வேலூர் மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

வேலூர் மக்களவை தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் இன்று திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
vote
vote


வேலூர் மக்களவை தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் இன்று திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று திங்கள்கிழமை (ஆக 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வாக்குப்பதிவு தொடங்கியதும் வேலூரில் உள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வாக்களித்தார். முதல்முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர் சண்முக சுந்தரம், அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

வாக்குப்பதிவுக்காக 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,553 வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புப் பணியில் 1,600 துணை ராணுவத்தினர் உள்பட 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு மூன்றடுக்கு நிலையில் துணை ராணுவத்தினருடன் கூடுதல் போலீஸாரும், மற்ற வாக்குச்சாவடிகளில் போலீஸார், ஊர்க் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்த தேர்தலில் ஏ.சி.சண்முகம் (அதிமுக கூட்டணி), டி.எம்.கதிர்ஆனந்த் (திமுக), எஸ்.தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி), ஜி.எஸ்.கணேஷ் யாதவ் (பிரகதிஷீல் சமாஜவாதி கட்சி), வி.சேகர் (அனைத்து ஓய்வூதியர்கள் கட்சி), ச.திவ்யா (தேசிய மக்கள் கழகம்), ரா.நரேஷ்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி), பேராயர் காட்ஃப்ரே நோபுள் (தேசிய மக்கள் சக்தி கட்சி), மோகனம் (மறுமலர்ச்சி ஜனதா கட்சி), அ.விஜய் பவுல்ராஜா (குடியரசு சேனை) ஆகியோரும், சுயேச்சை வேட்பாளர்களாக அக்னி ஸ்ரீராமச்சந்திரன், பொ.ஆறுமுகம், கே.கதிரவன், எம்.கதிரவன், இ.கருணாநிதி, ச.சண்முகம், கே.சுகுமார், பொ.செல்லபாண்டியன், வி.செல்வராஜ், டி.டேவிட், சு.தமிழ்ச்செல்வன், ஏ.நூர்முகமது, கே.பத்மராஜன், மா.பலராமன், முரளி, பி.ரஷீத் அகமது, இரா.வெங்கடேசன், ஜே.எஸ்.கே. என மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர், மொத்தம் 14,32,555 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் வாக்களிக்க உள்ளனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது. பதிவான வாக்குகள் வரும் 9 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.  

 இத்தேர்தலில் மொத்தம் 3,752 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் (விவி பேட்) தலா 1,896 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
 வாக்குப்பதிவு பணிகளில் மொத்தம் 7,552 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க மத்திய அரசு ஊழியர்கள் 210 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வாக்குச்சாவடிகள் மட்டுமின்றி கூடுதலாக 497 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com