21-இல் ராஜீவ் காந்தி நினைவு ஊர்வலம்: கே.எஸ்.அழகிரி
By DIN | Published On : 18th May 2019 12:23 AM | Last Updated : 18th May 2019 12:23 AM | அ+அ அ- |

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மே 21-ஆம் தேதி அமைதி ஊர்வலம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ராஜீவ் காந்தியின் 28-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மே 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அமைதி ஊர்வலம் நடத்த வேண்டும். ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வட சென்னை, தென் சென்னை, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக சென்னையில் நடைபெறும் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் நானும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், எம். கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்கிறோம்.
திருச்சியில் நடைபெறும் அமைதி ஊர்வலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், மதுரையில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும், வேலூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலுவும், தேனியில் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பங்கேற்க உள்ளனர் என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.