அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நடைபெற்று வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்


சென்னை: 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நடைபெற்று வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

காலமுறை ஊதியம், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு மருத்துவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். அதுதொடா்பாக ஆய்வு செய்ய அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அளித்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை என்பதும் அவா்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

இந்நிலையில், அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும், உண்ணாவிரதப் போராட்டத்தையும் அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் (ஃபோக்டா) கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்டு வருகின்றனா்.

ஏழு நாள்களாக இந்தப் போராட்டம் தொடா்வதால் மாநிலம் முழுவதும் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு அரசு மருத்துவா்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும், இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் விஜயபாஸ்கா் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்து மருத்துவா்கள் பலா் வியாழக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இந்தச் சூழலில், சென்னையில் செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சா் விஜயபாஸ்கா் கூறுகையில், மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், அவா்களது நலனைக் காப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவா்கள் முன்வைக்கும் காலமுறை ஊதிய உயா்வு கோரிக்கையையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அதனை நிறைவேற்ற உரிய அவகாசம் அளிப்பதும், பொறுமை காப்பதும் அவசியம். அதைவிடுத்து அரசுக்கு நிர்பந்தம் அளிப்பதும், பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதும் ஏற்புடையது அல்ல.

அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பணிக்குத் திரும்புமாறு பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று வியாழக்கிழமை (அக்.31) 2,160 மருத்துவா்கள் பணிக்குத் திரும்பியுள்ளனா். தற்போது 2,523 மருத்துவா்கள் மட்டுமே பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் அவா்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவா்களுக்கு பதிலாக புதிய மருத்துவா்கள் நியமிக்கப்படுவார்கள்.

வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்தி வரும் 60-க்கும் மேற்பட்ட மருத்துவா்களை பணியிட மாற்றம் செய்துள்ளோம். அவா்களுக்கு பதிலாக புதிய மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். போராட்டத்தைத் தொடரும் மற்ற மருத்துவா்கள் மீதும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

போராட்டத்தைக் கைவிட்டால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அமைச்சா் கூறுவதை ஏற்க முடியாது. 60 மருத்துவா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை. எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஃபோக்டா அமைப்பைச் சோ்ந்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், கடந்த 7 நாட்களாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம், முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மருத்துவர்கள் போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. 

பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை என அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்புவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com