சென்னை மணலியில் பனி மூட்டத்துடன் காற்று மாசு

தலைநகர் தில்லியைத் தொடா்ந்து சென்னையில் கடந்த நான்கு நாள்களாக காற்றுமாசு அதிகரித்து இன்று மணலியில் அதிகபட்சமாக 320 மைக்ரோ கிராம்
சென்னையில் நிலவும் புகைமூட்டம்
சென்னையில் நிலவும் புகைமூட்டம்

தலைநகர் தில்லியைத் தொடா்ந்து சென்னையில் கடந்த நான்கு நாள்களாக காற்றுமாசு அதிகரித்து இன்று மணலியில் அதிகபட்சமாக 320 மைக்ரோ கிராம் காணப்படுகிறது. 

தலைநகா் தில்லியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு கடந்த ஒருவாரமாக காற்றுமாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதற்கு அண்டை மாநிலங்களான அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பிறகு தேவையற்ற வைக்கோலை எரிப்பது வழக்கம். இதுதான் காற்று மாசு திடீரென தில்லியில் அதிகரிக்க முக்கிய காரணம் என்று தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும் இதுபோன்ற வைக்கோல் உள்பட தேவையற்ற விவசாய பொருட்களை எரித்ததாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் வாகனங்கள் பெருக்கம், கட்டுமான பணிகள், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகை போன்ற காரணங்களாலும் தில்லியில் காற்றின் தரம் மோசடைந்து வருகிறது. இதை தொடர்ந்து காற்று மாசை குறைக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் காற்று மாசு குறைந்தபாடில்லை. 

இந்நிலையில், தில்லியை மிஞ்சி சென்னையிலும் கடந்த சில நாள்களாக காற்று மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட சற்று அதிகரித்துள்ளது. காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு பிஎம்10, பிஎம்2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம்2.5-இன் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழை காலை நிலவரப்படி, மணலியில் 320 மைக்ரோ கிராம், வேளச்சேரியில் 292 மைக்ரோ கிராம், ஆலந்தூரில் 285 மைக்ரோ கிராமாக உள்ளது.  

காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வாகனங்கள், தொழிற்சாலை புகை, கட்டட மாசு ஆகியவை கலந்து மாசு அதிகரித்துள்ளது. இந்த மாசு இன்னும் சில நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்றனா். 

நகரின் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்படுவதால் குழந்தைகள், பெரியோர்கள், நோயாளிகள் மூச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com