காஷ்மீர் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
காஷ்மீர் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது 


புதுதில்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மாநில உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு காஷ்மீரை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியது.

 அதற்கு முன், ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. ஏற்கெனவே, அந்த மாநிலத்தில் அதிக அளவில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால், கூடுதலாக ராணுவம் குவிக்கப்பட்டதால் பல்வேறு யூகங்கள் எழுந்தன.

இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு-காஷ்மீரில் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

144 தடை உத்தரவை அடுத்து ஜம்முவில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் 4க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே, காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் குறித்து பேச இருப்பதால் மக்களவை, மாநிலங்களவை பாஜக உறுப்பினர்கள் அனைவரும் அவை நடவடிக்கையில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவிட்டுள்ளார்.  

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  

தற்போது பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com