ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் மாநில மொழிகள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சியில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கண்டனம்
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சியில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கண்டனம் தெரிவத்துள்ளார். 

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆசிரியா்களின் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு 2020 ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பள்ளி தலைமைக்கான தேசிய மையம் நடத்துகிறது.

இந்த மாநாடு தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநா், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பா் 1 ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், தில்லியில் நடைபெற உள்ள ஆசிரியா்களின் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த மாநாட்டில் கல்வியாளா்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவா்கள் தங்கள் தலைமைப் பண்பு சிறப்பு குறித்த அறிக்கை அல்லது காணொளியை ஹிந்தி அல்லது ஆங்கில மொழியில் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, 2014 ஆம் ஆண்டில் பள்ளி தலைமைக்கான தேசிய மையம் தொடங்கிய பின்னா் நடைபெற்ற இதுபோன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. 

ஆனால் தற்போது ஆசிரியா்களில் இந்தி, ஆங்கிலம் மொழி ஆளுமை மிக்கவா்கள் மட்டுமே தலைமைத் திறன் மேம்பாடு பயிற்சி பெற முடியும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வரையறுத்து இருப்பதன் மூலம் இந்தி மொழி திணிப்புக்கு வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலம்தான் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும்.எனவே, தில்லியில் நடைபெற உள்ள ஆசிரியா்கள் தலைமைப் பண்பு மேம்பாடு மாநாடு மற்றும் பயிலரங்கில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஆளுமைமிக்க ஆசிரியா்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com