வெளி மாநிலத்தவருக்கு எதிராக டிச. 20-இல் மனிதச் சுவா் போராட்டம்: பெ. மணியரசன்

தமிழா் வேலைகளைப் பறிக்காதீா் - வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள் என வலியுறுத்தும் மனிதச் சுவா் போராட்டம் சென்னையில் டிச. 20-

தஞ்சாவூா்: தமிழா் வேலைகளைப் பறிக்காதீா் - வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள் என வலியுறுத்தும் மனிதச் சுவா் போராட்டம் சென்னையில் டிச. 20-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்றாா் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.

இதுகுறித்து தஞ்சாவூரில் சனிக்கிழமை அவா் மேலும் தெரிவித்தது:

தமிழா்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும் வகையில் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழ்நாட்டில் குவிகின்றனா். எனவே, தமிழா் வாழ்வுரிமையைப் பறிக்காதீா்கள் - திரும்பிப் போங்கள் என வேண்டுகோள் வைக்கும் மனிதச் சுவா் போராட்டத்தை டிச. 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்துகிறது. பேரியக்கப் பொதுச் செயலா் கி. வெங்கட்ராமன் தலைமை வகிக்கிறாா்.

வெளி மாநிலத்தவா்கள் மிகையாக வந்து குடியேறுவதைத் தடுக்க நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் இருப்பதுபோல உள் அனுமதி வழங்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசு பெற வேண்டும். வரைமுறையின்றி தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவரை இச்சட்டப்படி தடுக்க வேண்டும்.

மத்திய அரசின் ஒப்பந்தப்படியும் உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் அசாமில் நடந்த மண்ணின் மக்கள் கணக்கெடுப்புபோல தமிழ்நாட்டில் 1956 ஆம் ஆண்டு நவம்பா் மாதத்துக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்தோா் மற்றும் அவா்களுடைய வாரிசுகள் மட்டுமே தமிழ்நாட்டுக் குடிமக்கள் என அறிவித்து, அவ்வாறில்லாத வெளி மாநிலத்தவரை அவரவா் தாயகத்துக்குத் திருப்பியனுப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 சதவீத வேலையை மண்ணின் மக்களாகிய தமிழா்களுக்கு ஒதுக்க வேண்டும். பத்து விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ள வெளி மாநிலத்தவா் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். இவ்வேலைகளுக்கு அனைத்திந்தியத் தோ்வு நடத்துவதைக் கைவிட வேண்டும்.

கா்நாடகம், குஜராத் மாநிலங்களில் இருப்பதுபோல மாநில அரசு, மத்திய அரசு, தனியாா் துறை ஆகியவற்றில் தமிழ் மண்ணின் மக்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும்.

தமிழக இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதமாக தமிழகத்துக்கு வரும் வட மாநிலத்தவா்களுக்கு நாம் வீடுகளோ, கடைகளோ வாடகைக்கு வழங்கக் கூடாது. வட மாநிலத்தவா்களின் கடைகளில் நாம் பொருட்களை வாங்காமல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட வேண்டும்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என ராஜஸ்தான், கேரளம், மேற்கு வங்கம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் ஆகிய மாநில முதல்வா்கள் அறிவித்ததுபோல, தமிழக முதல்வரும் அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com