சிதம்பரத்தை சிறையில் அடைத்தால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்: எச்.ராஜா தாக்கு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தண்டனைக் கைதியாக்கி சிறைக்கு அனுப்பினால் மட்டுமே ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை
சிதம்பரத்தை சிறையில் அடைத்தால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்: எச்.ராஜா தாக்கு


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தண்டனைக் கைதியாக்கி சிறைக்கு அனுப்பினால் மட்டுமே ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார், 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. சுமார் 6 வருட காலம் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் செக்கிழுத்து எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். அவர் விடுதலையாகி வெளியே வந்தபோது சிறைவாசலில் அவரது மனைவி, சுப்ரமணிய சிவா உள்பட நான்கு பேர்களே இருந்தனர்.

ஆனால், கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, சுமார் 15 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ப.சிதம்பரம் ஊழல் வழக்கில் கைதானார். சிறையில் கட்டில், தலையணை, வெஸ்டர்ன் டாய்லெட், டி.வி., வீட்டிலிருந்து சாப்பாடு என எல்லா வசதிகளையும் கேட்டுப் பெற்றார்.

சிறைவாசம் அவரது உடல் நலனை மிகவும் பாதித்துவிட்டது என்றும் அதனால் எட்டு கிலோ எடை குறைந்துவிட்டது என்றும் அவருடைய வழக்கறிஞர்கள் அழாத குறையாக கெஞ்சி, கூத்தாடி ஜாமீன் பெற்றனர்.

கிடைத்தது ஜாமீன் தான். ஏதோ வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தது போலவும் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று விடுதலையாகி வந்தது போலவும் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க ஒரு கூட்டம்!

ஜாமீனில் வெளிவந்த பிறகு இந்த வழக்கு சம்பந்தமாக பொது நிகழ்ச்சிகளில் பேசவோ, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

சிதம்பரம் பெரிய அறிவு ஜீவியாயிற்றே.. வழக்கு பற்றித்தானே பேசக் கூடாது என்றவர், பத்திரிகையாளர்களை அழைத்து பிரதமர் மோடி மீது புழுதி வாரி இறைத்துள்ளார். நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று கண்ணீர் வடிக்கிறார்.

ஊழல் வழக்கில் கைதாகி, வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது இன்றைய பொருளாதார நிலை பற்றி பேச ப.சிதம்பரத்திற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் நான் அமைச்சராக சிறப்பாக பணியாற்றியுள்ளேன் என்று சந்தடி சாக்கில் குறிப்பிடுகிறார். ‘நான் நிரபராதி’ என்று சொன்னாலே நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்.

சுதந்திரம் பெற்றது முதல் 50 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி செய்த அலங்கோலத்தை சீர்செய்யவே பல ஆண்டுகள் ஆகும் என்றவர், ப.சிதம்பரத்தை தண்டனைக் கைதியாக்கி சிறைக்கு அனுப்பினால் மட்டுமே ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com