மதுரை தொகுதிக்கான தேர்தல் ரத்து கோரிய மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து
மதுரை தொகுதிக்கான தேர்தல் ரத்து கோரிய மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி


புது தில்லி: மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அத்தொகுதி சுயேச்சை வேட்பாளர் கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. 

இந்த மனு தொடர்பாக வழக்குரைஞர் ஜெய சுகின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோ கோய் தலைமையிலான அமர்வில் கடந்த 8-ஆம் தேதி முறையிட்டார். அப்போது, உரிய மனுவை சமர்ப்பிக்குமாறு தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மனுதாரர் கே.கே. ரமேஷ் சார்பில் வழக்குரைஞர் ஜெய சுகின் ஆஜராகி, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை குறிப்பிட்டு, மதுரை மக்களவைத் தொகுதிக்கான தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினார். 

அப்போது நீதிபதிகள், "தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை' எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

பின்னணி: மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதன் மீதான விசாரணையின்போது தேர்தல் ஆணையம், "பணப் பட்டுவாடாவைத் தடுக்க மதுரை தொகுதி மட்டுமன்றி, அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தேர்தல் பறக்கும்படையினர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தது. 

பின்னர் நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் கே.கே. ரமேஷ் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com