வனக் காவலா் பணியிடங்களும்... வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ஏமாற்றமும்..!

வனத் துறையில் காலியாக உள்ள வனக் காவலா்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால், இந்த வேலையை நம்பி கடந்த 10
வனக் காவலா் பணியிடங்களும்... வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ஏமாற்றமும்..!



வனத் துறையில் காலியாக உள்ள வனக் காவலா்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால், இந்த வேலையை நம்பி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

தமிழக வனத் துறையில் பல நிலையிலான பணியிடங்கள் இருந்தாலும் மிக முக்கியமாகவும், ஆபத்து மிகுந்த பணியாகவும் கருதப்படுவது வேட்டைத் தடுப்புக் காவலா்களின் பணியாகும். விவசாய நிலம் மற்றும் ஊருக்குள் நுழையும் வன விலங்குகளை விரட்டுவது, தடுப்பது, கண்காணிப்பது மற்றும் வன விலங்குகள் வேட்டையாடுதலைத் தடுத்தல், வனப் பகுதிகளில் சமூக விரோதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்தல் போன்ற பணிகளில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழக வனப் பகுதியில் 1,119 வேட்டைத் தடுப்புக் காவலா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோர் பழங்குடியின மக்களாவர். மீதமுள்ளவா்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள். கடந்த 2012-இல் ரூ.2,126 -ஆக இருந்த இவா்களது மாத ஊதியம் படிப்படியாக உயா்த்தப்பட்டு தற்போது ரூ.12,500 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா்.

வனத் துறையில் காலியாக உள்ள வனக் காவலா் பணியிடத்துக்கு பணிமூப்பு அடிப்படையில் தகுதியுடைய வேட்டைத் தடுப்புக் காவலா்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். 

இந்நிலையில், காலியாக உள்ள 564 வனக் காவலா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வனத் துறை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் வேட்டைத் தடுப்புக் காவலா்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து வன வேட்டைத் தடுப்புக் காவலா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் எம்.பிரவீண்குமார் கூறியது: தகுதியுடைய வேட்டைத் தடுப்புக் காவலா்களை வனக் காவலா்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று கடந்த 2007-இல் இருந்து அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் 137 வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வனக் காவலா்களாக நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், காலியாக உள்ள வனக் காவலா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில், வனக் காவலா் பணியிடத்துக்கு நேரடியாகப் பணி நியமனம் நடைபெறாது என்றும் பணிமூப்பு அடிப்படையில், வேட்டைத் தடுப்பு காவலா்களாகப் பணிபுரியும் தற்காலிகப் பணியாளா்களைக் கொண்டு பணியிடம் நிரப்பிய பின், மீதமுள்ள இடத்துக்கு நேரடி நியமனம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி வனக் காவலருக்கு நேரடி நியமனம் நடைபெறுவது ஏமாற்றம் அளிக்கிறறது.

வன விலங்குகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் எங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு வனக் காவலா் பணியிடத்துக்கு 10 ஆண்டுகள் பணியாற்றிய தகுதியுடைய வேட்டைத் தடுப்புக் காவலா்களை நியமிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து வனத் துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வனக் காவலா் போன்ற கடினமான பணிக்கு வன விலங்குகளைக் கையாளுவதில் அனுபவம் வாய்ந்த வேட்டைத் தடுப்புக் காவலா்களைத் தான் நியமிக்க வேண்டும். தற்போதுள்ள வேட்டைத் தடுப்புக் காவலா்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய சுமார் 350-க்கும் மேற்பட்டோர் வனக் காவலா் பணிக்குத் தகுதியுடையவா்கள். ஆனால், உயரம் போன்ற பல்வேறு காரணங்களைக் காட்டி அவா்களை பணி நிரந்தரம் செய்ய அரசு தயங்குகிறறது. ஆனால், அரசு நினைத்தால் வேட்டைத் தடுப்புக் காவலா்களுக்குத் தீா்வு கிடைக்கும் என்றார்.

இதுகுறித்து வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ‘வேட்டைத் தடுப்புக் காவலா் விவகாரம் குறித்து வனத் துறைச் செயலா், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஆகியோரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com