இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான குருதாஸ் தாஸ்குப்தா(83) கொல்கத்தாவில் இன்று
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான குருதாஸ் தாஸ்குப்தா(83) கொல்கத்தாவில் இன்று வியாழக்கிழமை (அக்.31) காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, கடந்த சில மாதங்களாக இதயம் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், உடல்நலக்குறைவு, வயது மூப்பு காரணமாக கொல்கத்தாவில் வியாழக்கிழை (அக்.31) காலமானர். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

குருதாஸ் தாஸ்குப்தா: வங்காள தேசத்தில் உள்ள பாரிசல் பகுதியில் நிகர்தேவி - துர்க்கா புரோசன்னா தாஸ் குப்தா தம்பதிகள் மகனாக குருதாஸ் தாஸ் குப்தா 1936 நவம்பர் 3 ஆம் தேதி பிறந்தவர்.

பள்ளிக் கல்வி: பள்ளிக் கல்வியை முடித்து, கொல்கத்தா அஷ்தோஷ் கல்லூரியில் எம்.காம் (முதுநிலை வணிகவியல்) பட்டப்படிப்பு முடித்தவர். கல்லூரி மாணவர் பருவத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் என அமைப்புகளில் இணைந்து பொது வாழ்க்கையில் பயணத்தைத் தொடங்கி பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். 

இதன் தொடர்ச்சியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டு, அதன் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க பொதுச் செயலாளராகவும், மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் ஒருங்கிணைந்த, ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு அடித்தளம் அமைத்ததில் முக்கிய பங்காற்றியவர். 

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1985 முதல் 2003 வரை செயலாற்றியவர். மேற்கு வங்க மாநிலம் பான்ஸ்குரா மற்றும் காட்தல் மக்களவைத் தொகுதிகளில் இருந்து, மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டவர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு மற்ற கட்சித் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர். விவசாயத் தொழிலாளர் நிலை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழுத் தலைவராக இருந்துள்ளார்.

மேலும், ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை ஊழல் மீதான விசாரணைக்கு அமைக்கபட்ட நாடாளுமன்றக் குழு உறுப்பினர் என பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை செலுத்தியவர்.

மேற்கு வங்க மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் பொறுப்பில் பணியாற்றியவர். கடந்த 1965 ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஜெயசிரி தாஸ் குப்தாவை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு மனைவியும், ஒரே மகளும் உள்ளனர். அவர்கள் கொல்கத்தா பவானிபூரில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com