிட்டுக் கொளுத்துவதாக சமூக வலைத்தளங்களில் விடியோக்கள் பரவி வரும் நிலையில், அந்த பிரச்னையை திசை திருப்பும் நோக்கில், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை தேச விரோதிகள் என்று காவல் ஆணையர் அமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 இதை வன்மையாக கண்டிப்பதுடன், அவர் மீது வழக்குத் தொடரவும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுக முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தவறான தகவலைப் பரப்பி வரும் அமல்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com