மாயாவதி - சோனியா சந்திப்பு இல்லை: எஸ்.சி.மிஸ்ரா தகவல்

பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என அக்கட்சியின் நிர்வாகி எஸ்.சி. மிஸ்ரா
மாயாவதி - சோனியா சந்திப்பு இல்லை: எஸ்.சி.மிஸ்ரா தகவல்

புதுதில்லி: பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என அக்கட்சியின் நிர்வாகி எஸ்.சி. மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பிற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பாஜக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளுடன் இது தொடர்பாக ரகசியப் பேச்சு நடத்தி வருகிறார்.

மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும் 23-ஆம் தேதி அன்றே, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தில்லியில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக ஏற்கெனவே செய்தி வெளியானது. 

சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் மகா கூட்டணி அமைத்து கள முடிவுக்காக காத்திருக்கும் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் மிகுந்த முக்கியத்துவம் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, இன்று திங்கள்கிழமை தில்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதி சந்தித்து பேசயிருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், மாயாவதிக்கு இன்று தில்லியில் எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ திட்டமிடப்படவில்லை எனவும் அவர் லக்னோவில்தான் இருக்கிறார் என அக்கட்சியின் நிர்வாகி எஸ்.சி. மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காத நிலை ஏற்படும்போது, உடனடியாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி ஆட்சி அமைக்க உரிமைகோருவதுதான் காங்கிரஸின் முக்கிய வியூகமாக உள்ளது. ஏனெனில், சில மணி நேரம் கூடுதலாக நேரம் கிடைத்தால் கூட, சில கட்சிகள் பாஜக கூட்டணி பக்கம் சாய்ந்துவிட வாய்ப்பு உள்ளதால், வாக்கு எண்ணிக்கை  நடைபெறும் நாளிலேயே அனைத்து எதிர்க்கட்சிகளையும் தங்களுடன் இணைத்துவிட காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com