காங்கிரஸ் அரசை குறைகூற ரங்கசாமிக்கு எந்த தகுதியும் இல்லை: முதல்வர் நாராயணசாமி

காங்கிரஸ் அரசை குறை கூற எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி: காங்கிரஸ் அரசை குறை கூற எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைக்கு வந்த ரங்கசாமி 10 நிமிடம் வந்து நாடகமாடி தான் செய்த தவறை மறைத்துவிட்டு எங்கள் அரசு மீது பழிபோட்டு வெளிநடப்பு செய்தார். ரங்கசாமி ஆட்சியில்தான் தனிக்கணக்கு தொடங்கப்பட்டது. இதனால் புதுவைக்கு கிடைக்க வேண்டிய 90 சதவீத மானியம் 30 சதவீதமாக மாறியது. இதற்கு ரங்கசாமிதான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

தற்போது மத்திய அரசை அணுகி நிதி ஆதாரத்தை அதிகரிக்க வலியுறுத்தி வருகிறோம். திட்டமில்லா செலவுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர வேண்டும் என வலியுறுத்துகிறோம். இது கிடைக்கும் என நம்புகிறோம். எங்கள் அரசைப்பற்றி ரங்கசாமிக்கோ, என்ஆர்.காங்கிரசுக்கோ குறை கூற எந்த தகுதியும் கிடையாது.

ஒரு துறை திட்டங்களை மற்ற துறைகளுக்கு மாற்றி நிர்வாகத்தை சீர்குலைத்து, மாநில வளர்ச்சியை சீர்குலைத்தவர் ரங்கசாமி. நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டில் மக்கள் நல திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம். இடையில் ஏற்படும் காலதாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம். 

தனது ஆட்சியில் ரெüடிகளுக்கு அடைக்கலம் தந்தவர் ரங்கசாமி. அவரது ஆட்சியில் ரெüடிகள் ராஜ்ஜியம் நடந்தது. தற்போது மக்களுக்கு எங்கள் அரசு பாதுகாப்பு கொடுத்துள்ளது.

பொதுப்பணி , உள்ளாட்சி, மின்துறை, தொகுதி மேம்பாட்டு நிதி என ரூ.300 கோடி தராமல் சென்றவர் ரங்கசாமி. இந்த தொகை அனைத்தையும் நாங்கள் வழங்கியுள்ளோம். நிர்வாக திறமையில்லாத, மக்கள் நலனில் அக்கறையில்லாத, தொகுதி மக்கள் மீது மட்டும் கவனம் செலுத்தும் அரசாக ரங்கசாமி ஆட்சி இருந்தது.

அவர்களின் ஆட்சி முறைகேடுகளை வெளிக்கொண்டுவரும் வேலையை செய்து வருகிறோம். இதைப்பற்றி மக்கள் மத்தியில் பேச தயாரா? ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட வாரிய தலைவர் பதவிநீட்டிப்பு, விவசாயிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி போன்றவற்றிக்கு அனுமதி பெற்றுள்ளோம்.

மருத்துவ பட்டமேற்படிப்பில் முறைகேடு நடந்ததாக அதிகாரிகள் மீது சிபிஐயில் புகார்செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில் எந்த தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லை என கருதி புதுவை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆளுநர் தனது தரப்பு ஆள்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை முறையாக எங்கள் அரசு சேர்த்துள்ளது என பல முறை கூறி சட்டப்பேரவையிலும் அறிக்கை சமர்பித்துள்ளேன்.

ஊழியர்களுக்கு எச்சரிக்கை

7வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என கூட்டுறவு, பொதுத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொறியியல் கல்லூரியில் கதவை மூடி போராடுகின்றனர். புதுவை, தில்லி தவிர எந்த மாநிலமும் 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை.

புதுவையில் முழுமையாக அமல்படுத்த மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளோம். மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நிதி வராதபட்சத்தில் பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது இயலாத காரியம்.

லாபத்தில் இயங்கும் அமைப்புகளுக்கு 7வது சம்பள கமிஷனை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுக்க உள்ளோம். இனிமேல் விடுப்பு எடுத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் சம்பளம் கிடையாதது.

போராட்டம் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். அவர்களிடம் தெளிவாக இப்பிரச்னை பற்றி விளக்கியுள்ளேன்.

இருப்பினும் தொடர்ந்து போராடுகின்றனர். இப்படி போராட்டம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் நாராயணசாமி.

பேரவை துணைத்தலைவர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏக்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், தீப்பாய்ந்தான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com