தலைமை தலையசைத்தால் 24 மணி நேரம் கூட கமல்நாத் அரசு தாங்காது: ம.பி. எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை

பாஜக தலைமை தலையசைத்தால் 24 மணி நேரம் கூட கமல்நாத் அரசு தாங்காது என மத்தியப்பிரதேச எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவா
தலைமை தலையசைத்தால் 24 மணி நேரம் கூட கமல்நாத் அரசு தாங்காது: ம.பி. எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை


பாஜக தலைமை தலையசைத்தால் 24 மணி நேரம் கூட கமல்நாத் அரசு தாங்காது என மத்தியப்பிரதேச எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கர்நாடகத்தில், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ பாஜகவின் திரைமறைவு நடவடிக்கைகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அடுத்ததாக மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடலாம் என்று கூறப்படும் நிலையில், அந்த மாநில காங்கிரஸ் அரசுக்கு பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தது அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் குற்றத் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா நேற்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. 230 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் 121 எம்எல்ஏக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு கூடுதலாகும். அப்போதுதான், பாஜக எம்எல்ஏக்கள் நாராயண் திரிபாதி, சரத் கோல் ஆகியோர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது தெரியவந்தது.

மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவர் ஆதரவு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எம்எல்ஏக்கள் இருவரும் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள்தான். சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், பாஜகவுக்கு கட்சி மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத் கூறுகையில், காங்கிரஸ் அரசு மைனாரிட்டி அரசு என்று பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. எங்கள் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்போது பாஜக எம்எல்ஏக்கள் இருவர் எங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்றார்.

இந்நிலையில், கர்நாடகத்தில் இருந்த அரசியல் சூழ்நிலையைக் காட்டிலும் மத்தியப்பிரதேசத்தில் மிக மோசமாக இருக்கிறது. கூட்டணி அரசு என்பது சித்தாந்த ரீதியாகவோ, கொள்கை அடிப்படையிலோ இல்லை. பேராசையின் அடிப்படையில் இருக்கிறது.

கூட்டணியில் உள்ளவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள். இதுபோன்ற மோசமான சூழலில்தான் கமல்நாத் அரசு உள்ளது. கமல்நாத் அரசு 7 மாதங்கள் நீடித்திருப்பதே பெரிய விஷயமாக உள்ளது. 

பாஜகவின் கொள்கைகள், செயல்பாடுகள் ஈர்த்து வருவதால் எங்கள் கட்சியில் வந்து ஆர்வத்துடன் இணைந்துவருகிறார்கள். இதேபோன்று மத்தியப்பிரதேசத்திலும் எம்எல்ஏக்கள் வந்து இணைந்தால் நாங்க என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியவர், பாஜவின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தலைமை தலையசைத்துவிட்டால், அடுத்த 24 மணி நேரம் கூட கமல்நாத் அரசு தாங்காது என கோபால் பார்கவா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மத்தியப்பிரதேச பேரவை 231 உறுப்பினர்களை கொண்டது. இதில் பெரும்பான்மைக்கு 116 உறுப்பினர்கள் தேவை. காங்கிரஸ் கட்சிக்கு 114 உறுப்பினர்களும், சமாஜ்வாதி கட்சியின் 2 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் 1 உறுப்பினர், 1 சுயேட்சை உறுப்பினர் ஆதரவு என 121 உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. பாஜக 108 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. 

2019 மக்களவைத் தேர்தலில் 29 தொகுதிகளில் 28 இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆளும் அதிகாரத்தில் காங்கிரஸ் இருந்தாலும் 1 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com